BusinessNews & AnalysisWorld

அலிபாபாவின் ஏகபோக வியாபாரத்திற்காக $2.8 பில்லியன் தண்டம் – சீன அரசு விதித்தது

சீனாவின் மிகப் பெரிய இணையத்தளச் சந்தையான (e-commerce) அலிபாபா நாணயமற்ற வகையில் வியாபாரம் செய்ததெனக்கூறி சீன அரசு அதஹ்ற்கு $2.8 பில்லியன் தண்டம் விதித்திருக்கிறது.

சீனாவின் ‘அமசோன்’ என வர்ணிக்கப்படும் அலிபாபா ஒரு இணையத்தளச் சந்தை. இங்கு வர்த்தகர்கள் தமது பண்டங்களைக் காட்சிப்படுத்தி விற்றுக்கொள்ள முடியும். உலகம் முழுவதிலும் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் அலிபாபா, அமசோனைப் போல இணையச்சந்தையாகத் தொடங்கியிருந்தாலும் தற்போது அது விரிந்து பரந்து பல துறைகளையும் ஏப்பம்விட்டு வருகின்றது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தைப் பாவித்து அது தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பன்மடங்கு பெருக்கிவைத்துள்ளது. இதனால் அதற்கு நிகராக ஏனைய இணையச் சந்தைகளால் வெற்றிகரமாக வளர முடியவில்லை.

கடந்த சில வருடங்களாக அலிபாபாவின் வருமானம் பல்கிப் பெருகி வருகிறது. வாடிக்கையாளர்களின்மீது மித மிஞ்சிய கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் ‘என் தளத்தைப் பாவிப்பதானால் என் வழிக்கு இணங்க வேண்டும்’ என்ற எகத்தாளமான போக்கை அது கடைப்பிடித்து வருகிறது. இதனால் ஏனைய இதே போன்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் முறையிட்டதன் பயனாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

அலிபாபாவின் தண்டமான $2.8 பில்லியன் தொகை அந் நிறுவனத்தின் 2019 ம் வருட உள்நாட்டு வருமானத்தின் 4% மட்டுமே. எனவே அதை இலகுவாகச் செலுத்திவிட்டு வியாபாரத்தைப் பார்க்கிறது. காரணம் அதற்கு சீனாவில் தான் இலாபமீட்டலாம். அதன் நுகர்வோர் தொகையும், அங்குள்ள உற்பத்தியாளர் தொகையுமே அதற்குப் போதும். உலகச் சந்தை பற்றி அது கவலை கொள்ளத் தேவையில்லை. அதே வேளை சீனாவுக்கும் தனது உற்பத்தியை வெளிநாடுகளுக்குக் காட்சிப்படுத்த ஒரு சிறந்த சீன நிறுவனம் தேவை. அமசோனுடன் போட்டி போடுமளவுக்கு இன்றுள்ள உலகத் தரமிக்க நிறுவனம் அலிபாபா மட்டும்தான். எனவே இவ் விடயத்தில் இரண்டு பகுதியும் ஒரு பரஸ்பர உடன்பாட்டுக்கு வந்திருப்பதாகவே பார்க்கப்பட வேண்டும்.

அலிபாபா மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு, அது தனது வாடிக்கையாளர்களை (வியாபாரிகளை) தன்னைப்போல் இதர சந்தைகளில் வியாபாரம் செய்ய விடுவதில்லை. இதனால் அலிபாபாவைப் போன்ற இதர சந்தைகள், வியாபாரிகள் தமது மேடையைப் பாவிக்காமல், அலிபாபா தடுத்து விடுகிறது என அரசிடம் முறையிட்டிருந்தார்கள். அலிபாபா இந்த நடைமுறையை மிக் நீண்டகாலமாகப் பின்பற்ரி வருகிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இத் தீர்ப்பிற்குப் பின் அலிபாபா தனது நடைமுறையை மாற்றிக்கொள்ளப் போகிறதெனக் கூறுகின்றது.

அலிபாபாவுக்கு சீனாவில் இது மட்டும்தான் பெரிய வியாபாரம் என்றில்லை. சென்ற வருடம் ஹொங் கொங் பங்குச் சந்தையில் ஆரம்பிக்கப்பட்ட (IPO) ‘அண்ட் குரூப்’ (Ant Group) ஒரு நிதி நிறுவனம். எனவே நாட்டின் சந்தை ஏகபோகம் ஒரு நிறுவனத்திடம் போவது மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல.