அரசியல் சாசன உத்தேச வரைவு நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கொழும்பு, ஜனவரி 09, 2019

அரசியல் சாசன உத்தேச வரைவு உதவி சபாநாயகர் ஆனந்த குமரசிறி தலைமையில் நாளை (ஜனவரி 10) காலை 10:30 மணிக்கு கூடப்படவிருக்கும் அரசியல் சாசன நிர்ணய சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. மூன்று மொழிகளும் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை சகல கட்சிகளினாலும் பரிந்துரைக்கபட்ட மாற்றங்களையும் கொண்டுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் கட்சித் தலைவர்கள் அவ்வறிக்கை மீதான தமது கருத்துக்களைக் கூற அனுமதிக்கப்படுவர். இதைத் தொடர்ந்து 1:30 மணிக்குப் பாராளுமன்ற அமர்வு தொடங்கும்.

சாசன வரைவுக்கானஆலோசனைக் குழுவின் தலவரான பிரதமர் விக்கிரமசிங்க செப்டம்பர் 21, 2017 அன்று இதன் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி (2018) அன்று 10 பேரடங்கிய நிபுணர் குழு ஆலோசனைக் குழுவிடம் இவ்வறிக்கை கையளிக்கப் பட்டிருந்தது.

நிபுணர்கள் குழுவில் பேராசிரியர் சூரி றட்னபாலா,பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் ஏ.எம். நவறட்ண பண்டார, என். செல்வகுமாரன், பேராசிரியர் கமீனா குணரட்ண, பேராசிரியர் கபில பெரேரா, சுறேன் பெணாண்டோ, நிறான் ஆன்கெடெல், அசோக குணவர்த்தன, சாமிண்ட்றி சபரமடு ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பரிந்துரையினால் நியமனம் பெற்றிருந்தார்கள். ஏப்ரல் 5, 2016 முதல் இன்று வரையில் ஆலோசனைக் குழு 80 தடவைகள் சந்தித்திருக்கிறது.

செய்தி மூலம்: தி ஐலண்ட்