அம்ஷியின் (தற்)கொலை: ஜனாதிபதியே பொறுப்பேற்கவேண்டும்
சிவதாசன்
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் குதித்தபோது அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் ஊடக அறிக்கைகள் போன்றவை இதர சிங்கள கட்சிகளுடன் ஒப்பிடும்போது நம்பிக்கை தருவனவாக இருந்தன. இருப்பினும் அக்கட்சியின் கட்டளைத் தலைமையகம் இன்னும் ஜே.வி.பி. யின் கூடாரத்திலேயே இருக்கிறது; ரில்வின் சில்வா போன்ற சிங்கள பெளத்த அதி தீவிரவாதிகளின் கட்டுப்பாடு இன்னும் தளரவில்லை; அனுரா, ஹரிணி போன்ற குழந்தை முக நடிகர்களை முன்தள்ளிக்கொண்டு ஜே.வி.பி. தேர்தலுக்காக ஆடும் நாடகமே இது என நான் எழுதியபோது முற்போக்கு சிந்தனை கொண்ட சில நண்பர்கள் “அவர்கள் மாறியிருக்கலாம், எதற்கும் அவர்களுக்கு கால அவகாசத்தைக் கொடுத்துப் பார்ப்போம்” எனக்கூறியிருந்தார்கள். இன்றைய நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பி வந்த லயனல் போபகே உட்பட்ட பல சிங்கள முற்போக்குவாதிகளும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்து மிகுந்த ஏமாற்றம் கொண்டவர்களாக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி புதிய மொந்தையில் பழைய கள் என்பதைக் கடந்த சில மாதங்களில் அது இயங்கிவரும் முறை துல்லியமாகக் காட்டியுள்ளது. குறிப்பாக சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற அம்ஷி என்ற மாணவியின் மரணம். இம்மரணத்தை ஒரு தற்கொலை எனற விவரணத்திற்குள் அடக்கிவிட முடியாது. கிணற்றுக் கட்டு வரை தள்ளிக்கொண்டுவந்து விட்டு விட்டு “அவள் கிணற்றுக்குள் பாய்ந்துவிட்டாள்; அவளுக்கு மன நோய்” என்று இலகுவாகச் சிலுப்பிவிட்டுப் போய்விட முடியாது. ஆனாலும் அனுரவின் அமைச்சர் சரோஜா அதையேதான் கூறியிருக்கிறார். ஜே.வி.பி. யின் ஏவலுக்குப் பணிவது அவரது விருப்பு வெறுப்புக்குட்பட்டது. ஆனால் ஊரார் நீதிமன்றத்தின் தீர்ப்பு மன நோய் அமைச்சருக்கே என்பதாகவே இருக்கும்.
‘அம்ஷிக்கு மனநோய்’ எனத் தீர்ப்பு வழங்க (judge-jury-executioner) அரசாங்கம் ஏன் இவ்வளவு தூரம் அவசரப்படுகிறது என ஆராய்ந்தால் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்றவாறு அரசு குதிருக்குக் காவல் போட்டிருப்பது தெரியவருகிறது.
அம்ஷியின் மரணத்தோடு சம்பந்தப்பட்டவரென ஊரே குற்றங்சாட்டும் ஒருவர் தேசியமக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எனப்படுகிறது. தான் குற்றவாளியல்ல என நிரூபிக்க அவர் முகநூல் நீதிமன்றத்திடம் தன் பக்க நியாயத்தை ஒப்புவித்திருந்தார். உண்மையில் ஊர் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட கட்சிக்காரரைக் கட்சி நிர்வாகம் தீர விசாரிக்காது அவரது முகநூல் ஊளையை ஊதிப்பெருப்பிக்க உதவி செய்வது தான் கட்சியின் கபடத்தனம். குற்றவாளியைக் குதிருக்குள் மறைத்துவைத்துக்கொண்டு கட்சியே காவல்துறையை வேறு திசையில் திருப்பிவிடும் அபாண்டம்.
அம்ஷியின் (தற்)கொலைக்கு நீதி கேட்டு மக்கள் மே 10ம் திகதி மாபெரும் போராட்டமொன்றை நிகழ்த்தியிருந்தார்கள். மக்கள் சக்தி தமக்கெதிராகத் திரும்புகிறது எனப் பயந்த ஜே.வி.பி. (என்.பி.பி.) தமது கட்சிக்காரர் முகநூலில் இட்ட ஊளையைத் தமது கட்சியின் பணத்தைச் செலவழித்து பெரும் விளம்பரமாக்கி (Facebook Post Boost) அவரை நிரபராதியாக்க முனைந்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமது கட்சிக்காரரை நிரபராதியாக்க கட்சி தனது சொந்தப்பணத்தில் US$200 வரை செலவழித்திருக்கிறதென்றால் நீதி பரிபாலனம் பற்றி மக்களுக்கு வகுப்பெடுக்க இக்கட்சிக்கு அருகதையேது?
அம்ஷியின் நீதிக்கான பயணத்தில் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியின் பிரதிந்திகளாக வலம் வருபவர்கள் இணைந்து தமது கட்சிக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் அல்லது தமது பதவிகளைத் துறந்துவிட்டு நியாயத்தின் பால் நிற்க வேண்டும்.

Source: FB Post – Rajkumar Rajeevkanth May 11 @ 9:03 AM
