IndiaSpirituality

அயோத்தி இந்துக்களுக்குரியது | உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

முஸ்லிம்களுக்கு மாற்றீடாக வேறு நிலம் வழங்கப்படும்
Hindu devotees celebrate after the Supreme Court's verdict [Danish Siddiqui/Reuters]
தீர்ப்பைக் கொண்டாடும் இந்துக்கள் படம்: டானிஷ் சித்திக் / ராய்ட்டர்ஸ்

அயோத்தியிலுள்ள பிரச்சினைக்குரிய பாபர் மசூதியிருக்கும் நிலம் இந்துக்களுக்குரியது என ஐந்து நீதிபதிகளைக் கொண்ட இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு மனதாகச், சற்று முன்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முஸ்லிம்களுக்கு, மாற்றீடாக உததரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் 5 ஏக்கர் நிலம் கொடுக்கப்படுமெனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதே வேளை பிரச்சினைக்குரிய நிலத்தில், இந்துக்கள் தெய்வமாகக் கருதும் இராமருக்குக் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையொன்றை அரசு உருவாக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தீர்ப்பில் எங்களுக்குத் திருப்தியில்லை எனினும் அதை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் கலந்தாலோசித்து அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிக்கவிருக்கிறோம்” என சுனி வாக்ஃப் சபையின் வழக்கறிஞர் சஃபார்யப் ஜிலானி என்டிரிவி செய்தி ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியின்போது தெரிவித்தார்.

பாபர் மசூதி

தீர்ப்பு ‘பிரச்சினைக்குரியது’ என நல்சார் சட்டத்துறைப் பலகலைக்கழக உப வேந்தர் ஃபைசான் முஸ்தாபா கருத்துத் தெரிவித்துள்ளார்.

“இராமர் இங்கு தான் பிறந்தார் என்று இந்துக்கள் நம்பினால் அதை நாம் மீற முடியாது” என நீதிபதிகள் கூறியிருந்ததாகவும் மத நம்பிக்கைக்கு, சட்டத்திற்கும் மேலான இடம் வழங்கப்பட்டது புதிராகவே இருக்கிறது. நீதிபதிகள் தங்களால் இயன்றவற்றைச் செய்திருக்கிறார்கள். அதை நாம் ஏற்றுக்கொள்ளாத்தான் வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கோவிலைக் கட்டும் பணியை நிர்வகிக்க அரசினால் மூன்று மாதங்களுக்குள் ஒரு அறங்காவலர் சபை நியமிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான மாற்றிடம் மத்திய அல்லது மாநில அரசுகளினால் தீர்மானிக்கப்படும்.

இப் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே இரு சமூகங்களுக்குமான சமாதானத்தைப் பேணும் நோக்கத்துடன் முஸ்லிம் புத்திமான்கள் மாற்றிடம் பற்றிய ஆலோசனையை வழங்கியிருந்தனர் என அறியப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பா.ஜ.க. ஆதரவாளர்கள் உட்பட, இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள், பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் எனவும், முதலாம் முகலாய சக்கரவர்த்தி பாபர், ராமர் கோவிலை இடித்துவிட்டு அதன் மேல் தான் மசூதியைக் கட்டினார் எனவும் நன்புகிறார்கள்.

1949 இல் இந்துக்கள் ராமரின் சிலைகளை இங்கு வைக்கும் வரை, பல தலைமுறைகளாக அங்கு வழிபட்டு வந்ததாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

460 வருடப் பழமை வாய்ந்த மசூதி 1992 இல் இந்துத் தீவிரவாதிகளால் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக் கலவரத்தில் சுமார் 2000 பேர், பெரும்பாலும் முஸ்லிம்கள், கொல்லப்பட்டிருந்தார்கள்.

பாபர் மசூதி வெற்று நிலத்தில் கட்டப்படவில்லை, அங்கு ஏற்கெனவே ஒரு கட்டிடம் இருந்தது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின்போது குறிப்பிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கீழ் நீதிமன்றத் தீர்ப்பின்போது, மொத்த நிலத்தின் (2.77 ஏக்கர்கள்) மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களுக்கும், மிகுதி முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமெனச் சொல்லப்பட்டது. இதை இரு பகுதியினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் போடியும், முஸ்லிம் அமைப்புக்களும் தமது ஆதரவாளர்களை அமைதியைப் பேணும்படி கேட்டுக்கொண்டனர். பல்லாயிரக் கணக்கான பாதுகாப்புப் படையினர் அயோத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர். சில நகரங்களில் இணையத் தொடர்புகள் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

ராமர் பிறந்த நிலத்தில் அவருடைய கோவில் மீள நிர்மாணிக்கப்படவேண்டுமெனப் பல வருடங்களாக பா.ஜ.க. பிரச்சாரம் செய்து வந்தது. இத் தீர்ப்பு பிரதமர் மோடிக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இவ் விடயத்தைப் பேசித்தீர்ப்பதற்கு பிரித்தானிய அரசு மற்றும் தலாய் லாமா ஆகியோரும் முன்னர் முயற்சிதிருந்தனர்.