அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி தீ மூட்டித் தற்கொலை

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கைக்கு முடிவு ஏதும் கிடைக்காமையால் நீண்டகாலமாக விரக்தியுற்றிருந்ந்த நிலையில் கோணேஸ்வரன் கிருஷ்ணைள்ளை என்னும் 38 வயதுடைய தமிழர் ஒருவர் கடந்த வெள்ளியன்று (20) தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இலங்கையின் போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டுக்குத் தப்பியோடி அங்கு அகதிகளாக வாழும் பெற்றோரோடு சிறிய வயதில் கோணேஸ்வரன் தமிழ்நாடு சென்றிருந்தார். சில காலம் அங்கு வாழ்ந்த அவர் அங்கிருந்து கடல் மூலம் 2013 இல் அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்தார். இப்படிக் கரையொதுங்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலருக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்படுவது வழக்கம். பெரும்பாலானவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
5 வருடங்கள் நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்துவந்த அவரது தற்காலிக பாதுகாப்பு விசா விண்ணப்பம் 2018 இல் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனால் எந்த நாளும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் கோணேஸ்வரன் இருந்துவந்தார் எனக் கூறப்படுகிறது.
இறந்த கோணேஸ்வரனுக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
அவுஸ்திரேலியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளும், இதே காரணங்களுக்காகத் தம்மைத் தாமே தீ மூட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கோணேஸ்வரனுக்கு முன்னர் லியோ சீமான்பிள்ளை என்றொரு தமிழ் அகதி, மே 31, 2014 இல் தீ மூட்டித் தற்கொலை செய்திருந்தார்.

அப்போதைய குடிவரவு அமைச்சரும் தற்போதைய பிரதமருமான ஸ்கொட் மொறிசன், அகதிகள் விடயத்தில் மிகவும் கடும்போக்கு கொண்டவர். தனது அரசு இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும், ஈழத்தமிழ் அகதிகள் அனைவருமே திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கலாம் எனவும் அவர் தொடர்ந்தும் கூறிவருபவர். ஒரு படகில், பல சிரமங்கள் மத்தியில் வந்து கரையொதுங்கிய 79 தமிழர்களையும் திருப்பி அனுப்பியவர். ஈழத் தமிழ் அகதிகள் கடல் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சிக்கக்கூடாது என்பதற்காக யாழ்ப்பாணத்தில் தெருவோரப் பதாகைகளில் விளம்பரங்கள் செய்பவர். எனவே அவரது அரசாங்கத்தில் கருணை என்று எதையும் எதிர்பார்க்க முடியாது.
2013 இற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மூலம் வந்திறங்கிய சிலருக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட்டது. 2013 இற்குப் பின்னர் இப்படிக் கரையொதுங்குபவர்களை பப்புவா நியூ கினி நாட்டிலும், நவுறு என்னும் சிறு தீவிலும் தடுத்துவைப்பதற்கான ஒழுங்குகளை அவுஸ்திரேலிய அரசு செய்துள்ளது. இத் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும், தகொலை செய்துகொண்டுமுள்ளார்கள்.