அவசரகாலப் பிரகடனம் மூலம் ஜனாதிபதி அதிகாரங்களைக் குவித்துள்ளார் – தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
நுகர்வோரைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி மேலும் அதிகாரங்களைத் தன்னகப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி எனத் தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனி, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களைப் பதுக்குவதன்மூலமாக உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் செயற்கை விலையேற்றத்துக்குள்ளாவதைத் தடுக்கவென ஜநாதிபதி ‘உணவு அவசரகாலப் பிரகடனம்’ ஒன்றைச் செய்திருந்தார். இவ்விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேறு சட்டங்கள் இருக்கும்போது ஜனாதிபதி இந்த அவசரகாலப் பிரகடனத்தைச் செய்திருக்கத் தேவையில்லை எனத் திசநாயக்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 17 வது பிரிவின் கீழ் மேற்கொண்டிருக்கக்கூடிய இன் நடவடிக்கையை 2 வது பிரிவின் மூலம் கையாள்வது தனக்கு மேலதிக அதிகாரங்களை எடுத்துக்கொள்வதற்காகவே என, அவசரகாலச் சட்டப் பிரகடனம் மீதான பாராளுமன்ற விவாதத்தின்போது அவர் தெரிவித்தார்.
அவசரகாலப் பிரகடனம் மூலம் அவசிய உணவு வழங்கலை உறுதிப்படுத்தவும், சீனி, அரிசி போன்ற பொருட்களுக்கு உச்சவிலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வழங்கவும் ஜனாதிபதி இந்த அவசரகாலப் பிரகடனத்தைப் பாவித்துள்ளார். அதன் பிரகாரம் நாடெங்கும் உணவு பதுக்கல் செய்யப்படுகிறது எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் திடீர் சோதனைகளைச் செய்யும் அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த அதிகாரத்தைப் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 வது பிரிவின் மூலமாகவே செய்திருக்கலாம் எனத் திசநாயக்கா தெரிவித்துள்ளார். 2 வது பிரிவைப் பாவிப்பதன் மூலமாகப் புதிய சட்டங்களை உருவாக்கவும், இருக்கும் சட்டங்களை மீறவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த அவசரகாலச் சட்டத்தின்கீழ் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் தடுக்கபடலாம். நீதிமன்ற உத்தரவின்றி எவரும் அல்லது எவரது வீடுகளும், கடைகளும் சோதனை செய்யப்படலாம். பிடியாணை இல்லாமல் எவரும் எப்போதும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றித் தடுத்துவைக்கப்படலாம்.
“தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பானமை வேண்டுமென்றார், கொடுக்கப்பட்டது. தனக்கு 20 வது திருத்தம் வேண்டுமென்றார் கொடுக்கப்பட்டது. இப்போது நாட்டை ஆள்வதற்குத் தனக்கு அவசரகால அதிகாரங்கள் வேண்டுமென்கிறார் ஜநாதிபதி” எந்று குற்றஞ் சாட்டினர் திசநாயக்க.