World

அரசாங்கத்தைப் பதவி விலகும்படி கோரி செக் குடியரசில் மக்கள் கிளர்ச்சி

70,000 பேர் பங்கேற்றதாக பொலிஸ் தெரிவிப்பு

ரஸ்ய-யூக்கிரெய்ன் போர் முடிவுக்கு வருவதற்கான ஆரம்பம் தெரிகிறது. போரை இழுத்தடித்ததன் மூலம் நேட்டோ மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ரஸ்யா புதிய பாடமொன்றைக் கற்பித்திருக்கிறது. செக் குடியரசில் தற்போது ஆரம்பித்திருக்கும் பாரிய மக்கள் கிளர்ச்சி விரைவில் ஐரோப்பாவின் இதர நாடுகளுக்கும் பரவும் ஆபத்து தோன்றியிருக்கிறது.

நேற்று (செப் 03), செக்கோசிலோவேக்கியா குடியரசின் தலைநகர் பிராக்கின் வென்செஸ்லாஸ் சதுக்கத்தில் நடைபெற்ற அரசுக்கெதிரான மாபெரும் மக்கள் போராட்டத்தில் ஏறத்தாள 70,000 பேர் பங்கேற்றிருக்கிறார்கள். ‘செக் குடியர்சுக்கே முதலிடம்’ என்ற முழக்கங்களோடு மக்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி, தீவிர வலதுசாரியான சுதந்திரக் கட்சி, நேரடி ஜனநாயகக் கட்சி எனப் பல்வேறு எதிரணிகளிலுந்தும் மக்கள் ஒன்றாகக் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். ரஸ்யாவின் எரிவாயுத் தடையால் ஐரோப்பா முழுவதும் எரிவாயு மற்றும் எண்ணை விலைகள் அதிகரித்தது, பண வீக்கம் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பது போன்ற விளைவுகளுக்கு சர்வதேசங்களின், குறிப்பாக மேற்குநாடுகளின், தேவைகளுக்காக செக் குடியரசின் ஆட்சியாளர் இணங்கிப் போனதே காரணம் எனக்கூறி அரசு பதவி விலகவேண்டுமெனக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அயூக்கிரெய்ன் விவகாரத்தில் அரசாங்கம் நடுநிலை வகிக்கவேண்டுமெனவும், ரஸ்யா உட்பட்ட எரிவாயு வழங்கும் நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணவேண்டுமெனவும், ஐரோப்பாவின் விருப்பத்துக்கிணங்க ரஸ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு செக் குடியரசு ஆதரவு கொடுக்கக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இதே வேளை ஜேர்மனியிலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் ஜெர்மனியை முதன்மைப்படுத்தும் கொள்கையைப் பின்பற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஐந்து கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஒன்று தற்போது செக் குடியரசை ஆட்சிசெய்து வருகிறது. நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் மிகவும் சொற்பாமான வாக்குகளால் அரசு கவிழாமல் காப்பாற்றப்பட்டிருந்தது.

அங்கு நடைபெறும் மக்கள் கிளர்ச்சியின் பின்னால் ரஸ்யாவே இருந்து செயற்படுவதாக ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன இருந்தாலும் வரப்போகும் குளிர் காலத்தைச் சமாளிக்க எப்படியாவது எரிவாயுவை இறக்குமதி செய்யவேண்டிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு உண்டு. இதே வேளை வாயுவைக் குழாய்கள் மூலம் அனுப்புவதற்குப் பாவிக்கும் பாரிய சுழலியந்திரங்கள் (turbines) பழுதாகியமையாலும், வருடாந்த செப்பனிடுதல் காரணமாகவும் வாயுக் குழாய்களை முற்றாக மூடிவிடுவதற்கு ரஸ்யா முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் தமது அரசாங்கங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

செக் குடியரசில் தற்போது ஆரம்பித்துள்ள மக்கள் போராட்டம் விரைவில் இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாகப் போரை விரைவில் முடித்துக்கொள்வதற்கான முயற்சிகளில் யூக்கிரெய்ன் இறங்குவதற்குத் தள்ளப்படலாமெனவும் அது ரஸ்யாவின் நிபந்தனைகளை அனுசரித்துப் போவதாகவே அமையுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.