அரேபியனாக்கத்தை நிறுத்துங்கள் | மஹிந்த ராஜபக்ச வேண்டுகோள்

‘சிறீலங்கா முஸ்லிம்கள் தமது கலாச்சாரத்தை அரேபியனாக்கம் செய்வதை நிறுத்திவிட்டு சாதாரண இலங்கை முஸ்லிம் கலாச்சாரத்துக்குத் திரும்ப வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.

ஆப்ரல் 21 குண்டுவெடிப்புச் சம்பவங்களின் தொடர்பில் பதவி விலகிய 9 முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தபோது ராஜபக்ச அவர்களிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

“சிறீசேன-விக்கிரமசிங்க அரசு அப்பாவி முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறியுள்ள போதும் முஸ்லிம் மக்கள் ஒரு சமூகமாகத் தம் மேல் ஏனிந்தப் பழி சுமத்தப்படுகிறது என  உள்ளார்ந்த பரிசோதனைகளையும் செய்ய வேண்டும்” என அவர் அச் சந்திப்பின்போது கேட்டுக்கொண்டார்.

“தீவிரவாதிகளைக்ப் பற்றி நாம் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தோம்” என முன்நாள் மந்திரிகள் கூறியபோது, “பிரச்சினை கொஞ்ச தீவிரவாதிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை அதைவிட அது ஆழமாகப் புரையோடியிருக்கிறது. சமூகத்தின் அரேபியனாக்கதின் விளைவாக சிறிது சிறிதாக அது சிறீலங்கா முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை இழந்துகொண்டு வந்துள்ளது. அரேபியனாக்கம் இதர சமூகங்களை முஸ்லிம் சமூகங்களிடமிருந்து அன்னியப்படுத்தியுள்ளது” எனப் பதிலளித்தார் ராஜபக்ச.

அரேபியனாக்கத்தினால் ஏற்பட்ட இடைவெளி இணக்க முயற்ச்சிகளைப் பாதிக்கும் என ராஜபக்ச கூறியபோது ‘அரபியனாக்கம்’ முஸ்லிம் கலாச்சாரத்தின் ஒரு அங்கம்’ என முஸ்லிம் தலைவர்கள் மறுதலித்தனர். அதற்குப் பதிலளித்த ராஜபக்ச, “பாரம்பரிய சிறீலங்கா முஸ்லிம் கலாச்சாரம் என்னவென்று எனக்குத் தெரியும். எனது அம்பாந்தோட்டை தொகுதியில் கணிசமான முஸ்லிம் சமூகத்தினர் வாழ்கிறார்கள். இந்த அரேபியனாக்கம் ஒரு 10 அல்லது 15 வருடங்களாகத்தான் நடந்து வருகிறது” என்றார்.

“நீங்கள் ஒரு பலமிக்க, செல்வாக்குள்ள தலைவர். பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை” என முஸ்லிம் தலைவர்கள் கேட்டபோது ” நான் ஏற்கெனவே அதைச் செய்துகொண்டிருக்கிறேன். ஆனால் மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் வேலை. கூட்டாக பதவி துறப்பது இந்த விடயத்தை மேலும் சமூக ரீதியாகப் பிளவடையச் செய்வதாகும். ” என்றார் ராஜபக்ச.

நான்கு பெளத்த மகாசங்கங்களின் மடாதிபதிகளும் முஸ்லிம் தலைவர்கள் தமது பதவிகளை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.