Spread the love

“போக்குவரத்துக் குறைந்த கிராமங்களிலுள்ள சில குடும்பங்கள் இரண்டு நாட்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியோடு வந்து வரிசையில் நின்று உணவுப் பொதிகளை வாங்கியதுமல்லாமல் எமது கால்களில் விழுந்து நன்றியும் தெரிவித்தார்கள்”

‘அறம் நம்பிக்கை நிதியத்தின்’ களப்பணியாளர்

அறம் நம்பிக்கை நிதியம் இலங்கையின் வட-கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடந்த சில வருடங்களாக கல்விச் சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். சேவை மனப்பான்மை கொண்ட புலம் பெயர் தமிழர்கள் சிலரின் முயற்சியால், அவர்களது குடும்பங்கள், நண்பர்களின் பங்களிப்போடு, இலங்கையிலுள்ள அர்ப்பணிப்புள்ள களப்பணியாளர்களின் உதவியோடி அது தன் சேவைகளை முன்னெடுத்து வருகிறது.

எஸ்.வி. கல்விச் சோலை என்னும் நிறுவனத்தின் மூலம் வன்னி பிரதேசத்தில் போரினாற் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்களிலுள்ள பிள்ளைகள், மலையகத்தில் பிந்தங்கிய தோட்டப் பள்ளிகளிலுள்ள பிள்ளைகள், மட்டக்களப்பு குண்டுவெடிப்பில் அநாதைகளாக்கப்பட்ட பிள்ளைகள் என்று பலரது எதிர்காலத்தை வளம்படுத்தும் முயற்சிகளில் இவ்வமைப்பு ஈடுபட்டு வருகிறது.

தற்போது இலங்கையில், நாடு தழுவிய ரீதியில் அரசு எடுத்துவரும் கோவிட்-19 நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ஏற்கெனவே போதிய வருமானம், வாழ்வாதரங்களின்றி இடர்ப்பட்டிருக்கும் குடும்பங்கள் பல மேலும் துயருக்குள்ளானமையை அறிந்த ‘அறம்’, மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சில குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வருகிறது.

இப் பிரதேசங்களிலுள்ள கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியவற்றின் உதவியுடன் தேவைகள் அதிகமாகவுள்ள குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அமைப்பின் களப்பணியாளர் மூலம் நிவாரணப் பொதிகளை வழங்கி வருகிறார்கள். பெரும்பாலான குடும்பங்கள் தினச் சம்பளத்தில் தங்கியிருப்பவை. நடமாட்டக் கட்டுப்பாட்டினால் பலர் தமது பணியிடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் எதுவித வருமானமுமின்றி பல குடும்பங்கள் பட்டினியில் வாடும் நிலைமை இருந்து வந்தது. இதையறிந்த நாட்டின் பல பாகங்களிலுமிருந்து மருத்துவர்கள் உள்ளிட்ட பல களப்பணியாளர்கள் தமது நேரங்களை இதற்காக அர்ப்பணித்து தம்மாலியன்ற சேவைகளையாற்றி வருகிறார்கள்.

அத்தோடு இந்த அமைப்பு கல்விச் சேவை வழங்கும் பிரதேசங்களிலுள்ள வறிய, வசதியற்ற மாணவர்களின் சுகாதாரம், போஷாக்கு தேவைகளையும், மருத்துவ களச் சேவைகள் மூலம் கவனித்து வருகிறது.

தற்போதய நிவாரண சேவைகள் (ஏப்ரல் 29, 2020 மட்டும்)

  • வாரா வாரம் உணவும் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் கொண்ட பொதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
  • இதுவரை 2.5 மில்லியன் இலங்கை ரூபாய்கள் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • வன்னி பிரதேசத்தில் (கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு) 200 போஷாக்குக் குறைந்த குழந்தைகள் உட்பட, 1,500 குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன.
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோரப் பிரதேசங்களான வாழைச்சேனை (சுவிஸ் கிராமம்), கிரான் குளம், கல்லடி டச்பார், மாமங்கம் ஆகிய இடங்களிலுள்ள குறைந்த வருமானமுள்ள 255 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
  • மலையகத்தில் 410 குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன. மாத்தளை, றத்தோட்ட மற்றும் கண்டி, நாவலப்பிட்டி ஆகிய இடங்களில் பொதி விநியோகம் நடைபெற்றுள்ளது.
  • யாழ்ப்பாணத்தில் 460 குடும்பங்கள் பலன் பெற்றுள்ளன. அதைவிட வருமானம் தடைப்பட்ட 50 சிகையலங்காரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
  • இதர அறப்பணியமைப்புகளின் வேண்டுகோளுக்கமைய, ‘அறம்’ களப்பணியாளர்கள் அவற்றின் நிவாரணப் பொதிகளை சுமார் 675 குடும்பங்களுக்கு விநியோகித்துள்ளனர்.
  • இவ் விநியோகத்துக்கான அத்தனை செலவுகளையும் பணியாளர்களே பொறுத்துக் கொள்கின்றனர்.
Related:  2005 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு வாக்காளர்களை ராஜபக்சக்கள் திட்டமிட்டுத் தடுத்தார்கள் - உடைக்கிறார் மேர்வின் சில்வா!

வன்னி, மட்டக்களப்பு, மலையகப் பிரதேசங்களில் களப்பணியாற்றிவரும் இருவருடன் ‘மறுமொழி’ தொடர்புகொண்டு பேசியபோது கிடைத்த பல தகவல்கள் இப் பிரதேசங்களிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான இடர்களின் ஆழத்தை உணர்த்தியது. “போக்குவரத்துக் குறைந்த பல கிராமங்களிலுள்ள சில குடும்பங்கள் இரண்டு நாட்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியோடு வந்து வரிசையில் நின்று உணவுப் பொதிகளை வாங்கியதுமல்லாமல் எமது கால்களில் விழுந்து நன்றி தெரிவித்தார்கள்” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு களப்பணியாளர்.

நிவாரணப் பொதி விநியோகம் பற்றிய விரிவான தகவல்களை அறிய ‘அறம்’ நம்பிக்கை நிதியத்தின் முகநூற் பக்கத்திற்குச் செல்லவும்.

Print Friendly, PDF & Email