Columnsபிரியதர்சன்

அம்மா.. இனி இல்லை என்றாகிப் போனபோது | பிரியதர்சன் பக்கங்கள்

பிரியதர்சன் பக்கங்கள்..05

பருத்தித்துறையில்  எங்களுக்கோர் வீடு இருந்தது. இப்போதும் இருக்கிறது.
இன்றைக்கு யார் குடியிருக்கிறார்கள் என்பது தெரியாது. தெரிந்தும் ஒன்றும்  ஆகப்போவதுதில்லை. விட்டகன்று முப்பது வருடங்கள் கடந்தாயிற்று. இன்னும் அதுவே எங்கள் வீடென்ற நினைப்பு.
வயது போன காலத்தில் அங்கு போய் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை.
அப்படி ஆசைபடுகிற பல நண்பர்களையும் பார்த்திருக்கிறேன்.
ஊர் வீடுகள் முழுக்க சின்ன வயது ஞாபகங்கள் நிரம்பி கிடக்கும். அம்மாக்களுக்கு அது பிள்ளைகள் தவண்டு விளையாடிய பூமி.
இதுவே புலம்பெயர்ந்து வாழ்கிறவர்களை இப்படி சொல்ல வைக்கிறது.  

கண்டியிலும் கொழும்பிலும் பிறகு கனடாவிலுமென குறைந்த பட்சம்  பத்து வீடுகளிலாவது குடியிருந்திருப்பேன். எல்லா வீடுகளும் ஊரில் இருந்ததை விட விசாலமானது. வசதிகள் அதிகம் இருந்தது.
இருப்பினும் ஊரில் இருந்த குட்டி வீடு தந்த திருப்தியும் அதில் இருந்த பிணைப்பும் இங்கெல்லாம் கண்டறியேன்.
வெறும் சுவர்களும் சுற்றி இருக்கிற வசதிகளும் நல்ல வீடுகள் ஆகாது போலும்.
வீடு பற்றிய நினைவு வரும் போது கூடியிருந்த மனிதர்களும் உலாவித்திரிந்த ஊரும் கண்ணுக்குள் வரும்.
அம்மா, அப்பா .அந்த வீடு ,கூடப்பிறந்தவர் சுற்றியிருந்த மனிதர்கள் இதுவெல்லாம் மீண்டும் ஒரு முறை வாய்க்காதா என பல முறை ஏங்கியிருக்கிறேன்.
இனி அதுவெல்லாம் முடிந்துபோன கதை.

ஊர் வீட்டில் படுத்துறங்கிய கடைசி நாள் இப்போதும் நினைவிருக்கிறது. எண்பத்துநான்கின் கடைகூற்றில் ஒரு நாள், இராணுவம் வீட்டை சுற்றி வளைத்தது.வெளியில் தப்பியோட வழியில்லை.
கம்யூனிஸம் பேசுகிற சில புத்தகங்ளோடும்  கொஞ்சம் துண்டுபிரசுரங்களோடும் மாட்டிக்கொண்டேன்.
ஒரு நொடிப்பொழுதில் துண்டுபிரசுரங்கள் அம்மாவின் சேலைக்குள் மறைந்தது.
இராணுவம் வீட்டை சல்லடை போட்டது. எதுவும் கைக்கு கிட்டவில்லை. இருப்பினும் தலையாட்டி தப்பாமல் ஆட்டியது.  ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் வெலிக்கடையும் பூசாவும் என வாழ்கை தொலைந்து போனது.நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். முன்பின் தெரியாத குமார் பொன்னம்பலம் காசு வாங்காமல் கோட்டில் என் பக்கம் நின்றார். கைது செய்யும்போது எனக்கு பதினாறு வயது என்று சொன்னார். வீட்டில் எதுவும் பிடிபடவில்லை என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னார்.
நீதிமன்றம் விடுதலை செய்ய சொன்னது.
அம்மாவுக்கு அரசியல் தெரியாது. சட்டம் பற்றிய பெரிய புரிதல் கிடையாது. தேவைப்படுகிறபோது அம்மாக்கள் பிள்ளைகளுக்காக எதையும் எப்போதும் செய்வார்கள். செய்தார்கள்.

பின்னொரு நாளில் ஒரு அனாதை போல வெள்ளவத்தையில்  குமார் பொன்னம்பலம் சுடுபட்டு கிடந்தார்.
நெஞ்சு வலித்தது.

இயக்கங்களுக்குள் சண்டை மூண்டது. பிறகெல்லாம் யார் யாரை எதற்கெல்லாம் சுடுகிறார்கள் என்பதே தெரியாமல் போனது.
கூடப்படித்த சில நண்பர்களின் இல்லாமல் போன செய்தி ஒன்றன்பின் ஒன்றாக வந்தது.
அம்மாவின் முகத்தில் பெரும் பயத்தை  பார்த்தேன்.
இப்படித்தான் ஊரையும் வீட்டையும் விட்டகன்றேன்.

இன்றைக்கு அம்மா இல்லாமல் போன செய்தி வந்து சேர்ந்தது.

அம்மா..
இனி இல்லை என்றாகிப் போனது.
வயோதிபம் பிறகு வலி தருகிற மரணம்.
இதுவே வாழ்வின் அந்திம காலமானது.

இருக்கிற போதும் இல்லாமல் போன பிறகும் பிள்ளைகளுக்காய் வாழ்ந்தார் என்பதை தவிர எதை சொல்ல?

தொடரும்…