Columnsமாயமான்

அலம்பலும் புலம்பலும்: சாக்கடையில் குளித்த புனிதர்கள் வேண்டும்

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா ஒரு ‘நடிநிலைவாதி’. கொள்கையில் அல்ல நடைமுறையில் அவர் ஒரு pragmatic person. தனக்கு எல்லாமே தெரியும் என முன்னால் இருப்பவரை வாயால் அடித்து இருத்தும் nascisistic ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதுவுமே தெரியாது பேசால் வாயை மூடிக்கொண்டிருக்கும் (dumb) சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இருப்பதனால் அனுரகுமார ஒரு ‘நடிநிலைவாதி’ என்றேன். அது அவரது இயல்பா அல்லது பின்னாலுள்ள ‘ஜனாதிபதி செயற்குழுவின்’ கட்டளையோ தெரியாது. தேர்தலில் வென்றவுடன் “நான் ஒரு மந்திரவாதியல்ல” என்று தடாலடியாக காவிகளின் முன்னால் வீழ்ந்து ஆசிகளையும் பெற்றுக்கொண்டார். இதில் ‘மக்களின் கால்களில் வீழ்ழ்ந்து’ என்பதற்குப் பதிலாக ‘காவிகளின் கால்களில் வீழ்ந்து’ என்று கூறியதற்குக் காரணம் இருக்கிறது. 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் 6.9 மில்லியன் வாக்காளர்களுக்குத் திசை காட்டியாகச் செயற்பட்டவர்கள் இந்த காவிகள் தான். எனவே இவர்களின் கால்களில் வீழ்வது மக்களின் கால்களில் வீழ்வதற்குச் சமம் என்று சிறு logic. சென்ற தேர்தலில் 3% வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சி திடீரென 42% வாக்குகளைப் பெறுவதாயின் அந்த 39% மும் கோட்டாவின் வாக்குகள் என்றே கருதப்படவேண்டும். சஜித் + ரணிலின் வாக்குகள் அப்படியே இருக்கின்றன. எனவே மந்திரவாதியல்லாத AKD இற்கு மக்கள் கால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். அந்த கால அவகாசத்தை முதலிட்டு பாராளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றியை ஈட்டுவதற்கு ‘ஜனாதிபதி செயற்குழு’ முயற்சிக்கலாம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதில் தப்பில்லை.

ஆனால் இன்று வந்த செய்தியொன்று இந்த logic ஐயும் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சிறீநாத் பெரேரா ஊடகங்கள் முன்னே கொழுத்திப் போட்டிருக்கும் வெடி சாதாரணமானது அல்ல. அதாவது “வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுத்து விடக்கூடாது. அது அக்கட்சியை ஊழலை நோக்கித் தள்ளிவிடும். பலமான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் இங்குண்டு. வேண்டுமானால் நாங்கள் பலமான எதிர்க்கட்சியாகவும் இருக்கத் தயார்” எனக் கொழுத்திப் போட்டிருக்கிறார் பெரேரா. அவரது இக்கூற்றை மூன்று வழிகளில் interpret செய்யலாம். 1). மூன்றில் இரண்டு பெரும்பான்மையை NPP எடுத்துக்கொண்டால் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி உடனடியாக நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை ஒழித்துவிட வேண்டும். ஆனால் கட்சியின் விஞ்ஞாபனத்தின்படி செய்யவேண்டிய பல விடயங்களுக்கு ‘சர்வ வல்லமை’ கொண்ட நிறைவேற்று அதிகாரம் அவசியம். ஆனபடியால் ஜனாதிபதி பதவியை இழுத்தடிக்க கொஞ்சக் காலம் தேவை. அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாத சில விடயங்களுக்கு ஆளும் கட்சியே பொறுப்பு எனப் பொறுப்புத் துறப்பை எடுத்துவிட்டுத் தப்பிக்கலாம் என்ற கரவுத் தனமாகவும் இருக்கலாம். 2). பாராளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைத் தம்மால் எடுக்க முடியாது என்பதைப் pre-emptive ஆக வெளிப்படுத்தி ‘அடுத்த தடவை எங்களின் செயற்பாடுகளைப் பார்த்து பெரும்பான்மையைத் தாருங்கோ என்று மக்கள் முன் குழைவதாகவும் இருக்கலாம். 3). மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஊழலுக்கு வழி வகுக்கிறது என்பது உண்மை. அதை நிஜமாகவே உணர்ந்து தம்மை அதிலிருந்தும் காப்பாற்றுவதற்கான நியாயமான முயற்சியாகவும் இருக்கலாம்.


வரப்போகும் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் கட்சி வெற்றியடைந்தால் அனுபவமில்லாத இரண்டு கட்சிகளும் இயல்பான அரசியல் நீரோட்டத்திற்குள் சுமுகமாக இணைந்துகொள்ள (smooth transition) வழிவகுக்கும் என்பது எனது கணிப்பு. எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசரப்பட்டு அரசியலமைப்பை மாற்றி நாட்டுக்கும் அதன் தேசீய இனங்களுக்கும் தீமைகளைப் பெற்றுக்கொடுத்துவிடாமல் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு வழியாக இருக்கலாம். சஜித், அநுர இரண்டு பேருமே -இதுவரை- தீவிர இனவாதத்தை முன்னிலைப்படுத்தவில்லை. அது சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக தற்காலிக உறங்குநிலையில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய கால அவகாசம் வேண்டும். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சி காட்டிய திசையில் தான் வாக்களித்தார்கள். எனவே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் தமிழரசுக் கட்சியே என்பது மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலிலும் இதுவே தான் நிலைமை என நம்பலாம். இதற்கு காரணம் கட்சியில் புனிதர்கள் இருக்கிறார்கள் என்பதனாலல்ல அவர்களது எதிராளிகளில் புனிதர்கள் எவருமேயில்லை என்பதனால் தான்.

ஈழ விடுதலைப் போராட்டம் தோல்வி கண்டதற்கு முக்கிய காரணம் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று யாராவது வாதாடினால் நானும் அவர்கள் பக்கம். இந்த புலத்தாரின் பலம் முதலிலேயே கிள்ளப்பட்டிருந்தால் போராட்டம் தமிழர்களுக்குச் சாதகமான விளைவுகளைத் தந்திருக்க வாய்ப்புண்டு. அதே வேளை இன்று ஈழத்தமிழர்களின் வாக்குகள் முதலாளிகளின் பேரங்களுக்குள் அகப்படாதும் போயிருக்கும். தமிழ்நாட்டு அரசியல் போல ராஸ்மார்க்கும், பிரியாணியும், பணப்பொதியும் வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்க வெகு காலமெடுக்காது. தமிழ்த் தேசிய முலாம் இவ்வரசியல்வாதிகளைப் புண்ணியவான்களாகக் காட்டுமட்டும் போலிகளின் அரங்கேறுகாதைகளே நம் வரலாற்றை நிரப்பிவைக்கும்.

அனுர அலை யாழ்ப்பாணத்திலும் கரையொதுங்கியிருப்பதாக ‘நீ-குழாய்’ தகவல்கள் தெரிவிக்கின்றன. 1950, 60 களில் சிலாவிச் சென்ற பீக்கிங், மொஸ்கோ அணி இடதுசாரி அலைகளின் இரைச்சல் இப்போ மீளவும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும் மக்கள் ‘வீட்டை’ விட்டு வெளியே வந்தால் தான் அலைச்சத்தம் கேட்கும். அப்போ சங்கு ஊதுதல் கேட்கவில்லையா? என நீங்கள் கேட்கலாம். ஜனாதிபதித் தேர்தலின்போது அடைத்த காதுகளில் இன்னும் இரைச்சல் போகவில்லை. கொஞ்சம் பொறுப்போம். வடக்கில் தேசிய மக்கள் சக்தி மீது Extra Large பிம்பம் கட்டப்படுகிறது. தேவைக்கதிகமான பிரகாசம். இது நல்லதல்ல. திருவிழாக்களில் கட்டப்படும் சிகரம் கொடியிறக்கப்படும் மட்டும்தான். சந்திரிகா அம்மையார் வெற்றி பெற்றபோது யாழ்ப்பாணத்தில் மக்கள் கொக்கோ கோலாவில் குளித்தெழுந்து குதூகலப்பட்டார்கள். எதற்கும் அடக்கி வாசித்தல் நல்லது.

‘பார் லைசென்ஸ்’ லிஸ்ட் எப்போ வருமென்று பலர் வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வெறும் hype. ஒரு செயற்கை உணர்ச்சி அலை. ஒரு பழி வாங்கல். உலகில் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் அரசியல்வாதிகளுக்கென்று சில சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒரு பா.உ. பார் லைசென்ஸை தனது நண்பருக்கு பரிந்துரைத்ததை ஊழல் என்று சொன்னால் அதே பா.உ. வின் சிபார்சில் அரசாங்க உத்தியோகம் எடுப்பதையும், வெளி நாடுகளில் அகதிக் கோரிக்கைக்கு அதே பா.உ. விடம் பொய்க் கடிதம் வாங்குவதையும் புனிதமெனக் கருதமுடியுமா? புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து ‘பார் லைசென்ஸ்’ மீம்கள் போடுபவர்கள் பலர் எம்.பி. மாரின் சிபார்சுகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தான்.

நல்லவர்கள், படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அரசியல் ஒரு சாக்கடை. அதற்குள் புனிதர்கள் குளிக்க வரமாட்டார்கள் என்பதையும் உணர்ந்திருக்க வேண்டும். இதற்குள் சாதி, மதம், பெண்கள், முன்னாள் போராளிகள் என்று எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டுமென்று குரல்கள் வேறு.

அனுர / ஜே.வி.பி. மீதான தமிழர் விசனம் வடக்கு-கிழக்கு பிரிப்பு எனப் பலர் கூறுவர். ஆனால் அதைவிட மிக மோசமான செயல் 2004 சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மக்களுக்கு சர்வதேசங்களால் கொடுக்கப்பட்ட 3 பில்லியன் டொலர் உதவியைக் கொடுக்கக்கூடாது எனக்கூறி 39 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அப்போதைய சந்திரிகா அரசிலிருந்து வெளியேறியவர்களில் அனுரவும் ஒருவர். எந்தக் கங்கையிலும் குளிக்காத அவர் இப்போது புனிதராக்கப்படுகிறார். சரி, மனிதர்கள் மாறலாம். அவகாசம் கொடுப்போம். அதுவரை எமது known devils எமது காவலர்களாக இருக்கட்டும்.

இப்படியொரு நீண்ட அலம்பலும் புலம்பலுமான கட்டுரையை வாசித்த பிறகு உங்கள் மனதில் எழுகின்ற கேள்வி: “அப்ப, இப்ப நீ என்ன சொல்ல வாற?”

மறுமொழி: சாக்கடையில் குளித்த புனிதர்களைக் கொண்டு வாருங்கள். அல்லது முடிந்தால் உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் Jose Mujica வைக் clone செய்துகொள்ளுங்கள்.