அய்யோ! – புதிய இராஜாங்க அமைச்சர்களின் பரிதாப நிலை
இலவச iphone பறிக்கப்படுகிறது
மாயமான்
நாடு டொலர் வற்றிப் போனாலும் ரணில் விக்கிரமசிங்க தனது கூட்டாளிகளினது பைகளை ரூபாய்களால் நிரப்பித் தள்ளுகிறார்.
37 இராஜாங்க அமைச்சர்களை எடுத்துக்கொள்வோம். இவர்களில் நால்வர் சுதந்திரக்கட்சியிலிருந்து தாவியவர்கள். Yes, தமிழர் நிலை குறித்துக் கனடாவில் கண்ணீர் விட்டுச் சென்ற நம்ம சுரேன் ராகவன் உட்பட. பாவம் அந்தாள் அவசரப்பட்டு கனடிய குடியுரிமையைத் துறந்து விட்டது. அதற்காக ரணில் இரங்கி அவருக்கும் இதர 36க்கும் வாரி வழங்கியிருக்கிறார்.
சனம் குழம்பிப் போய்விடும் என்ற படியால் இந்த இ-அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட இலவச i-போனைப் பறித்து ஜில்மால் காட்டினாலும் அவர்களுக்கு வழங்கப்படும் இதர சேவைகளை இரகசியமாக அதிகரித்திருக்கிறார். உதாரணத்துக்குச் சில:
- மாதம் ரூ.40,000 தொலைபேசி அழைப்பு மற்றும் data பாவனைக்கு
- ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா மூன்று SUV வாகனங்கள்
- தலா 11 உதவியாளர்கள். இவர்களது ஃபோன் கட்டணங்கள் மாதம் ரூ.5,000 வரை திருப்பிச் செலுத்தப்படும்
- ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா 500 லீட்டர் பெற்ரோல் அல்லது டீசல் (மாதம் ரூ 270,000)
- அவர்களது பிரதான அமைச்சுகளில் சொகுசான அலுவலகங்கள்
- கொழும்பில் வீடுகள்
- அரச செலவில் வீட்டுப் பணியாளர்கள்
- ரூ 350,000 பெறுமதியான முத்திரைகள்
- பாராளுமன்ற மற்றும் இதர குழுக் கூட்டஙகளுக்கு சமூகமளித்தால் அதற்குச் சம்பளம்
இத்தனைக்கும் பாவம் இந்த அமைச்சர்கள், நாடு மக்கள் படும் துன்பத்தை மனதில் கொண்டு தமக்குரிய மாத சம்பளத்தை எடுக்கப்போவதில்லை எனவும் கூறப்படுகிறது. அது உண்மையானால அது அவர்களது பெருந்தன்மை.
இதனால் மக்களுக்குக் கிடைக்ககூடிய ஒரு நன்மை – பெற்றோல் ஸ்டேசன்களிலும் தபால் கந்தோர்களிலும் வரிசையில் நிற்காமல் இந்த அமைச்சர்களின் வீடுகளின் கொல்லைப்புறங்களில் அவற்றைக் கழிவு விலையில்பெற்றுக்கொள்ளலாம். வேலையில்லாமல் வெளிநாடு போவதற்கு ஏஜென்சிக்காரருக்குக் காசு கொடுத்த்திருந்த அமைச்சர்களின் உறவினர்களுக்கு உள்ளூரிலேயே தாராளமாக வேலை கிடைக்கும்.
ரணில் விக்கிரமசிங்கவின் இத் திடீர் நடவடிக்கையால் கட்சி மாறுவதற்குப் பல உறுப்பினர்கள் முண்டியடித்துக்கொள்வதாகக் கேள்வி.
ஒரு ஒப்பீட்டுக்கு யாழ் நகர பிதா மணிவண்ணனின் மாதச் சம்பளம் ரூ. 30,000. அதை வங்கியில் போட்டு எடுப்பதற்கான செலவு அதிகமோ என்னவோ அவர் அப் பணத்தைத் தான்ம் செய்துவிடுவதாகவும் கேள்வி.
பி.கு.: அமைச்சர்களுக்கு i-ஃபோன் சார்ஜர் இலவசமாக வழங்கப்படுமா என்பதை, இவ்விடயம் தரவேற்றப்படும்வரை, ஜனாதிபதி அலுவலகம் முடிவேதும் எடுக்கவில்லை.