News & AnalysisSri LankaWorld

அம்பிகை உண்ணா விரதம் | தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது லண்டன் பொலிசார் தாக்குதல்

லண்டனில் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர் மீது பொலிசார் குண்டாந்தடித் தாக்குதல்

உண்ணாவிரதமிருந்துவரும் லண்டனைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக நேற்று (ஞாயிறு) ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது லண்டன் மெற்றோபொலிட்டன் பொலிசார் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

 

உண்ணாவிரதமிருக்கும் அம்பிகை செல்வகுமார்

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிசார் முயன்றபோது இரு பகுதியினருக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து பொலிசார் ஒருவரைக் கைது செய்ய முயன்றதாகவும் அதனைத் தொடர்ந்து பொலிஸ் ஆர்ப்பாட்டக்காரர் மீது குண்டாந்தடித் தாகுதல்களை மேற்கொண்டனரெனவும் அறியப்படுகிறது.

கென்டனைச் சேர்ந்த அம்பிகை செல்வகுமார் 16 நாட்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறார். ‘இனப்படுகொலையைத் தடுப்பதற்கான சர்வதேச மையத்தின்’ பணிப்பாளரான இவர் நீராகாரத்தை மட்டுமே அருந்திவருகிறார் எனக் கூறப்படுகிறது.

செல்வகுமாருக்கு ஆதரவாக பிரித்தானிய தொழிற்கட்சி பா.உ. சாம் ரறி உட்பட, உலகெங்குமிருந்து அரசியல்வாதிகளும், தனிப்பட்டவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஷூபிரிட்ஜ் மற்றும் டாக்டர் மெஹ்ரீன் ஃபரூக்கி ஆகியோர் அம்பிகாவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச சமூகம் இலன்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ், சுவிட்சர்லான்ந்து ஆகிய நாடுகளிலும் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.