அரங்கேறிய காதை (1) | ‘மழை’


நாடகர் பாலேந்திரா

நாடகர் கே. பாலேந்திரா
நாடகர் கே. பாலேந்திரா

இன்று எனது நெறியாள்கையில் “மழை “ நாடகம் முதல் மேடை கண்டு 45ஆண்டுகள் !நான் தமிழ் நாடக உலகில் தீவிரமாகத் தொடர்ந்து இயங்க எனக்கு ஊக்கம் கொடுத்த நாடகம் “மழை”.

பேராசிரியர் பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய நாடகத்தை இலங்கைத் தமிழில் இலங்கையின் ஊர் பெயர்களுடன் நான் சிறிது மாற்றியமைத்திருந்தேன். என்னுடைய 25 ஆவது வயதில், எனது நெறியாள்கையில் “மழை” நாடகம் கொழும்பு நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்னர், 27-10-1976 இல் கொழும்பு லயனல் வென்ட் கலையரங்கில் மேடையேறி வெற்றி கண்டது.

1970 -1975 காலப்பகுதியில், இந்தக் கலையரங்கில் பல ஆங்கில சிங்கள நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். அப்போது அங்கு தமிழ் நாடகங்கள் மேடையேறுவது குறைவு. இந்த சிறந்த அரங்கில் தமிழ் நாடகங்களைத் தொடர்ந்து மேடையேற்ற விரும்பினேன். ‘மழை’யோடு அது ஆரம்பித்தது.

முதல் மேடையேற்றத்தில் ‘மழை’ வெற்றி கண்டதைத் தொடர்ந்து, 22-01-1977 இல், இரண்டாம் தடவையும் நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக “இரு துயரங்கள்” நாடகத்தோடு மேடையேறியது. பின்னர் நடிகர் ஒன்றிய ரசிகர் அவைக்காக எனது “கண்ணாடி வார்ப்புகள்” நாடகமும் இதே அரங்கில் 03-02-1979 இல் மேடையேறியது.

‘மழை’ நாடகத்தில் ரகு என்ற பாத்திரத்திலும் நான் நடித்தேன். நிர்மலா பாத்திரத்தில் ஆனந்தராணி, டாக்டர் ஜேம்ஸ் பாத்திரத்தில் சுகந்தன் பிளான்சாட் , பேராசிரியர் சந்திரசேகர் பாத்திரத்தில் இர. ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடித்தனர். தொடர்ந்து 40 தடவைகளுக்கு மேல் இந்த நாடகம் உலகின் பல பாகங்களிலும் மேடையேறியது. அனைத்து மேடையேற்றங்களிலும் நானும் ஆனந்தராணியும் 2013 வரை நடித்தோம். 23-09-1978 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மேடை நாடக வரிசையில் ஒலிபரப்பானபோது பல்லாயிரக் கணக்கான ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது. இதன் ஒலி வடிவத்தை அண்மையில் முகநூலில் பகிர்ந்தேன். YouTube இலும் பார்க்கலாம்.