Spread the love
மாயமான்

பெப்ரவரி 6, 2020

வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பசில் ராஜபக்ச தன் விடுமுறை வீட்டிலிருந்து சில நாட்களின்முன் திரும்பி வந்திருந்தார். அவரது கோடரியும் கூர்ப்படுத்தப்பட்டபடியே அவருடன் திரும்பி வந்திருக்கிறது.

செய்திகள் உண்மையானால், மைத்திரிபால சிறிசேனவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இன்னுமொரு கிளையை பசில் வெட்டி எடுப்பார் போலிருக்கிறது.

கிங் மேக்கர் பசிலும், டீல் மேக்கர் மஹிந்தவும், ஃபிஸ்ட் மேக்கர் கோதாவும் உள்ள கட்சியுடன் மைத்திரிபால சிறீசேன டீல் போடப் பார்த்தார், முடியவில்லை. எதிர்பார்த்ததுதான். எல்லோரும் ரணில் போலவென எதிர்பார்த்திருப்பார் போல. ஐயோ..பாவம் மைத்திரி.

சிறீலங்கா சுதந்திரக் கட்சிப் பாண்டத்தின் அடியில் லீக் இருப்பது மைத்திரிக்குத் தெரியவில்லை. இன்னும் கொஞ்ச உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுக்குத் தாவப் போகிறார்களாம்.

பக்கத்தில் ஐ.தே.கட்சி முகாமிலும் ஒரே களேபரம். போகிற போக்கில் சஜித் பிரேமதாசவே பெரமுனவில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

ரணில் கழுவும் மீனுக்குள் நழுவும் மீன் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் நழுவி மீண்டும் பாத்திரத்துக்குள்ளேதான் விழுவார் என்பது நிச்சயம்.

சஜித் பிரேமதாசவும் இன்னுமொரு மைத்திரிபால சிறிசேனதான். பாவம், தகப்பன் தன்னைப் போல ‘ஸ்ட்றீட் ஸ்மார்ட்’ ஆகப் பிள்ளையை வளர்க்கவில்லை. சுற்றிவர இருப்பவர்களும் மீன் பிடிக்கிறார்களோ இல்லையோ, குட்டையைக் குழப்புகிறார்கள்.

ராஜபக்சக்கள் ஒரு வகையில் ஜெனெட்டிக்கலி மொடிஃபைட் ஓர்கானிஸ்ம்ஸ். எல்லோரும் பல நாக்குகளுடன் பிறந்திருக்கிறார்கள். எந்த சபைக்கு எப்படிப் பேசவேண்டுமென்ற கலையை அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாமலும் ரோகிதவும் தமிழ் இளைஞர்களைக் குறிவைத்தார்கள். சித்தப்பர் ஜனாதிபதியாக வந்த மறுநாளே சிறையிலிருக்கும் தமிழர்களை வண்டியிலேற்றி யாழ்ப்பாணத்தில் இறக்கிவிடப் போவதாக நாமல் சூளுரைத்தார். அவுஸ்திரேலியா படகுச் சேவை அவருடையதென்றும் ஒரு கேள்வி. எல்லாம் கைக்காசு வியாபாரம், கணக்குக் காட்டத் தேவையில்லை. ஏறினாலும் ஆயிரம் பொன், இறங்கினாலும் (திரும்பி வந்து) ஆயிரம்பொன், இறங்காவிட்டாலும் ஆயிரம் பொன் (கேட்க ஆளில்லை).

பாவம் அவுஸ்திரேலியா. சோதிட பலனை பில் போர்ட்டில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுவதற்குப் பெரும்பணம் செலவழிக்கிறது. அதைவிட காடுகளுக்கு மத்தியில் அவற்றை ஒட்டியிருக்கலாம்.

தமிழ்த் தேசீயக் கூட்டமைப்புள்ளும் இழுபறியென்று கேள்வி. பாவம் சம்பந்தன் ஐயா. முகநூற் போராளிகள் ஏற்கெனவே அவருக்கு ‘மாலை’ போட்டு வழியனுப்பி விட்ட பிறகும் இன்னும் மாவையா, சீவி.கேயா, விக்கியா என்ற குடுமிச் சண்டையைப் பார்த்துச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவுஸ்திரேலியாக் காரரிடம் ஒரு தடவை சாதகத்தைக் காட்டிப் பார்க்கலாம்.

என்னவோ அய்யோ பாவம், தமிழர் தான் தமது சாதகங்களை நல்ல சாத்திரியிடம் கொடுத்துப் பார்க்க வேண்டும்.

Print Friendly, PDF & Email