அம்பிகா சற்குணநாதனுக்கு எதிரான இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு 47 அமைப்புகள், 161 மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்
முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணையரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்குப் ப்ரிந்துரைக்கப்பட்டிருந்தவருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சமீபத்தில் ஐரோப்பிய பாராளுமன்ற மனைத உரிமைகள் துணைகுழுவுக்கு எழுதியிருந்த கடிதத்தை வன்மையாகக் கண்டித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. இவ்வறிக்கையைக் கண்டித்து இலங்கையிலுள்ள 47 மனித உரிமைகள், சிவில், பெண்கள், பாதிக்கப்ப்ட்டோர் அமைப்புகள் மற்றும் பல்வேறு வகையான செயற்பாட்டு அமைப்புகளும், மூவினத்தையும் சேர்ந்த கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய 167 தனிப்பட்டவர்களும் கையெழுத்திட்டு அம்பிகா சற்குணநாதனுக்கு ஆதரவாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்கள்.
நீலன் திருச்செல்வம் அறப்பணி நிற்வனத்தின் சார்பாக, சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் அவர்கள் ஜனவரி 27, 2022 அன்று ஐரோப்பிய பாராளுமன்ற மனித உரிமைகள் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் இலங்கையில் தொடரும் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீறல்கள் தொடர்பாகக் குறிப்பிட்டதுடன் அரசு தன் மக்களைப் பாதுகாக்கவேண்டிய கடமைகளிலிருந்தும் சர்வதேச கடமைகளிலிருந்தும் வழுவி விட்டதென்றும் அதற்குப் பரிகாரமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேசங்கள் செய்யவேண்டிய சில பரிந்துரைகளையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இக்கடிதம் தொடர்பாக கடும் விசனத்துக்குள்ளான இலங்கை அரசாங்கம் அதன் வெளிவிவகார அமைச்சினூடாக, அம்பிகா சற்குணநாதனைக் கண்டித்து பெப்ரவரி 4 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்றங்களை புறக்கணித்துவிட்டு, மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் மற்றும் ஐ.நா. பொறிமுறைகளுடன் நீண்ட காலமாக உரையாடலை மேற்கொண்டுவரும் இந்த வேளையில் உண்மைக்குப் புறம்பான விடயங்களைச் சொல்வதன் மூலம் எமது நோக்கத்தையும், நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அவர் எழுதியிருக்கிறார் என வெளிவிவகார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.
அது மட்டுமல்லாது கோவிட் பெருந்தொற்றினால் நாட் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் வேளையில் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பணயமாகப் பாவித்து மனித உரிமைகள் விடயத்தில் அழுத்தம் கொடுக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பரிந்துரைப்பதனால் நாட்டில் மக்கள் மேலும் வறுமைக்குள்ளாகவும், அவர்களது வருமானம் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக அமையுமெனவும் அமைச்சின் அறிக்கை சாடுகிறது.
சிறுபான்மை இனங்கள் மீது அரசு பாரபட்சம் காட்டுகிறது என ஆதாரமற்ற விடயங்களைக் கூறுவது இனக்குரோதங்களை வளர்க்கும் விதத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கைகளை ஞாபகப்படுத்துவது போன்றிருக்கிறது. பல்லின, பல்மத மக்கள் வாழும் இலங்கையில் இப்படியான இனக்குரோத நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையைக் குலைக்கும் என வெளிவிவகார அமைச்சின் அறிக்கை மேலும் கூறுகிறது.
ஆதரவாளர்கள்
அம்பிகா சற்குணநாதன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எழுதிய கடிதம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் இவ்வறிக்கை அவர்மீது சேறு பூசும் நடவடிக்கையாகவும், இதன் மூலம் அரசு ஒருவரின் எழுத்து, பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முனைகிறது எனவும் இவ் விடயத்தில் சிவில் சமூக அமைப்புகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போமெனக்கூறி மூவினங்களிலுமிருந்து கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அவர்கள் சார்ந்த அமைப்புகள் என 161 தனிப்பட்டவர்களும், 47 அமைப்புகளும் கையெழுத்திட்டு அறிக்கையொன்றை பெப்ரவரி 5 அன்று வெளியிட்டுள்ளார்கள்.
மனித உரிமைகள் வழக்கறிஞருடன் உறுதுணையாக இருக்கும் நாங்கள் பின்வரும் விடயத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம் என்ற தொனியில் அவர்களது கையெழுத்துகளுடன் வெளியான அறிக்கையின் சாரம்சம்:
“அம்பிகா சற்குணநாதன் தனது கடிதத்தில் குறிப்பிட்ட விடயபங்கள் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்காமல், இலங்கையின் பொதுச் சேவை மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் அர்ப்பணிப்போடு செயலாற்றிவரும் அப்பழுக்கற்ற ஒருவரது நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ம̀நித உரிமைகள் விடயத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தனிப்பட்ட ஒரு தம்ழிச் செயற்பாட்டாளரை விடுதலைப்புலிகளுடன் ஒப்பிடுவது தேவையற்றதும், குழப்பம் தருவதும், அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது. தமிழ் முஸ்லிம் இனங்கள் மீது குரோதங்களை வெளிப்படுத்தி சமூகங்களிடையேயான ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் அவற்றைத் தூண்டும் வகையில் அரசாங்கத்தின் அறிக்கை இருப்பது மிகவும் குழப்பம் தருவதாக இருக்கிறது. சமீப காலங்களில், அரசுக்கெதிராகக் கருத்து வெளியிடும் தனிப்பட்டவர்களையும் சிறுபான்மை இனத்தவர்களையும், பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் அரசியல், சிவில் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகள் சட்டம் (ICCPR) ஆகியவற்றைப் பாவித்து தண்டித்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அம்பிகா சற்குணநாதன்மீது இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் அச்சம் தருவதாக இருக்கிறது.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தருவதும், நிறுத்திக் கொள்வதும், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் விடயங்கள், சுற்றுச்சூழல், நல்லாட்சி போன்ர விடயங்களில் இலங்கை எப்படி நடந்துகொள்வது என்பதையும் அதை ஐரோப்பிய ஒன்றியம் எப்படி அணுகுகிறது என்பதையும் பொறுத்தது. மனித உரிமைகள் விடயத்தில் கொடுக்கப்படும் அழுத்தம் மட்டுமே இச் சலுகையைப் பாதிக்கப்போகிறது எனக் கூறுவது நேர்மையற்றது.
அரசை வெளிப்படையாக விமர்சிப்பவர்களை அரசாங்கத்தின் அங்கமொன்று குற்றம் சாட்டுவதை அவர்களது குரல்களை அடக்க அரசு எடுக்கும் மிரட்டல் நடவடிக்கையாகவே நாம் பார்க்கிறோம். வெளிவிவகார அமைச்சின் இவ்வறிக்கை, பாதிக்கப்பட்டவர்கள், சமூகங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகங்களுடன் ஊடாடப் புறப்பட்டவர்களியும் மற்றும் சிவில் சமூகங்களின் நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சியாகவே நாம் கருதவேண்டியுள்ளது.
செல்வி சற்குணநாதனைப் போலவே பல சிவில்சமூக அங்கத்தவர்களும் அவர்களது அமைப்புகளும், புதிய அடக்குமுறைச் சட்டத்தின்கீழ் இயங்கமுடியாத நிலையுள்ள்தைப்பற்றித் தமது கரிசனைகளை வெளியிட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் ஆகியவர்களை அரச அங்கங்கள் தொடர்ந்தும் தொல்லைக்குள்ளாக்குவது குறித்து நாம் கவலை கொள்கிறோம். சிவில் சமூகங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கென அரச சார்பற்ற அமைப்புகளின் செயலகத்தை ஒரு புதிய அமைச்சின் கொண்டுவருவதே பயனளிக்குமென நாம் கருதுகிறோம். இது தொடர்பாக, அரசாங்கத்துடன் நேர்மையான, கொள்கை ரீதியான, ஆக்கபூர்வமான உரையாடல்களை மேற்கொள்ளவும், நாங்கள் உடன்படும், அதற்காக அவரோடு துணைநிற்கும், செல்வி சற்குணநாதன் எழுப்பும் விடயங்கள் தொடர்பாகப் பேசவும் நாம் தயாராகவுள்ளோம். அதே வேளை, சிவில் சமூக அங்கத்தவர்களைக் குறிவைத்து வெளிவிவகார அமைச்சு நடந்துகொள்ளும் முறை நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையை நாம் கண்டிப்பதோடு மனித உரிமைகள், ஜனநாயகம், உண்மையான நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாத்தும், முன்னெடுத்தும் வரும் செல்வி அம்பிகா சற்குணநாதனுடனும் இதர சிவில் சமூக அமைப்புகளுடனும் நாம் தோளோடு தோளாகத் துணைநிற்கிறோம்” என இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையையும் அதில் கையெழுத்திட்ட 161 தனிப்பட்டவர்களின் பெயர்களையும், 47 அமைப்புகளின் பெயர்களையும் பின்வரும் இணைப்பில் பார்த்துக்கொள்ளலாம்.