Spread the love

மாயமான்

சக்கிடுத்தாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. எல்லோரும் ஏறிய கழுதையை விட்டுவிட்டு புதிய கழுதையொன்றை வாங்கிக் கொண்டார். மாற்றங்கள் வேண்டும் என்பது அவரது கொள்கை. ஆனால் சவேரித் தம்பருக்கு அதில் உடன்பாடில்லை. “உவனுக்கும் கொள்கைக்கும் என்ன சம்பந்தம். யாரோ எலக்சனுக்குப் பிரசாரம் செய்துகொண்டு சைக்கிளில திரியிற பெடியள் சொன்னதை அப்பிடியே மனிசன் பிடிச்சிட்டு திருப்பிச் சொல்லுது. அதைச் சொன்னா ஒரு பாசன். ஒரு வீடு இரு பொண்டாட்டி எண்டு இன்னொருத்தன் வருவான் அதையும் இந்த மனிசன் கொள்கையெண்டு வகுக்கப்போகுது” என்றபடி மணியம் கடை வாங்கில் உட்கார்ந்தபடி ஒரு பிளெயின் டீக்கு ஓடர் கொடுத்துவிட்டு இருந்தார் சவேரித் தம்பர்.

சவேரியரும், சக்கிடுத்தாரும் நீண்ட நாளைய நண்பர்கள். சத்தியாக்கிரகத்தின்போது ஏற்பட்ட நட்பு இன்னும் தொடர்கிறது. சவேரியர் வீட்டுக் கட்சிக் காரர். யார் தலை குத்தித் தலைகீழாக நின்றாலும் அவரது வீட்டில் 5 வாக்குகளும் அவைக்குத் தான். கொஞ்சம் சுடுதண்ணி. கட்சியைப் பற்றிப் பிழையாகச் சொன்னால் கன்னத்திப் பொத்தி அறையொன்று போட்டுவிட்டுத்தான அடுத்த கதை. இயக்கம் இருந்த போது கைகள் துருதுருக்கும். கம்பத்தை நினைத்தவுடன், ஒரு சொறிதலுடன் நின்றுவிடும். இப்போது அவரது நாட்டாண்மை திரும்ப வந்திட்ட்டுது என்று கடைக்காரர் சொல்வார்.

மாலை 6 மணிபோல் சக்கிடுத்தாரின் கழுதை தலைமைச் செயலகத்துக்கு, அதுதான் மணியத்தார் கடைக்கு சக்கிடுத்தாருடன் வந்து சேர்ந்தது. அறுவான்கள் துடங்கப் போறாங்கள் என்று மணியத்தார் கிளாசுகளை அள்ளிப் பொறுக்கிக்கொண்டு உள்ளே ஓடினார்.

என்ன சவேரி, இன்னும் இரண்டு நாளிலை உங்கட ஆக்களின்ர கொட்டமெல்லாம் அடங்கப்போகுது. யாழ்ப்பாணத்தில ரண்டு, கிளிநொச்சியில ஒண்டு, திருகோணமலையில ஒண்டு, மட்டக்களப்பில ஒண்டு, மொத்தமா 5 தேறுமா? சக்கிடுத்தார் கிண்டினார்.

“15க்கும் இருபதுக்குலிடையில வரும். வேணுமெண்டா இருந்து பார்” , சவேரியார் குடித்து முடித்த கிளாசைக் குத்திச் சத்தம் எழுப்பினார்.

“அப்ப விக்கியருக்கு?” பக்கத்தில் பல்லுக் குத்திக்கொண்டிருந்த நவசியர் கேட்டார். சவேரியர் அவரைப் பார்த்த பார்வையோடு அவர் எழும்பிப் போய்விட்டார்.

“இங்கேர் சவேரி, இதுக்கெல்லாம் கோபப்படக்குடாது. நானும் ஒருகாலத்தில கட்சிக் காறன் தான். காலம் மாறிட்டிது காணும். மாற்றங்கள் வேணும். புது இரத்தங்கள் வரவேணும். இந்த சைக்கிள் பெடியளில எனக்கு நம்பிக்கையிருக்கு”

“அவங்கள் மாகாண சபைக்கு எலக்சன் கேட்கிறாங்கள் எண்டெல்ல்லோ நினைச்சன். அவங்களின்ர சைக்கிள் ஆனையிறவுக்கு அங்கால போகாதாம்” சவேரியார் குத்தினார்.

“சவேரி, ஒரு நாடு இரு தேசம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறியோ?”

உங்கட பெடியள் தான் சொல்லித் திரியினமாம். இலங்கைக்குள்ள வடக்கு, கிழக்கு எண்டு இரண்டு தேசங்கள் எண்டு பொடியள் சொல்லினம்.. அது சரி ஆனால் அவை வடக்கில மட்டும்தானே நிக்கினம். அப்ப என்னெண்டு” சவேரியார் சொல்லிக்கொண்டே மணியத்தாரைப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்தார்.சக்கிடுத்தாருக்கு கோபம் வந்துவிட்டது என்பதை அவரது கழுதையின் கனைப்பு வெளிப்படுத்தியது.

“சவேரி, நீ இந்த உதயன், காலைக்கதிர் பத்திரிகைகளை மட்டும்பார்த்துப்போட்டு வியாக்கியானம் கதைக்கக் கூடாது. விசயம் விளங்காட்டி இப்ப கனக்க ஆய்வாளர்கள் வீட்டுக்கொரு இணையத்தளத்தை வைச்சுக்கொண்டு ஆய்ந்து ஆய்ந்து சொல்லுகினம். கேட்டுப்பாரும். அந்த மாதிரி. யாழ்ப்பானம் பிறெஸ் கிளப் தோத்துப் போகும்”

“சரி சக்கிடுத்தார், கோபிக்காம அதை ஒருக்காச் சொல்லும். ஒரு நாடு இரு தேசமெண்டு சொல்லுற. இந்த தேசமெண்டிறது என்ன?”

“இஞ்சே சவேரி, நாம ரெண்டு பேரும் எத்தின வருசமா பிறெண்ட்ஸ். இப்பிடிக் குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. நானும் பெடியளைக் கேட்காத நாளில்லை. எல்லாரும், “ஐயா கனக்க வீடு கிடக்கு போறதுக்கு” எண்டிட்டு ஓடிறாங்கள். நான் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் பண்ணிறன்”

“சக்கிடுத்தார், எனக்கொண்டும் அந்தப் பொடியன் மேல ஒரு கோவமுமில்ல. பாவம் மூண்டு தலைமுறையா ஒரே சைக்கிளை வைச்சு அது சுத்திக்கொண்டு திரியுது. அதுக்கு ஒருக்கா எண்டாலும் சந்தர்ப்பம் குடுத்துப் பார்க்கிறதில எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த தடவை நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேணும். ராஜபக்ச குடும்பத்துக்கு மூண்டில் இரண்டு கிடைச்சுது எண்டு வைச்சுக்க. அவ்வளவுதான். அடுத்த மாசமே உன்ர காணிக்கிள்ள இராணுவம் புத்த கோயில் கட்டும். பள்ளிக்கூடங்கள் எல்லாம் தேசியப் பள்ளிகளாக்கிப்போட்டு சிங்களம் கட்டாயம் ஏண்டு சொல்லி சிங்கள வாத்திமாரைக் கொண்டுவந்து இறக்கிவிடுவாங்கள். ஒரு நாடு ஒரு தேசமெண்டு அவங்கள் சொல்லிக்கொண்டு அவங்கள் இலவசமா மகாவம்சத்தைத் தந்து பாடமாக்கச் சொல்லப்போறாங்கள். விருப்பமோ?”

“சவேரி, அப்ப நீங்க 15 -20 பேர் போனா மட்டும் அதை நிப்பாட்டி விடுவீங்களா?”

“மூண்டில் இரண்டு பெரும்பான்மையை முதலில நிப்பாட்டுவம். 19 வது திருத்தத்தைக் காப்பாத்துவம். அதுக்குள்ள இந்த கோவிட்-19 நாட்டின்ர பொருளாதாரத்தைச் சீர்குலைச்சுப்போடும். இந்த நேரத்தில சீனா இறங்கி அவங்களுக்கு உதவி செய்யும். அப்பத்தான் நம்மட மேற்குநாடுகள், இந்தியா போல நாடுகள், முழிச்சுப் பாக்கும். இந்த நேரத்தில தமிழர் ஒற்றுமையாகப் பாராளுமன்றத்தில இருக்க வேணும். மொட்டு ஒண்டு, சைக்கிள் ஒண்டு, வீடு ஒண்டு, கை ஒண்டு எண்டு நாலைங்சு பேர் தாங்க தமிழரின் பிரதிநிதிகள் எண்டு சொன்னால் வெளிநாடுகள் ஆற்றை கையைப் பிடிக்கிறது சொல்லு பாப்பம்”?

சக்கிடுத்தாரின் பெருவிரல் மண்ணில் கீறிக்கொண்டிருந்தது. மணியத்தார் இரண்டு கிளாஸ்களில் பிளெயின் டீயைக் கொண்டுவந்து வைத்தார். “நவசிக்கும் ஒண்டு குடு மணியம். என்ர கணக்கில எழுது” என்றார் சக்கிடுத்தார்

கழுதை இப்போது ஒரு சிரிப்போடு கனைத்தது.

Print Friendly, PDF & Email