அர்ச்சுனாவின் புலம்பல்
வடிவேலர் உலா
கிருஷ்ணானந்தா
“உந்த கண்டறியாத கொம்பியூட்டரைப் பாவிக்கத் தெரிஞ்சிருந்தா ரணில் என்னைக் கூப்பிட்டுப் பக்கத்தில வைச்சுக் கதைச்சிருப்பேர்” புறுபுறுத்தபடி சைக்கிளில் வந்திறங்கினார் வடிவேலர்.
“என்னண்னை காலம் காத்தால சீல கிழிஞ்சமாதிரி”
“எட கிருசு, எங்கயோ கிடந்த இந்த பொடியன் அர்ச்சுனா இந்த சாவகச்சேரி ஆஸ்பத்திரியை வைச்சு இப்ப எம்.பி.யாக வந்திடுவான் போல கிடக்கு. வேணுமெண்டா இருந்துபார் அவன் புதுக்கட்சி தொடங்குவான் அல்லது ரணில் அல்லது ராஜபக்ச ஆக்கள் அவனை தங்கட பக்கம் இழுத்திடுவாங்கள். நீயும் இருக்கிறியே”
“ஓ அதுவா. அது பெடியன் பாவம். வைச்சுக்கொண்டு வஞ்சகம் செய்யேல்ல. அது தானும் ஒரு சாட்டை துரைமுருகனைப்போல வரவேணும் எண்டு ஆசைப்பட்டிருக்கும். ஒரு ‘யூடியூப்’ சனலைத் தொடங்கி பரபரப்பாக்கி நாலு பணம் சம்பாதிக்கலாம் எண்டு நினைச்சிருக்கும். கொஞ்சம் கொஞ்சமா ஆள்சேர்த்து பிறகு எம்.பி.யாக வந்திடும். அதின்ர முதல் புறொஜெக்ட் தான் சாவகச்சேரி ஆஸ்பத்திரி”
“எட கிருசு. அந்தப் பெடியன் ஒரு டொக்ரரடா. அதில உழைக்கேலாததையா ‘யூ டியூப்பில’ உழைக்கப்போகுது? உனக்கு அவனில ஏதோ கடுப்பு”
“முந்தி டொக்டர் எண்டா சனம் கும்பிடும். இப்ப எவங்கள் டொக்டர் மாதிரி நடக்கிறாங்கள். உண்மையான நல்ல டொக்ரர் மாரின்ர பேரைக் கெடுக்கவெண்டு இவங்கள் வெளிக்கிட்டிட்டாங்கள். அருச்சுனா எண்டவர் டொக்டர் மாதிரியா நடக்கிறேர் வடிவேலர்”
“அவனில்லாவிட்டா சாவகச்சேரி ஆஸ்பத்திரியை இப்பிடி மாத்தியிருக்கேலுமோ?”
“வடிவேலர், நீங்க கடசியா எப்ப ஆஸ்பத்திரிக்குப் போனநீங்க. ஆஸ்பத்திரியள நிர்வகிக்கிறது அரசாங்கத்தின்ர வேலை. இலங்கையில மட்டுமில்ல இந்தியா, அமெரிக்கா எல்லா நாடுகளிலயும் பிரைவேட் ஆஸ்பத்திரியள் வந்தவுடன் அரசாங்க ஆஸ்பத்திரிகள் எல்லாத்தையும் கைவிட்டிட்டாங்கள். சம்பளத்துக்காகக் கொஞ்ச டாக்குத்தர்மார் அங்க போய் அங்க இருந்து நோயாளியளைத் தங்கட கிளினிக்குகளுக்கு திருடிறதும் கிளினிக்கில காசை வாங்கிக்கொண்டு நோயாளியளை ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லி அங்க சிகிச்சையளிக்கிறது. இது சாவகச்சேரியில மட்டுமில்லை கனக்க ஆஸ்பத்திரியளுக்கு இதுதான் நிலைமை. சிஸ்டத்தை திருத்த வெளிக்கிட்டா உடனே டக்கர் ஓஃபீசில இருந்து கோல் வரும். அடுத்தநாள் ட்றான்ஸ்பர். இதனால நல்ல டாக்குத்தர்மார் எல்லாரும் வெளிநாடு போயிட்டினம்.”
“அப்ப அர்ச்சுனா சொன்னது பிழையெண்டு சொல்லுறியோ. ஒப்பறேசன் செய்யிறதுக்கு கரண்ட் இல்லை. எலிவேட்டர் இயங்காமல் உயர்மாடிக் கட்டிடம் பாவிக்கப்படேல்ல. மருந்துகள் எல்லாம் நிலத்தில சிந்திக்கிடக்குது எண்டு அவன் புட்டுப் புட்டு வைச்சதால தான் டக்கரும் அங்கயனும் உடனே அங்க ஓடினவங்கள். அவங்கட உடனடி நடவடிக்கைகளால இப்ப எல்லாம் சரிப்பண்ணியாச்சு”
“அதுதான் நான் சொன்ன ‘சிஸ்டம்’ வடிவேலர். இன்னும் ஒரு மாதத்தில போய்ப் பாத்திட்டுச் சொல்லுங்க வடிவேலர், சில சிங்களக் கிராமங்களில இதைவிட மோசம். ஏன் டொக்டர் சத்தியமூர்த்தி பொறுப்பேற்கிறதுக்கு முன்னால யாழ்ப்பாணமும் இதே நிலைமைதான். அந்தாள் தன்ர சொந்த செல்வாக்கைப் பாவிச்சு அரசாங்கத்தை அரிச்சு அரிச்சு, இறுக்கமாக வேலை செய்து ஆஸ்பத்திரியை இந்த நிலைமைக்கு கொண்டுவந்திருக்குது. ஆஸ்பத்திரிக்கு ஏதும் தேவையெண்டா அந்தாள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிஸெண்டு ஓடிப்போய் காசு சேர்த்துக்கொண்டுவந்து ஆஸ்பத்திரியைக் கட்டி எழுப்பிவிடும். அப்பிடியிருந்தும் அங்க வேலைசெய்யிற கனக்க டாக்குத்தர்மார் வெளியில கிளினிக்குகளை வைச்சுக்கொண்டு அங்க வாற கஷ்டமான நோயாளியளை யாழ். பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பி அங்க வைச்சு சிகிச்சை செய்வாங்கள். நோயாளியள் கிளினிக் வாசல்லை கால் எடுத்து வைச்சவுடனே காசு கட்டிப்போட்டுத்தான் உள்ள போகமுடியும். வைசாலினி எண்ட பிள்ளைக்கு கை போன விசயம் தெரியும்தானே. இதுதான் நிலைப்பாடு. இது சாவகச்சேரிக்கு மட்டும் இருக்கிற பிரச்சினை இல்லை. ஆனா அருச்சுனா பாவம். தான் இன்னும் ‘ஏறியா பொறுப்பாளர்’ எண்டு ஃபீல் பண்ணுது. அவ்வளவுதான்”
“அப்பிடி சொல்லக்கூடாது கிருசு. அந்தப் பெடியன் இப்ப வேலையில்லாமத் திரியிது. பொதுமக்களுக்காக எப்பிடியான தியாகத்தைச் செய்திருக்குது?”
“அண்ணை, அந்தப் பெடியன் மக்களுக்கு சேவை செய்யவேண்டுமெண்டு உண்மையா நினைச்சிருந்தா முதல்ல டக்கரையும் அங்கயனையும் ஏன் மற்ற எம்பிக்களைட்டையும், இல்ல ரணிலிட்டையும் கேட்டிருக்க வேணும். அவரின்ர நிர்வாகத்தைச் சரியாகச் செய்ய இவங்கள் ஆராவது தடையா இருந்தா அதுக்குப்பிறகு இந்த ‘கொம்பிளெயின்ற்’ விசயத்துக்குப் போயிருக்கலாம். இப்பிடித்தான் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியை கொஞ்சம் விரிவாக்க நிலம் கேட்டு டொக்ரர் சத்தியமூர்த்தி கச்சேரி முதல் மாவட்டசபை எண்டு எல்லாம் போராடினார். முதல்ல இந்த அதிகாரியளை ஒஃப்பீஸில கண்டுபிடிக்கிறதே கஷ்டம். அதுக்குப் பிறது அந்தாள் அப்ப ஜனாதிபதியாக இருந்த மைத்திரிக்கு நேர தொலைபேசி எடுத்து அந்தக் காணியை வாங்கி ஆஸ்பத்திரியை விரிவு படுத்திச்சு. அப்பிடித்தான் நாட்டு நிலைமை இருக்குது. அதை விட்டுப்போட்டு ‘ஃபேஸ்புக்’, ‘வட்ஸப்’, ‘யூடியூப்’ மூலம் சமூகத்தை திருத்தலாமெண்டு இந்தப் பெடியன் நினைக்குது. அந்தப் பெடியன்ர அறிவு அவ்வளவுதான். ஒரு டொக்டர் இப்பிடி ‘பிஹேவ்’ பண்ணினா நானும் வேலையை விட்டுத் துரத்திப்போடுவன்”
“என்ன இருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க அருச்சுனாவைச் சந்திக்கக் கேட்டிருக்காம். பெடியன் எங்கயோ போயிட்டான்”
“தமிழ்நாட்டில பிரியாணிக்கும் சேலைக்கும் வாக்குப் போடிற மாதிரி இங்கயும் அரசியல்வாதி ஒருவன் குறுணியை எறிஞ்சவுடனே அதைப் பொறுக்கவெனச் சனம் திரள ஆரம்பிச்சிட்டிது. அப்பிடிப் பழக்கிட்டாங்கள். மைத்திரி வந்தபோது கால்லை விழுந்து அழுத சனம் சம்பந்தன் ஐயாவைத் தூஷணத்தால ஏசிக் கலைச்சது ஞாபகம் இருக்கா அண்ணை. இந்தச் சனத்தைப் பாத்துதான் ரணில் இந்தப்பெடியனைத் தன்ர கட்சியில சேர்க்கலாமெண்டு கனவு கண்டிருக்கும்”
“பெடியன்ர குடும்பம் தமிழ்த் தேசியத்துக்கு கனக்க செய்திருக்கு. தகப்பன்…”
“அருச்சுனாவுக்கு மருத்துவம் எவ்வளவு தெரியுமோ தெரியாது ஆனா ‘மார்கெட்டிங்’ நல்லாத் தெரியும். தகப்பனை வைச்சுத் தன்னை நியாயப்படுத்தப்பார்க்குது. “தமிழனெண்டா ஆரெண்டு சிங்களவனுக்கு காட்டிறன்” எண்டெல்லாம் வீரவசனம் பேசிற பெடியன்ர எதிர்காலம் ஒண்டில் பாராளுமன்றத்தில அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியில தான் இருக்கும்”
“உன்ர ‘பிளட் பிறெசரை’ ஏத்திட்டன் போல இருக்கு. நான் பிறகு வாறன்”
வடிவேலர் மெதுவாக நழுவினார்.(Image Credit: Capitol TV)

best betting tips today (https://travel.Tokajtoday.com/exploring-the-social-side-of-bitcoin-betting-communities/) odds
eurovision song contest