அய்யோ!: 8 மாதங்கள் வெற்றிகரமாக இயங்கிய போலி காவல் நிலையம்!
உண்மையான நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் …?
இந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள பாங்கா நகரில் இயங்கிய போலி காவல் நிலையமொன்று பல நூற்றுக்கணக்கான மக்களை மிரட்டிப் பெருந்தொகையான பணத்தை அபகரித்த விடயம் தற்போது வெளிவந்திருக்கிறது.
அசல் காவல்துறை சீருடைகளில் இயங்கிய இக் காவல்துறையினர் நகரத்தின் உண்மையான காவல் நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஓட்டல் ஒன்றிலிருந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அந்நகரத்துக் காவலதிகாரிகளைப் போலவே பாசாங்கு செய்த போலி அதிகாரிகள் காவல்துறையினர் பாவிக்கும் துப்பாக்கிகளையே பாவித்தனர் என அந்நகரத்து உண்மையான தலைமையதிகாரி ஷாம்பு யாதவ் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்கள் தமது குற்றம் குறைகளை முறைப்பாடு செய்ய வரும்போது அதற்குக் கட்டணமாக ஒரு தொகையை அறவிட்டு வந்தனர் எனவும் சமூக வீடுவழங்கல் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெறுபவர்களுக்கான விண்ணப்பங்களுக்கெனவும், காவல்துறையில் வேலை பெறுவதற்கெனவும் கட்டணங்களை வசூலித்துவந்தனர் எனவும் இத்தொகை சிலவேளைகளில் $900 வரை (INR 70,000) இருக்குமெனவும் ‘உண்மையான’ காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இப் போலிக் காவல் நிலையத்தில் பணிபுரியும் உள்ளூர் அலுவலர்களுக்கு நாளொன்றுக்கு $6 (INR 500) சம்பளமும் வழங்கப்பட்டு வந்ததெனத் தெரிகிறது.
இக் காவல்துறையில் பணிபுரிந்த காவல் அதிகாரி ஒருவர் காவல்துறைனர் பாவிக்காத துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததை அதிகாரி யாதவ் அவதானித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இவ் விடயம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
இவ்விடயம் தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இக் குழுவின் தலைவர் எனக்கருதப்படுபவர் தப்பிவிட்டதாகத் தெரிகிறது.
போலி காவலதிகாரிகளாகச் செயற்பட்ட பல சம்பவங்கள் இந்தியாவில் நடைபெற்றிருந்தாலும் ஒரு போலிக் காவல் நிலையத்தை அதுவும் நீண்ட காலத்துக்கு நடத்திவந்த சம்பவம் இதுவே முதலாவதாகும்.