கடி-காரம் | அவர்கள் சொல்கிறார்கள் – நாமும் சொல்கிறோம்

பதவி விலகினாலும் மஹிந்தவே மீண்டும் பிரதமர்

“மஹா சங்கத்தின் அழுத்தத்தினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியைத் துறக்கவேண்டி ஏற்பட்டாலும் அடுத்து அமையப்போகும் அரசாங்கத்திற்கும் அவரையே நாம் பிரதமராக நியமிப்போம். அவர்தான் இந்நாட்டின் பிரதமர் என்பதற்கான ஆணையை மக்கள் எப்போதோ வழங்கி விட்டார்கள். அதன்படி , எத்தனை தடவைகள் அகற்றப்பட்டாலும் அவரே தான் பிரதமர்” -பசில் ராஜபக்ச

பண பலத்தினால் குடும்பங்களென்ன இனங்களுக்கிடையேகூட ஒற்றுமையை உருவாக்க முடியுமென நிரூபித்தவர்கள் ராஜபக்சக்கள். அவர்கள் அள்ளி வழங்கும் பதவிகளுக்காகப் பல்டியடிக்க மூவின மக்களும் தயாராக இருக்கும்வரை அவர்கள் தான் ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அமைச்சர்களும். நிச்சயமாக நம்புகிறோம்.

அரசிலமைப்பு சாசனத்தைச் சந்தி சந்தியாக வைத்து எரிப்போம்

“தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் பொதுமக்களைத் தெருத் தெருவாகச் சாகவிடுவார்களேயானால் இங்கு பாராளுமன்றம், நிறைவேற்று அதிகாரம், நீதி பரிபாலனம் என்று எதுவுமே இருக்க முடியாது. இவர்கள் தம்மை நிலைநிறுத்துவதற்காகப் பாவிக்கும் அந்த அரசியல் சாசனத்தை நாங்கள் சந்தி சந்தியாக வைத்து எரிப்போம் – பகோடா ஜதாவன்ச தேரர்

அனுமான் எரித்த நாட்டில் எரிப்பது ஆச்சரியமான ஒரு விடயமல்ல. மக்களின் கைகளில் தாமரை மொட்டுக்களைத் திணித்து ராஜபக்சக்களுக்கு வாக்களிக்கச் செய்த மகா சங்கிகள் தமது கைகளில் அடுத்து எடுக்கவிருப்பது தீக்குச்சிகள். அவற்றை எடுக்காமல் இருந்தால் அவர்கள் சங்கிகளே அல்ல.

அரசியல்வாதிகள் பீடாதிபதிகளைச் சந்திக்க முடியாது

“நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முகமாக மகாசங்க பீடாதிபதிகள் கொடுத்த ஆறு அம்சப் பிரேரணைக்கு எவரும் இதுவரை பதிலளிக்காமையால் அரசியல்வாதிகள் எவரும் பீடாதிபதிகளைச் சந்திப்பதை இனிமேல் நாம் அனுமதிக்கப் போவதில்லை” – மல்வத்தை பீடாதிபதி சிறி சுமங்கள தேரர்.

உலகம் முழுவதுமே இப்போது zoom வழியாகத் தொடர்பாடக்கூடிய நிலையில் பீடாதிபதிகள் மட்டும் எம்மட்டு? “நேரில் சந்திக்க அவர்களை அனுமதிக்க மாட்டோம்” எனச் சங்கம் உண்மையைச் சொல்வதை உளமாரப் பாராட்டுகிறோம்.

ஹரின் ஃபெர்ணாண்டோ தனது வாயைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்

“பொதுவெளியில் பேசும்போது திரு ஃபெர்ணாண்டோ தனது வார்த்தைப் பிரயோகங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டத்தில் அவர் நடந்துகொண்ட விதத்தால் எரிச்சலுற்ற பலர் வெளிநடப்புச் செய்தமையும் எனக்குத் தெரியும். இப்படியான நடத்தைகள் கட்சி அங்கத்தவர்களிடையேயுள்ள ஒற்றுமையைப் பாதிக்கும். – சரத் ஃபொன்சேகா.

கட்சிக்குள் பலராலும் வெறுக்கப்படும், தனது பொறுப்பற்ற அறிக்கைகளினால் கட்சிக்கு அவப்பெயரைப் பெற்றுத்தந்துகொண்டிருக்கும் ஒருவர் மற்றவர்களுக்க்ப் போதிக்கும் ஞான அந்தஸ்தைப் பெற்றிருப்பது வரவேற்கத் தக்கது. எந்த போதிமரத்தின் கீழ் அவர் அதைப் பெற்றார் என அறிய நாமும் ஆவலாயுள்ளோம்.

எட்டாம் வகுப்புக்கூடப் படிக்காதவர்களே ஜனாதிபதியின் ஆலோசகர்கள்

“நாடு மிக மோசமான பொருளாதாரப் பிரச்சினைக்குள் தள்ளப்பட்டமைக்குக் காரணம் ஜனாதிபதி தனது ஆலோசகர்களாகப் படிக்காதவர்களைத் தேர்ந்தெடுத்தமையே. குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ஆதரவாளர்களில் பலர் எட்டாம் வகுப்புக்கூடப் படித்திராதவர்கள். – சுதந்திரக்கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகரா

இவ்விடயத்தில் தயாசிறியின் அறியாமை குறித்து நாம் மிகவும் வேதனையடைகிறோம். அவர் எத்தனையாம் வகுப்புவரை படித்திருக்கிறார் என்பதோ அல்லது அவரும் சட்டக்கல்லூரி சென்றிருந்தால் அது ராஜபக்சக்கள் சென்ற அதே சட்டக்கல்லூரி தானா என்பதையும் அறிய ஆவல். உள்ள அத்தனை ராஜபக்சக்களிலும் கோதாபய ஒருவரே “நான் மட்டுமே குடும்பத்தில் முட்டாள்” என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டவர். அவர் எட்டாம் வகுப்புக்கு மேல் எட்டிப் பார்த்ததில்லை. அவர் எப்படித் தன்னைவிட அதிகம் படித்தவர்களை ஆலோசகர்களாக நியமிப்பார்? இதை உணரவேண்டுமானால் ஜயசேகரா தனது பத்திரங்களை எட்டாம் வகுப்புக்குத் தரம் குறைத்துக்கொள்ளவேண்டும் என நாம் தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.