அரகாலய ஜூலை 09: சுற்றி வளைக்கப்படும் கொழும்பு

கோதாவின் இறுதி நாட்கள்?

பல்கலைக்கழகங்களுக்கிடையேயான மாணவர் அமைப்பின் ஆதரவுடன் அரகாலய ஒழுங்கமைப்பாளர்கள் விடுத்த அறைகூவலை ஏற்று நாடெங்கிலுமிருந்து பல இலட்சக் கணக்கான பொதுமக்கள் கொழும்பு நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். ரயில்கள், பாரவண்டிகள், கொள்கலன் வண்டிகள், பஸ்கள், சொந்த வாகனங்கள் எனப் பல வழிகளைப் பின்பற்ரியும் இயலுமானோர் பாதசாரிகளாகவும் கலந்துகொள்ள ஆர்வத்துடன் வந்துகொண்டிருப்பதாகப் பல ருவிட்டர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் மேற்கு மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தைப் பொலிஸ் பிறப்பித்திருந்ததாயினும் சட்டப்படி அது செல்லுபடியாகாது என வழக்கறிஞர்கள் சங்கமும், கூடவே சுமந்திரன் போன்றோரும் எச்சரிக்கை செய்திருந்தனர். இதற்கு முற்று முழுதான பொறுப்பை பொலிஸ் மா அதிபரே ஏற்றுக்கொள்ளவேண்டி வரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் எச்சரித்திருந்தார். இதனால் ஜூலை 08 காலை 8 மணிக்கே சில இடங்களில் ஊரடங்கு அறிவிப்பு மீளப்பெறப்பட்டு விட்டது. கறுவாத் தோட்டம் மற்றும் மாளிகாவத்தை பொலிசாரினால் ஊரடங்கு சட்டப் பிரயோகத்துக்கென கோரப்பட்ட அனுமதிகளை அவ்வப்பகுதிகளின் மாஜிஸ்திரேட்டுகள் மறுத்துவிட்டனர்.

கண்டி போன்ற தூர நகரங்களிலிருந்து புறப்படவிருந்த பல ரயில் சேவைகள் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் அதையும் மீறிப் பல ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பஸ்களில் ‘விரும்பிய கட்டணத்தைச் செலுத்தலாம்’ எனக்கூறி அவற்றின் ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை அழைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்கள் மிகவும் சீரான முறையில் இவ்வார்ப்பாட்டக் காரர்களை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக அரகாலய பிரதிநிதிகள், தொழிலாளர் சங்கங்கள், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள் என நாட்டு மக்களின் சகல தரப்பினரையும் அணுகி ஆதஹ்ரவைக் கேட்டு வந்திருந்தனர். இதுவே கோதா அரசுக்கெதிரான இறுதிப் போராட்டம் என அவர்கள் அறைகூவல் விடுத்திருந்தனர். பெருத்த எண்ணிக்கை அல்லாவிட்டாலும், வடக்கிலும் கிழக்கிலும் தெருக்களுக்கு இறங்கி மக்கள் தமது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள். கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தனது ஆதரவைத் தருவதாகக் கூறினாரென ஒழுங்கமைப்பாள்ர்களில் ஒருவரான அனுருத்த பண்டார தெரிவித்துள்ளார். ஏராளமான மதகுருமார்கள் முன்னணியில் நின்று மனிதக் கேடயங்களாகக் கடமையாற்றி வருகிறார்கள். சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்களும் பாரிய ஊர்வலமொன்றில் இணைந்து நகர நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். கலதாரி போன்ற பிரபல ஓட்டல்கள் ஆர்ப்பாட்டக்காரருக்கு இலவச சிற்றுண்டிகளை வழங்கி வருகின்றன.

இதே வேளை பாதுகாப்பு படைகளை சீருடைகளைக் கழைந்துவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொள்ளுமாறு சரத் பொன்சேகா அறைகூவல் விடுத்துள்ளார். இதற்கிணங்க மகரகமவில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் தனது ஹெல்மெட்டைக் கழற்றி எறிந்துவிட்டு ஆர்ப்பாட்டக் காரர்களை வாழ்த்தும் காணொளியொன்று சமூக வலைத் தளங்களில் பிரபலமாகி வருகிறது. வேறு பலரும் இவரைப் போல இணைந்துகொள்ளும் பட்சத்தில் இரத்தக் களரி ஒன்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உண்டு.

அமைதியாக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களைத் தடுக்க வேண்டாமென ஐ.நா. மனித உரிமைகள் சபை இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் வன்முறையற்ற ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுள்ளார்.

விசேட செயணிகள் உட்படப் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எல்லாமே அமைதியாக இருப்பதாகவும் தெருக்களில் வாகனங்கள் சுமுகமாகச் செல்லக்கூடிய மாதிரி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒழுங்காக நடந்துகொள்கிறார்கள் எனவும் ருவிட்டர் செய்திகள் தெரிவிக்கின்றன.