Sri Lanka

அம்பிட்டிய மீது சட்ட நடவடிக்கை எடுக்காமை பற்றி சுமந்திரன் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அட்டகாசம் செய்துவரும் மங்களராமய அம்பிட்டிய சுமண என்பவர் கடந்த வாரம் மட்டக்களப்பில் தமிழர்கள் மீது வசை பாடியதுமல்லாது விடுத்திருந்த கொலை மிரட்டலை அடுத்து அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அம்பிட்டிய மீது நடவடிக்கை எடுக்காமை குறித்து அக்டோபர் 27 அன்று பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் ” வண. சுமண தேரர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் ராசமானிக்கம் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாது தென்னிலங்கையில் வாழும் தமிழர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன் என எச்சரித்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

“(அம்பிட்டியவின்) இக் கொலை மிரட்டல் சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச விதி இல.56 / 2007,பிரிவு 3(1), (2) இன் கீழ் தண்டனை கொடுக்கப்படவேண்டிய ஒரு குற்றம். அப்படியிருந்தும் பொலிசார் ஏன் அவர் மீது உடனடியான நடவடிக்கை எடுக்கவில்லை” சுமந்திரன் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.

“நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்தே இச்சட்டம் பக்க சார்பாகப் பாவிக்கப்படுகிறதா என்பதை அறிய முடியும். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இச்சட்டம் அரசாங்கத்துக்கு எதிரானவர்கள, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது மட்டும் பாவிக்கப்படுமொன்று என்றே கருத வேண்டிவரும்” என சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

இச்சமபவத்தைத் தொடர்ந்து “அம்பிட்டியவைக் கைது செய்யுங்கள் அல்லது அங்கொடையில் சேர்த்துவிடுங்கள்” என பா.உ. மனோ கணேசனும் கூறியிருந்தார்.

கடந்த வாரம் மட்டக்களப்பில் அம்பிட்டிய நடத்தியிருந்த அட்டகாசம் வலைப்பதிவுகளாக உலகெல்லாம் பரவியிருந்தது.