அரச பணிகளுக்கு விண்ணப்பிக்க தமிழில் சித்தி பெறுவது அவசியம் – தமிழ்நாடு அரசு
தமிழ்மொழிப் பரீட்சையில் குறைந்தது 40% புள்ளிகள் எடுத்திர்ந்தால் மட்டுமே இனிமேல் தமிழ்நாடு அரச பணிகளுக்கு விண்ணப்பிக்கமுடியுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெள்ளியன்று (டிசம்பர் 03) தமிழ்நாடு சட்டமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொதுச்சேவைகள் ஆணையம் மற்றும் ‘குரூப் IV’ பரீட்சைகளை எழுதுபவர்கள் மேலதிகமாக 10 ஆவது வகுப்பு தரத்திலான தமிழ்மொழிப் பரீட்சையையும் எழுதவேண்டுமெனவும் அதில் மொத்தம் 150 புள்ளிகளில் 40% எடுத்திருந்தால் மட்டுமே அரச பணிகளுக்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியுமெனவும் இச்சட்டம் கூறுகிறது. இதற்கு முன்னர் ஆங்கில மொழிப்புலமைக்கான ‘பகுதி A’ தகமையை இது மாற்றீடு செய்கிறது. ஏற்கெனவே பணியிலிருப்பவர்கள் இம் மொழிப்புலமைப் பரீட்சையில் தோற்றி உரிய புள்ளிகளைப் பெறுவதற்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுக்கப்படும் திட்டம் இப்போது நீக்கப்பட்டிருக்கிறது.
அத்தோடு, தமிழ்மொழிப் புலமைப் பரீட்சையில் சித்தியெய்தாவர்களின் இதர பாடங்களுக்கான பரீட்சைத் தாள்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொல்ளப்படமாட்டாது என்பதை விண்ணப்பதாரிகள் அறிந்திருக்க வேண்டுமென மனிதவள முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரச பணிகளுக்கு 100% இம் மாநிலத்தவர்களுக்கே சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண்டுமெனவும், தமிழ் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமெனவும் செப்டெம்பர் மாத சட்டமன்ற அமர்வின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தமைக்கமைய இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களானாலும் தமிழ்நாடு அரச பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு கிராமப்புற அரச பள்ளிகளில் கல்வி கற்ற இளைஞர்கள் அரச பணிகளில் இணைய வாய்ப்புகள் அதிகமுண்டு.
கடந்த வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட பிறிதொரு அரச கட்டளையின்படி, ஆசிரிய பணிகள், காடுகள் முகாமைத்துவப் பணிகள், மருத்துவ சேவைகள், தமிழ்நாடு சீருடைப் பணிகள் ஆகியவற்றுக்கான ஆட்சேர்ப்பு விடயங்களிலும் இதே தமிழ்மொழிப் புலமைப் பரீட்சை அறிமுகப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. (மூலம்: தி நியூஸ் மினிட்)