அரசாங்கம் விரைவில் கவிழும், பல ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எங்களுடன் இணையவுள்ளார்கள் – ராஜித சேனாரத்ன
சிறீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்தவர்கள் உட்பட, அரசாங்கத்திலுள்ள பல அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் விலகவுள்ளதாகவும் இதனால் அரசு விரைவிலேயே கவிழ்க்கப்பட்டுப் புதிய அரசு பொறுப்பேற்குமெனவும் ஜனநாயக மக்கள் சக்தி பா.உ. ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கிறார்.
“இன்று எங்களுடன் எத்தனை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆளுங்கட்சியிலிருந்து விலகுவதற்கு உறுப்பினர்கள் தயாராகவிருக்கிறார்கள். சிலர் நாட்டை விட்டே வெளியேறுவதற்கும் தயாராகவிருக்கிறார்கள். நாங்கள் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்குத் தயாராகவிருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
“மைத்திரிபால சிறிசேன உங்களுடன் இணைந்துகொள்வாரா”? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ” நாங்கள் பன்முக கூட்டணியாகவே அரசை அமைப்போம், அதில் யாரும் இணைந்துகொள்ளலாம். அதன் பிறகு இந்த அரசு கவிழ்க்கப்பட்டுப் புதிய ஆட்சி உருவாக்கப்படும். ஒருநாள் நீங்கள் துயிலெழும்போது நேற்றய இரவு அரசு வீழ்த்தப்பட்டது பற்றிய செய்தியைக் கேள்விப்படுவீர்கள்” எனப் பதிலளித்தார்.
நேற்று பண்டாரகமவில் நடைபெற்ற மருத்துவ உபகரணத் தயாரிப்பு நிலையமொன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டபோதே சேனாரத்ன மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.