Arts & Entertainment

அவுஸ்திரேலியா: சுபசிறி கந்தையா – ஆங்கில மேடையில் ஒளிரும் ஒரு தமிழ் தாரகை

சிவதாசன்

நான் வெள்ளையாக இல்லை என்பதற்காக வருந்தியதுண்டு. இது எவ்வளவு மடத்தன்மானது என்பதை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன். நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கிறேன் என்ற அந்த தனித்துவமான உணர்வுதான் என்னிடமுள்ள சிறந்த அம்சம் என்பதை நினைத்து இப்போது நான் புளகாங்கிதமடைகிறேன். எனது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மிகவும் நேசிக்கிறேன்.

சுபசிறி கந்தையா

புலம்பெயர் நாடுகளில் பெரும்சமூகங்களின் பாரம்பரிய கலை இலக்கிய முன்னெடுப்புகளில் பங்குபற்றும் தமிழர்கள் வெகு குறைவு. எனக்குத் தெரிய இங்கிலாந்தின் இலக்கிய வட்டத்தில் பிரபலமான ‘The Big Girl’ என்ற நூலை (சிறுகதைத் தொகுப்பு) எழுதிய அழகு சுப்பிரமணியம் தமிழருக்குப் பெருமை சேர்த்தவர். ஆனால் பெரும் ஆடலரங்குகளில் வரலாற்று மற்றும் இசை நாடகங்களில் நடித்துப் பெருமை சேர்த்தவர்கள் எனக் கூறுவதற்கு இதுவரை எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அதை இப்போது தகர்த்திருக்கிறார் சுபசிறி கந்தையா.

Shubshri Kandiah’s Cinderella is more modern, empowered woman than the fairytale version.
Shubshri Kandiah’s Cinderella is more modern, empowered woman than the fairytale version.CREDIT:STEVEN SIEWERT

பெரும்பாலோருக்கு எட்டாத கனியாகவிருக்கும், மிகவும் சவால்களைக் கொண்ட, நுழைவதற்கே மிகவும் சிரமமான, ஆங்கில இசை நாடக அரங்குகளில் தனக்கென்று தனியிடமொன்றைப் பிடித்து அதைக் காப்பாற்றியும் வருகிறார் சுபசிறி. தற்போது றீஜெண்ட் தியேட்டரில் அரங்கேறும் றொட்ஜெர்ஸ் மற்றும் ஹம்மெற்ஸ்டீனின் தேவதைக் கதையான ‘சிண்டெரெல்லா’ வில் எல்லா என்ற பாத்திரத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

வால்ட் டிஸ்னியின் சித்திரக்கதைகளில் வெள்ளைத் தோலும், பொன் முடியுடனும் வரும் அழகிய இளவரசி, தேவதை ஒன்றின் உதவியுடன் தன் அடிமை வாழ்வை உதறித்தள்ளிவிட்டுத் தனது ஆதர்ஷ இளவரசனுடன் விட்டு விடுதலையாகுவதைப் பார்த்து பலர் பரவசப்பட்டிருக்கிறோம். மேற்கத்தைய நாடகங்களில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் இப்படியான வார்ப்பட (stereotype) வகையானவைதான். அதை உடைத்து நவீன, பாரதி கண்ட புதுமைப் பெணணின் மனோபாவத்துடன், இதர கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் பாத்திரப் படைப்புடன் உருவாக்கப்பட்ட நவீன ‘சிண்டெரெல்லா’ வாக வலம்வருகிறார் சுபசிறி. கொடுமையான மாற்றாந்தாய், அன்பான வளர்ப்புத்தாய், பூசணிக்காய் வண்டி, கண்ணாடிச் செருப்பு இத்தியாதிகளில் மாற்றம் எதுவுமில்லாது கதை சிதைக்கப்படாமல் பாத்திரங்களில் மட்டுமே புதுமைகளைச் செய்து அரங்கேற்றப்படுகிறது இந்த ‘சிண்டெரெல்லா’. இதில் ‘எல்லா ‘ பாத்திரத்தில் நடிக்கிறார் சுபசிறி.

20 ஆம் நூற்றாண்டில் அரங்கேறிச் சக்கை போடு போட்ட பல இசை நாடகங்கள் எல்லாம் மேற்கில் உருவாகியவைதான். உதாரணத்துக்கு சில: The Wizard of Oz (1939), Mary Poppins (1964), All That Jazz (1979), Singin’ in the Rain (1952) , Fiddler on the Roof (1971), West Side Story (1961), Gypsy (1962), The Sound of Music (1965). அதற்காக இதர கலாச்சாரங்களில் இவை அரங்கேறவில்லை என அடித்துச் சொல்லிவிட முடியாது. நமது பாரம்பரிய நாட்டுக்கூத்துகளும், இதிகாச நாடகங்களும் இசை நாடக வகைக்குள் அடங்குவைதான். அவையும் தமக்கே உரித்தான வார்ப்பட பாத்திரங்களைக் கொண்டிருந்தவை தான். கறுப்பு உருவமும், இரத்தம் கசியும் கண்களும், சுருண்ட முடிகளுமுடைய இராவணனை பொன்மேனி இராமன் வதம் செய்யும் பாத்திரப் படைப்பை உருவாக்குபவர்கள் வெள்ளையர்களல்ல, நம்மவர்கள் தான். ஆனாலும் ஜனரஞ்சகப் படுத்தப்பட்ட மேற்கத்தைய மேடைகளில் சுபசிறி போன்றவர்கள் மேற்கொள்ளும் புரட்சிகள் வேறு பரிமாணம் கொண்டவை. இதுபற்றிக் கூறும்போது ” ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு வெள்ளைத் தோல் இல்லாத ஒருவரால் ‘எல்லா’ பாத்திரத்தில் தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை. ஒருவருடைய தோல் நிறம் பொருந்தவில்லை என்பதற்காக அவரது திறமைகளை மறுதலித்துவிட முடியாது” என்கிறார் சுபசிறி.

*****

சுபசிறி (சுப்சிறி) கந்தையா அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநிலத்தில், ராஜ் (தாய்), குமார் (தந்தை) ஆகிய மலேசியத் தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்த ஒரே மகள். பெற்றோர்கள் இருவரும் வாலிப வயதுகளில் அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து அங்குதான் சந்தித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். முழுநேர வேலைகளில் பெற்றோர் ஈடுபட்டதால் அவரைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்வது முதல், முருங்கைக்காய் கறியுடன் மதிய உணவைக் கொண்டு வந்து தருவதுவரை அவரை வளர்த்தது அவரது தாத்தா கந்தையா. பாடசாலையில் இதர பிள்ளைகளோடு அமர்ந்து உண்பதை சுபசிறி வெறுப்பவர். சுபசிறியின் தாய் தந்தை இருவரும் தாவர பட்சணிகள். ஆனால் சுபசிறியும் மாமிசத்தைத் தவிர்ப்பவர். பாடசாலை முடிந்ததும் சிற்றுண்டியைத் தந்துவிட்டு பலே நடனப்பயிற்சி, நீச்சல் பயிற்சி என அழைத்துச் செல்வார் தாத்தா. மொழி, கலாச்சாரம் மீதான பற்று அவரில் இறுகப்பதிவதற்கு தாத்தா கந்தையாவே காரணம் என்கிறார் சுபசிறி.

பேர்த் மாநிலத்திலுள்ள ‘இந்திய’ சமூகத்தின் நடவடிக்கைகளில் ஆர்வத்தோடு பங்கு கொள்பவர்கள் சுபசிறியின் பெற்றோர். இளமையில் ‘இந்திய’ கலை நிகழ்ச்சிகள், நடனங்கள் என சுபசிறியின் கலாச்சார ஈடுபாடுகளுக்கான தயாரிப்புகளை பெற்றோர் செய்து தந்தனர்.

வகுப்பில் இருந்த ஒரே ஒரு வெள்ளையரல்லாத மாணவி சுபசிறிதான். ஏனைய மாணவர்களும் இதை உணர்ந்திருந்தார்கள். தன்னைச் சுற்றிலும் தன்னைப்போல் இல்லாதவர்கள் சூழ்ந்திருப்பது சுபசிறிக்கு இலகுவாக இருப்பதில்லை. ஆரம்பத்தில் இது அவருக்கு மிகவும் சங்கடத்தைக் கொடுத்தது. “நான் வெள்ளையாக இல்லை என்பதற்காக வருந்தியதுண்டு. இது எவ்வளவு மடத்தனமானது என்பதை நினைத்து இப்போது நான் வருத்தப்படுகிறேன். நான் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கிறேன் என்ற அந்த தனித்துவமான உணர்வுதான் என்னிடமுள்ள சிறந்த அம்சம் என்பதை நினைத்து இப்போது நான் புளகாங்கிதமடைகிறேன்” என்கிறார் சுபசிறி. இதைக்கூறும்போது அவரது கண்கள் பனிக்கின்றன. “எனது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் நேசிக்கிறேன்” என்கிறார் சுபசிறி.

*****

சுபசிறியின் திறமைகளை அவதானித்த அவரது ஆரம்பப் பாட்சாலை ஆசிரியரின் ஆலோசனைக்கிணங்க பெற்றோர்கள் அவரைப் பாடற் பயிற்சிகளுக்கு அனுப்பினார்கள். பத்து வயதாக இருக்கும்போது பெற்றோர்கள் அவரை முதன் முதலாக இசை நாடக நிகழ்வொன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்குதான் அவரது எதிர்கால விருட்சத்துக்கான வித்து இடப்பட்டது. “நானும் அதைச் செய்ய வேண்டும்”. இடைவேளையின்போது அவர் அந்த முடிவை எடுத்துவிட்டார்.

Shubshri Kandiah and Ainsley Melham standing in front of a lavish staircase
Photograph: © Hugh StewartShubshri Kandiah (Ella) and Ainsley Melham (Prince Topher)

பலே நடன வகுப்புகளும், பாடற் பயிற்சிகளும் தொடர்ந்தன. மேற்கு அவுஸ்திரேலிய ஆடரங்குப் பள்ளியில் இணைந்து அரங்காடல் பயிற்சிகளைக் கற்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இப்பள்ளிதான் பல உலகப் பிரபல நாட்டியப் பேரொளிகளை உருவாக்கியிருந்தது. இருப்பினும் குயீன்ஸ்லாந்து இசையரங்கக் கல்லூரியில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. வருமானமீட்டக்கூடிய தொழில் இதுவல்லவென்பது பெற்றோர்களுக்கு வருத்தத்தைத் தந்ததாயினும் சுபசிறி தனது முயற்சியில் விடாப்பிடியாக இருந்து கல்வியை முடித்துக்கொண்டார்.

சுபசிறி பங்கேற்ற முதலாவது நிகழ்வு குயீன்ஸ்லாந்து ஒப்பெறாவின் தயாரிப்பில் உருவான The Pearl Fishers. பேசாத, பாடாத ஒரு சிறிய பாத்திரம் அது. இருப்பினும் அது சுபசிறியின் தன்னம்பிக்கைக்கு எடுத்துக் கொடுத்த முதல் அடி. மேடைதான் தனக்கான உலகம் என்பதை சுபசிறி தீர்மானித்துக்கொண்ட முதல் நிகழ்வு அது.

2017 இல் சுபசிறி தனது பட்டப்படிப்பை முடித்து வெளியேறினார். பல ஒத்திகைகளுக்குச் சென்று பார்த்தார். எதிர்பார்த்தது போல சந்தர்ப்பங்கள் கைகூடவில்லை. தனது தோல் இத் துறைக்குப் பொருத்தமானது அல்ல என நினைத்துக் கவலை கொண்டார். பூக்கடையில் பூ விநியோகம் செய்வது முதல் சிறிய வேலைகளில் ஈடுபட்டார். குழந்தைகளின் கொண்டாட்டங்களில் The Little Mermaid போன்ற இசை நிகழ்ச்சிகளைச் செய்துபார்த்தார். குழந்தைகள் கவனிப்பாதாகவே இல்லை. தலைக்கு சிவப்பு முடியை அணிந்து தான் ‘வெள்ளை’ எனப் பாசாங்கு செய்து பார்த்தார். ஊஹூம். பிள்ளைகள் கண்டுகொள்ளவேயில்லை.

மேற்கு நாடுகளின் இசை நாடகப் பாரம்பரியத்தில் வெள்ளைத்தோல் அல்லாதவர்களுக்கு கதவுகள் நிரந்தரமாகப் பூட்டப்பட்டு இருப்பதென்றே சுபசிறி நினைத்து வந்தார். பல முன்னணிப் பாத்திரங்கள் வெள்ளையர்களுக்கு மட்டுமென்றே உருவாக்கப்பட்டன. அமெரிக்க நடிகர்கள் சமத்துவ அமைப்பு 2013-2015 இல் மேற்கொண்ட ஆய்வில், புறோட்வே நாடகங்களில் 9 வீதமான பாத்திரங்களே வெள்ளியரல்லாதோருக்கு ஒதுக்கப்பட்டன எனக் கண்டுபிடிக்கப்பட்டது. 2018-2019 இல் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு ஆய்வில் புறோட்வே நடிகர்கள், இயக்குனர்களில் 80 வீதமானோர் வெள்ளையர்கள் எனக் காணப்பட்டுள்ளது.

*******

ஒருவாறு அதிர்ஷ்டம் எட்டிப் பார்த்தது. டிஸ்னியின் அலாடின் (Aladdin) நாடகத்தில் ஜஸ்மின் இளவரசிக்கான பாத்திரம் கிடைத்தது. இப் பாத்திரத்தில் நடித்த பெண் விலகுவதாகவும் அதில் நடிப்பதற்கு சந்தர்ப்பம் உள்ளதெனவும் அழைப்பு வந்தது. இதற்கு முன்னர் பல தடவைகள் இச்சந்தர்ப்பம் அவருக்கு மறுக்கப்பட்டிருந்தது. 2019 இன் பிற்பகுதிவரை சுபசிறி ‘இளவரசி ஜஸ்மினாகப்’ பவனி வந்தார். பின்னர் துரதிர்ஷ்டம் கோவிட் வடிவில் வந்தது. கலை, பொழுதுபோக்குத் தொழில் படுத்துக்கொண்டது. மீண்டும் உணவகங்களில் உபசரிப்புப் பணி, கல்வி போதனை என்று சிற்றுழைப்புகள் உதவிசெய்தன.

2021 முடிவில் Fangirls என்ற நிகழ்ச்சியில் பிரியன்னா என்ற பாத்திரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நவீன சிண்டெரெல்லா நிகழ்வு அக்டோபரில் ஆரம்பமாக இருந்தது. கோவிட் காரணமாக அதுவும் பின்போடப்பட்டுவிட்டது. ஆனாலும் கோவிட் பெற்றுத் தந்த விடுமுறை காலம் வேறு வழிகளில் உதவியாகவும் இருந்தது. இக்காலத்தில் அவர் பிறிஸ்பேனில் ஒரு குடியிருப்பை வாங்கித் தனிக்குடித்தனம் அமைத்துக்கொண்டார். வாழ்க்கையும் சிண்டெரெல்லா மேடையும் ஒன்றுகொன்று சவாலாக இருந்தாலும் அவரது கனவுப் பயணம் மகிழ்ச்சியாகவே நகர்ந்தது. பெற்றோருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அங்கு பார்வையாளரில் ஒருவராக அம்மா என்றுமே இருப்பார்.

தற்போது, 27 வயதில், சுபசிறி “மேற்கத்தைய இசை நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்கும் முதலாவது தென்னாசிய பெண்” என்ற கெளரவத்தைப் பெறுகிறார்.

ரொட்ஜெர்ஸ் மற்றும் ஹம்மெர்ஸ்டீன் தொலைக்காட்சிக்கு என எழுதிய ‘சிண்டெரெல்லா’ இசை நாடகம் முதன் முதலாக அமெரிக்க தொலைக்காட்சியில் 1957 இல் ஒளிபரப்பப்பட்டது. ஜூலி ஆண்ட்றூஸ் இதில் ‘எல்லா’ பாத்திரத்தில் நடித்திருந்தார். 100 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் மட்டும் இந் நிகழ்ச்சியைப் பார்த்திருந்தார்கள். ‘சிண்டெரெல்லா’ என்ற மூலக் கதையை பிரெஞ்சு எழுத்தாளர் சார்ள்ஸ் பெரோ 1697 இல் எழுதியிருந்தார். இப்போது பலரும் அதன் தழுவல்களை நாடகமாக்கி வருகிறார்கள். எல்லாமே மேற்கு நாடுகளில் தான். அதனால் கருந்தோல் பாத்திரங்கள் புறக்கணிப்புக்குள்ளாகி வந்தன. சுபசிறி அதை உடைத்த முதலாவது தென்னாசியப் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார். அவர் ஒரு தமிழ்ப் பெண் என்பதனால் முழுத் தமிழுலகமுமே பெருமை கொள்கிறது. (மூலம்: அமாண்டா டண் / ‘தி ஏஜ்’)