அரியாலையில் இயங்கும் சீன நிறுவனம் கெளதாரிமுனையிலும் தன் கடலட்டைப் பண்ணையை விஸ்தரித்துள்ளது
கிளிநொச்சியில் சீன நிறுவனமொன்றினால் நடத்தப்பட்டு வரும் இரு காலட்டைப் பண்ணைகள் அரச்சங்கத்தின் அனுமதியுடன் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.
இப் பண்ணைகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்த யாழ் மாவட்ட மீனவ சங்கங்கள் தமது எதிர்ப்பைக் கைவிட்டமையால் அவற்றை மீண்டும் செயற்பட அரசு அனுமதித்திருக்கிறது.
இன் நிறுவனங்கள் உரிய அனுமதியின்றி பண்ணைகளை நிறுவியுள்ளன என மீனவர்கள் தெரிவித்த எதிர்ப்பைத் தொடர்ந்து இப்பண்ணையின் நடவடிக்கைகளைப் பார்வையிட்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா “யார் செய்தாலும் அதனால் மக்கள் நலம்பெற்றால் நல்லது தானே” என்ற கருத்துப்படக் கூறியிருந்த காணொளி ஒன்று முன்னர் வெளியாகியிருந்தது.
ஆனால் இலங்கையின் தேசிய நீர்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை இதற்கான அனுமதியை 2016 இல் இலங்கை-சீன கூட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கியிருந்தமை பற்றிச் சுட்டிக் காட்டியபோது மீனவர் சங்கங்கள் தமது எதிர்ப்பை நிறுத்திக்கொண்டன எனத் தற்போது தெரியவந்துள்ளது.
கீ லான் பிறைவேட் லிமிட்டட் (Gui Lan Pvt. Ltd), எனப்படும் சீன நிறுவனம், அரியாலைகிழக்கிலுள்ள கடலேரியில், 900 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த பண்ணையை அமைத்திருக்கிறது. ஆனாலும் இந்த அனுமதியைப் பாவித்து இச் சீன நிறுவனம் கெளதாரிமுனையிலும், சட்டவிரோதமாக, தனது நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளது என்று இப்போது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதிமக்களது கடற்தொழில் வெகுவாகப் பாதிக்கப்படுள்ளது.