BusinessWorld

அலிபாபா ஸ்தாபகர் ஜாக் மா திடீர் மறைவு – சீன அரசுடனான முரண்பாடு காரணம்?


ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களுள் ஒருவரும், அலிபாபா குரூப் நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஜாக் மா கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

சீனாவின் அமசோன் என வர்ணிக்கப்படும் அலிபாபா குழுமம் உலகின் பிகப்பெரிய இணையவழிச் சந்தைகளில் ஒன்றாகும். ஜாக் மா இக் குழுமத்தின் இணை ஸ்தாபகர்.

கடந்த அக்டோபர் மாதம் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகள் குறித்து காரசாரமாக விமர்சித்த ஜாக் மா சீனாவின் ஜனாதிபதி சி ஜின்பிங்கை ஆத்திரமடையச் செய்திருந்ததாகவும் இதைத் தொடர்ந்து மாவும் அவரது நிறுவனத்தின் இதர அதிகாரிகளும் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்களெனவும் செய்திகள் வெளீவந்திருந்தன.

அரசாங்கத்துக்கும் ஜாக் மாவிற்குமிடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக, அலிபாபா குழுமத்தின் இன்னுமொரு நிறுவனமான Ant Group பின் பங்குச் சந்தை ஆரம்ப நிகழ்வை (IPO) சீன அரசு நிறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து Ant Group, அதன் போட்டி நிறுவனமான TenCent ஆகியவற்றின் நிர்வாகிகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்கள். இதன் பிறகு ஜாக் மா காணாமற் போயிருக்கிறார்.



அதே வேளை, அலிபாபாவின் இணையத்தளத்தில் அவரது படமும் பெயரும் நீக்கப்பட்டு வேறொரு அலிபாபாவின் நிர்வாகியின் படம் இணைக்கப்பட்டுள்ளது. மா நாட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என டிசம்பர் மாதம் சீன அரசினால் அவருக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

2018 இல் Anbang Insurance நிறுவனத்தின் ஸ்தாபகரான வூ சியாஹுயி, ‘அதிகார துஷ்பிரயோகம்’ காரணமாக 18 வருட சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் றியல் எஸ்ரேற் முதலீட்டாளர் றென் சிகியாங் கோவிட் கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்து கட்டுரை ஒன்றில் ஜனாதிபதி ஜின்பிங்கை ஒரு கோமாளி எனக் குறிப்பிட்டதால் ‘ஊழல்’ குற்றச்சாட்டில் அவருக்கு 18 வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.