அரங்கேறிய காதை (2) – நோர்வேயில் நாடக விழா


நாடக நெறியாளர் பாலேந்திரா

நோர்வே நாட்டில் முதலாவதாக நடந்த தமிழ் நாடகவிழா

கே.பாலேந்திரா

25 வருடங்களுக்கு முதல் நாம் அவுஸ்திரேலியா, கனடா ,பிரான்ஸ் ,சுவிஸ் ஆகிய நாடுகளில் முதலாவதாக நாம் நடத்திய நாடக விழாக்கள் பற்றி முன்னைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.இந்த நாடக விழாக்கள் 94, 95, 96 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன.1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நாம் நடத்திய நாடக விழாவைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நோர்வே நாட்டில் ஒஸ்லோ நகரில் எமது நாடக விழா நடைபெற்றது.1995ஆம் ஆண்டின் எமது இரண்டாவது சர்வதேச நாடகவிழா இது . மற்றைய நாடுகள் போலவே,நோர்வே நாட்டிலும் நடந்த முதலாவது தமிழ் நாடக விழா இதுவாகும் . எனது நெறியாள்கையில் மழை, பசி ,மன்னிக்கவும் , பாரத தர்மம் , சம்பந்தம் ஆகிய ஐந்து நாடகங்கள் அங்கு மேடையேறின.

கனடா நாட்டில் சிறீஸ்கந்தன் போலவே நோர்வே நாட்டிலும் என்னுடைய ஊரைச் சேர்ந்த நண்பர் ஸ்ரீ தேவா இந்த நாடக விழாவை ஒழுங்கு படுத்தினார்.முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகளை விற்பனை செய்யாமல் ஒஸ்லோ மக்கள் மீது மிகுந்த நம்பிக்கையுடன் அவர் செயற்பட்டார். மண்டப வாயிலிலேயே அனைத்து மக்களும் வந்து நுழைவுச் சீட்டுகளை வாங்கி நாடகம் பார்த்தனர். அரங்கு நிறைந்திருந்தது.அது எனக்கு மிக மனநிறைவைத் தந்தது. அந்தக் காலங்களில் சுவிஸ், பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில் இடம்பெற்ற எமது நாடக விழாக்களுக்கு லண்டனில் இருந்து நாம் முழு வர்ண துண்டுப்பிரசுரங்கள் தமிழில் அச்சிட்டு அனுப்பியுள்ளோம். இந்த நாடுகளுக்கு நாடகத்திற்கான சிறப்பான ஒலிவாங்கிகளையும் லண்டனில் இருந்தே கொண்டு சென்றுள்ளோம்.

கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்த வேளையில் மஞ்சரி, பாரிஸ் ஈழநாடு ஆகிய ஊடகங்கள் ஆதரவு வழங்கின. தவிரவும் பல ஊடகங்களில் எமது நாடக விழாக்கள் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன . நோர்வேயில் நிலைமை வேறு. ஊடகங்கள் மிகக் குறைவு. அந்த நேரங்களில் சமூக வலைத் தளங்கள், smartphone கள் இருக்கவில்லை. இருந்தும் நாடகம் நடைபெறுவது அறிந்து மக்கள் திரண்டமை மகிழ்ச்சி.

வழமையாக நாடக விழா முடிந்தபின் உரையாடல் நடத்துவோம்.ஆனால் நாடகம் முடிந்த அடுத்த நாள் காலையிலே நாங்கள் நோர்வேயில் இன்னொரு நகரமான பேர்கன் நகரத்துக்கு விமானம் மூலம் பயணமாக வேண்டியிருந்தது. அங்கு அடுத்த நாள் பகல் 3 மணிக்கு மூன்று நாடகங்களுடன் நாடக விழா நடந்தது. அதன் காரணமாக நாடக நிகழ்வுக்கு முன்னரே ஒஸ்லோவில் உள்ள கலை இலக்கிய நண்பர்களுடன் ஒரு உரையாடல் நடத்தினோம். பேர்கன் நகரில் சிவரஞ்சித் அவர்கள் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தார். அது குறித்து பின்னர் விபரமாக பதிவேன்.

நோர்வே நாட்டில் எமது நாடக நிகழ்வுகள் மேலும் இரு தடவைகள் நடைபெற்றன. ஒஸ்லோவில் சர்வதேச தமிழர் இதழில் வந்த ஒரு குறிப்பை இன்று பகிர்வது எனக்கு மகிழ்ச்சி. ஒஸ்லோ தமிழ் மியூசிக் சென்ரர் ஆதரவில் லண்டனிலிருந்து வருகை தந்த தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் அளித்த நாடகவிழா, 16.04.95 அன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. பசி, பாரத தர்மம், சம்பந்தம், மழை, மன்னிக்கவும் எனும் ஐந்து நாடகங்கள் தொடர்ந்து நடந்தன.பசி :

இதில் கணவன் மனைவி எனும் இரண்டு பாத்திரங்கள் மாத்திரமே! மீதி அனைத்தும் நிழல் நடிப்பே. மனிதனாகப் பிறந்தது முதல் மதம், கலாசாரம், தத்துவம் என ஏதாவது ஒன்றைப் பிடித்து தொங்கிக்கொண்டுதான் இருக்கிறான். இங்கே தம்பாட்டில் சீவித்த தம்பதியர் வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த ஒரு நாயை வாங்குகிறார்கள். அதுவே அவர்கட்கு பின் தலையிடியாக மாறுகிறது. பலருக்கு இந்த நாடகம் விளங்கவில்லை. ஆனால் சில புத்திசீவிகள் நல்ல நாடகம் என விமர்சித்தனர். சாதாரண மக்களுக்கும் புலப்படும் வகையில் நாடகங்கள் அமைய வேண்டும். அன்றேல் அதிமேதாவிகட்கு மட்டும்தான் நாடகம் எனும் நிலை வந்துவிடும்.

பாரத தர்மம் :

தர்மபுத்திரனை ஒரு சண்டாளன் மறிக்கிறான். அவன் அரக்குமாளிகையில் எரிக்கப்பட்ட தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன். இந்நிகழ்ச்சி பாண்டவர் நரகம் அடையக் காரணமாக இருந்தது. அந்தக்கட்டம் முழுமையாக நடிக்கப்பட்டதால் மக்களுக்கு விளங்கக்கூடியதாக இருந்தது. தாழ்ந்தவனை உயர்ந்தவனும், வலுவற்றவனை அதிகாரம் உள்ளவனும் அடக்கியோ, அழித்தோ விடுகிறான். இதுதான் தர்மமா? இதுதான் நீதியா எனக் கேட்பது மனதைத் தொடுவது.

மழை:

இது ‘பசி’ போன்று முழுக்க முழுக்க மறைக்கப்பட்ட கதை. இரு அர்த்தமான ஆழமான வசனங்கள். நாடக நீளம் சலிப்பானதே. தந்தையின் அடக்குமுறைக்குள் வளரும் மகள் தன் விருப்பப்படி ஒன்றும் செய்ய முடியாத நிலை. நினைத்தாலும் அவளால் செய்ய முடியாத நிலை. பிரச்சினைகளை விட்டு விட்டு ஓடாமல் பிரச்சனைகட்குள் இருந்து, பிரச்சனையை வெல்லவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. எமக்கு விருப்பமான சூழலுக்கேற்ப யதார்த்தத்துடன் வாழவேண்டும் என்பது மிகப் பிடிப்பாக இருந்தது.

சம்பந்தம்:

நகைச்சுவையான ஓர் நல்ல நாடகம். பலரும் ரசித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. முடிவில் நாசூக்காகச் சொல்லப்பட்ட கருத்து அனைவரையும் கவர்ந்தது. ஒரு வயதான மாரடைப்பு வருபவனுக்கு மகளைக் கட்டிவைத்த பின் எழும் பிரச்சனைகள், கௌரவப் பிரச்சனை என்பதே கதை.

மன்னிக்கவும்:

இது அரசியல் பின்னணி கொண்ட நகைச்சுவையான நாடகம். இலட்சியப்பிடிப்புடன் வாழும் சிலர்கூட அரசியல், பணக்கார வர்க்க உறவுகளால் வில்லங்கத்துக்கு இழுக்கப்படுவதும், மூளைச்சலவை செய்யப்படுவதும், இலட்சியங்கள் உடைக்கப்படுவதையும் இது காட்டியது. பாலேந்திரா குழுவினரின் நாடகங்கள் சிறப்பாக அமைந்ததெனினும், நாடகங்களை ஆழமாக்கி ஒரு சிலருக்கு மட்டும் புரியும் செப்படி வித்தை ஆக்காமல் சாதாரண மக்களுக்கும் புரியும்படி எதிர்காலத்தில் நாடகங்கள் அமைவது சிறப்பு எனும் கருத்து இங்கு ஆழமாக வலியுறுத்தப்படுகிறது.லண்டன் தமிழ் அவைக்காற்று கழகம் நாடக உலகுக்கு ஆற்றும் பணி சிறப்புக்கு உரியது. நாடகம் பற்றிய கலந்துரையாடல் நாடகவிழாவுக்கு முன்பாக ஒஸ்லோவில் நடைபெற்றது. இது விழாவின் பின்பு அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஈழத்தின் பிரபல நாடக இயக்குனர் பாலேந்திரா, அவரது பாரியார் ஆனந்தராணி பாலேந்திரா, மகள் மானசி பாலேந்திரா, கிருஷ்ணராஜா, சாந்தகுணம் ஆகியோருடன் ஒஸ்லோ தமிழர்களும் கலந்து கொண்டனர். லண்டன் குழுவினர் தமது நாடக அனுபவங்களையும், தம் நாடகங்கள் (யுகதர்மம், கண்ணாடி வார்ப்புகள், எரிகின்ற எங்கள் தேசம், முகமில்லாத மனிதர்கள்) பற்றியும் எடுத்துக் கூறினர். ஆறு நடிகர்களுடன் நடித்து முடிக்கக்கூடிய நாடகங்கள் இவை என்பது சிறப்பு.சிறுவர்களை நாடகத்துறையில் ஈடுபடுத்தும்போது நல்ல தமிழ் உச்சரிப்பு, குழுவாக இயங்கும் தன்மை, ஒத்துழைப்பு பழகிக் கொள்கிறார்கள். எனவே சிறுவயதில் நாடக ஈடுபாடு கூட்டப்படவேண்டும் எனும் கருத்து வலியுறுத்தப்பட்டது. நாடகம், நடிகர்களைத் தெரிவு செய்தபின் எப்படி உங்கள் நெறிப்படுத்தலை ஆரம்பிப்பீர்கள் என்பதற்கு, “நெறியாள்கை என்பது நாடகத்தை முழுமைப்படுத்தலே ஆகும். தரமான பிரதி (அரசியல், சமூகப் பிரச்சனை) பொருத்தமான நடிகர்கள், முறையான அசைவுகள் (கண், கால், கை, முகம்) திறமான நடிப்பு, உரிய மேடையமைப்பு, ஒலி, ஒளியமைப்பு, தொழிநுட்பம், ஒப்பனை, உணர்ச்சிகளைத் தட்டும் உரமான வசனங்கள், இசை, காட்சிமாற்றம், நேர இறுக்கம், நன்கு திட்டமிடப்படல் அவசியம்” என விளக்கப்பட்டது.