Health

அழற்சி (Inflammation) கோவிட் நோயைத் தீவிரமாக்குகிறதா?


அகத்தியன்

கோவிட்-19 நோயின் தீவிரம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. சிலருக்கு அறிகுறிகள் எதையுமே காட்டாமல் இருக்கும் அதே வேளை சிலரின் உயிருக்கே ஆபத்தான நிலையையும் கொண்டுவந்து விடுகிறது. உவ்வொருவரது உடலினதும் ஆரோக்கிய நிலைகளைப் பொறுத்து இந்நோயின் தீவிரம் வேறுபடுகிறது.

SARS-CoV-2 வைரஸ் ஆண்கள், வயது முதிந்தவர்கள், நீரிழிவு வியாதியை உடையவர்கள், அதிகம் உடற் பருமனைக் கொண்டவர்கள், இனச் சிறுபான்மையினர் ஆகியோரை அதிகம் தாக்குகிறது.

இப்பாதிப்புகளின் பின்னால், சுகாதார வசதிகள் கிடைப்பதில் தாமதம், தொற்றுக்களை எதிர்கொள்ளும் பணிகள், வாழிடங்களில் மாசுடைய சூழல் எனப் பல காரணிகள் இருப்பினும், தொற்றுள்ளவர்களின் உடல்கள் தற்பாதுகாப்பு (நிர்ப்பீடனம்) செயற்பாடு காரணமாக உருவாக்கும் அழற்சியே (inflammation) நோயின் தீவிரத்தைத் தீர்மானிக்கின்றது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மேலே குறிப்பிட்ட, நீரிழிவு, உடற் பருமன், வயது, பால் வேறுபாடு ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகள் அனைத்துக்கும் வைரஸினால் குழப்பநிலைக்குள்ளாகும் நிர்ப்பீடனத் தொழிற்பாடே காரணம்.

அழற்சியினால் ஏற்படும் பாதிப்பு

மனித உடலுக்குள் புகுந்த ‘எதிரிகளை’ அழிக்க உடல் தூண்டிவிட்ட ‘பாதுகாப்பு படைகள்’ கட்டுப்பாடற்று தொழிற்படும்போது உடலின் உறுப்புக்களையே அவை தாக்கியழிக்கின்றன. இப் பாதுகாப்பு படைகளை சைற்றோகைன்ஸ் (cytokines) எனவும் அவற்றின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டை ‘சைற்றோகைன் புயல்’ (cytokine storm) எனவும் மருத்துவ சமூகம் அழைக்கிறது. இவற்றினால் உடலுறுப்புகளில் ஏற்படும் பாதிப்பே அழற்சி (inflammation) எனப்படுகிறது. கோவிட் நோயாளிகள் பலரிலும் இப்படியாகப் பாதிக்கப்படும் உறுப்பு சுவாசப் பைகள் (lungs). சுவாசப் பைகள் பாதிக்கப்படும்போது உடலுக்குத் தேவையான உயிர் வாயுவை (oxygen) உள்ளெடுத்தலும், கரியமிலவாயுவை (carbon dioxide) வெளியகற்றலும் சீராக நடைபெறுவதில்லை. அதனால் தான் இந் நோயாளிகளுக்குச் சுவாசக் கருவிகளைப் (ventilators) பொருத்துகிறார்கள்.

‘சைற்றோகைன்ஸ்’ எனப்படும் பாதுகாப்பு படை உடலின் தற்காப்பில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அதன் முன்னணித் தொழிற்பாட்டில் ஒன்று, வைரஸைஇனப்பெருக்கம் செய்யமுடியாமல் செய்துவிடுவது. அதே வேளை, இந்த சைற்றோகைன் இன்னுமொரு வேலையையும் செய்கிறது. தன் பாதுகாப்புக் கடமைகளை அதிகரிப்பதற்காக அது வேறு வகையான ‘பாதுகாப்பு படைகளையும்’ (other immune cells) அழைத்து வருகிறது. (கூலிப் படைகளை அழைப்பது போல்). இச் செயற்பாடு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இல்லாதபோது இரத்தக் குழாய்கள் முதல் பல உடற்பாகங்கள் பாதிக்கப்படுகின்றன. இது தான் அழற்சி எனப்படுகிறது.

இப்படி அழைத்துவரப்படும் மேலதிக பாதுகாப்பு படைகள் பொதுவாக வெண்குருதித் துணிக்கைகள் எனவும், அவற்றில் விசேட சேவைகளைச் செய்யும் ‘மொனோசைட்ஸ்’ (monocytes) மற்றும் ‘மக்றோஃபேஜெஸ் (macrophages) ஆகியனதான் இந்த அதிரடி ‘சைற்றோகைன் புயலை’த் தோற்றுவிக்கின்றன. கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பட்டால் இவை எதிரிகளை இனம் கண்டு உடனேயே அழித்துவிடும் வல்லமை கொண்டவை. அத்தோடு, பாதிக்கப்பட்ட உறுப்புக்களைச் செப்பனிட்டு, வேறு பல உதவிப் படைகளையும் (immune cells) அழைத்துவரக் கூடியவை.

ஆனால் தீவிர கோவிட் நோயாளிகளில் இந்த ‘மொனோசைட்ஸ்’ மற்றும் ‘மைக்றோசைட்ஸ்’ குழப்பநிலைகளுக்குள்ளாகி விடுகின்றன. நீரிழிவு, உடற்பருமனுள்ள கோவிட் நோயாளிகளில் இது மிகவும் மோசமாகிவிடுகிறது.குளுகோசின் (சர்க்கரை) பாதிப்பு

கட்டுப்பாடற்ற நீரிழிவு உடலில் தேவைக்கு மேலான குளுகோசைத் தக்கவைத்துக் கொள்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில், குளுகோஸ் அதிகமாகவுள்ள கோவிட் நோயாளிகளில் மொனோசைற் மற்றும் மக்றோஃபேஜெஸ் ஆகிய வெண்துணிக்கைகள் மிகவும் மோசமான விளைவுகளை உருவாக்குகின்றன எனக் கண்டறிந்துள்ளார்கள்.

கோவிட் நோய்க்குக் காரணமான SRAS-CoV-2 வைரஸ் மனித உடலில் உள்ள கலங்களைத் தொற்றுவதற்கென ஒரு பொறிமுறையொன்றை வைத்திருக்கிறது. முதலில் அது மனிதக் கலத்தை இறுகப்பிடித்துக்கொள்ள வேண்டும். அதற்கென அது கலத்தின் வெளிப்புறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு புரதத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. ACE2 என்று அதற்குப் பெயர். நீரிழிவு வியாதி உள்ளவர்களின் உடம்பில் குளுகோஸ் அதிகமாக இருக்கும்போது அவர்களின் உடலில் இந்த ACE2 வின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் அதைவிட மோசமான இன்னுமொரு நிகழ்வும் அங்கு நடைபெறுகிறது. உடலில் அதிகம் குளூகோஸ் இருப்பவர்களில், வைரஸ்களை அழிக்கவென அழைத்துவரப்பட்ட மொனோசைட் மற்றும் மக்றோஃபேஜெஸ் ஆகிய வெண் கலங்களின் வெளிப்பரப்பிலும் அதிகளவு ACE2 உருவாகிவிடுகிறது. இதனால் வைரஸ் இந்த வெண்கலங்களிலுள்ள ACE2 க்களையும் பற்றிக்கொள்கிறது. தன்னை அழிக்க வந்த காவற்படைகளையே இவ்வைரஸ்கள் தாக்கியழிக்கின்றன.

வெண்கலங்களிலுள்ள இந்த ACE2 புரதத்தைப் பற்றிக்கொண்ட வைரஸ் உள்ளே நுழைந்ததும் இந்த வெண்கலங்களைத் தன் ‘புத்தி சாதுரியத்தால்’ இனப்பெருக்கம் செய்யவைப்பதன் மூலம் மேலும் பல்லாயிரக்கணக்கான வெண்கலங்களை உருவாக்கிவிடுகிறது. இவ்வெண்கலங்கள் (cytokines) தேவைக்குமதிகமாகப் பெருகுவதே ‘சைட்டோகைன் புயல்’ (cytokine storm) என்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் நமது இரத்தத்தில் காணப்படும் தேவைக்குமதிகமான குளுகோஸ் அல்லது ‘சர்க்கரை’. எனவே வைரஸ் தன்னைப் பெருக்கிக்கொள்வதற்குக் காரணமாக அமைவது நாமே தான்.

வைரஸ் இத்தோடு விட்டுவிடவில்லை. வெண்கலங்களைத் தொற்றிய வைரஸ் தன் செயற்பாட்டின் விளைவுகளாக உருவாக்கும் சில் பொருட்கள் சுவாசப்பையின் கலங்களை மிக மோசமாகத் தாக்குகின்றன. அத்தோடு வைரஸைத் தாக்கவரும் லிம்ஃபோசைட்ஸ் (lymphocytes) எனப்படும் கலங்களின் கொல்லும் திறனையும் இந்த வைரஸ்கள் குறைத்துவிடுகின்றன.உடற் பருமன்

உடற்பருமன் அதிகரிக்கும்போது உடலில் குளுகோசின் அளவும் அதிகரிக்கிறது. மேலே குறிப்பிட்டது போலவே இது வெண்கலங்களின் மீதான ACE2 வை அதிகரிப்பதால் சைற்றோகைன் புயல் உருவாகி உடலுறுப்புக்களைத் தாக்குகிறது.

அழற்சியினால் ஏற்படக்கூடிய இதர உபாதைகள்

நீரிழிவு, உடற்பருமன் ஆகிய வியாதிகளால் உடலில் ஏற்படும் அழற்சியைப் போலவே வயது முதிர்ச்சியும் (60 வயதுக்கு மேல்) சிலரில் அழற்சியையும் அது தொடர்பான உபாதைகளையும் உருவாக்குகிறது. இதை முதிர்வழற்சி (inflammageing) என்பார்கள்.

முதிர்வழற்சி என்பது அழற்சியை உண்டாக்கக்கூடிய சைற்றோகைன்கள் (pro-inflammatory cytokines) இரத்தத்தில் அதிகமாக இருப்பது என்பது பொருள். இவ்வுபாதை, பரம்பரையாகவும் வரலாம் அல்லது உடலில் வளரும் பக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகளின் மூலமாகவோ அல்லது உடற்பருமன் காரணமாகவோ ஏற்படலாம்.

பல முதியவர்களில் லிம்ஃபோசைட்ஸ் (lymphocytes) எனப்படும் வெண்கலங்கள் குறைவடைந்து போகின்றன. வைரஸ்களைத் தாக்கியழிக்கும் இஅவை குறைவாக இருக்கும்போது நோய்த் தொற்று விரைவாக ஏற்படுவதற்குச் சாத்தியங்கள் அதிகம்.

ஆண்கள் ஏன் அதிகம் கோவிட் தொற்றுக்கு ஆளாகிறார்கள்?

ஆண்களின் உடற்கலங்கள் பெண்களை விட இலகுவில் வைரஸ் தொற்றுக்குக் காரணமாகின்றன. இதற்குக் காரணம் வைரஸ் கலங்களைப் பற்றிக்கொள்ளப் பாவிக்கும் புரத்மான ACE2, பெண்களைவிட ஆண்களில் அதிகமாக இருப்பதானால் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அத்தோடு மனிதக் கலங்களை வைரஸ் துளைத்து உள்ளே செல்வதைத் துரிதப்படுத்தும் இன்னுமொரு பதார்த்தமான TMPRSS2 எனப்படும் ஒருவகை நொதியம் (enzyme) ஆண்களில் அதிகமாகக் காணப்படுவதும் இன்னுமொரு காரணம்.

ஆண் / பெண் விடயங்களில் கோவிட்-19 பாரபட்சம் காட்டுவதற்குப் புதிதாக ஒரு காரணமுமில்லை. பொதுவாகவே நிர்ப்பீடன விவகாரங்களில் பெண்களில் அது பலமாகவிருக்கிறது என்பது மிகநீண்டகாலமாகக் கருதப்பட்டுவரும் ஒரு விடயம், கோவிட் விடயத்திலும் அதுதான் உண்மை.

சமீபத்திய, இன்னும் வெளியிடப்படாத, ஆராய்ச்சி ஒன்றில், ஆண்களிலும் பெண்களிலும் வெண்கலங்கள் மீதான SARS-CoV-2 வைரஸின் தாக்கம் வித்தியாசமாக இருப்பது பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஆண்களில் வைரஸ் தனித்தன்மையான மொனோசைட் சைற்றோகைன்களை உருவாக்குவதன்மூலம் அவர்களில் சைற்றோகைன் புயல் அதிகம் ஏற்பட்டு அழற்சி தீவிரப்படுத்தப்படுகிறது எனவும் அது கூறுகிறது.

பெண்களில் வயதும், உடற்பருமனும் அவர்களில் இயற்கையாக இருக்கும் பாதுகாப்பைக் குறைக்கின்றன எனவும் அது கூறுகிறது.