EnvironmentNewsSri Lanka

அம்பாறையில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு யானைகள் மரணமாகும் பரிதாபம்!

சூழல்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலக்காடு என்னும் கிராமத்திலுள்ள குப்பைக் கிடங்கில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதனால் அப்பிரதேசத்திலுள்ள யானைகள் இறந்துபோவதாக சூழலியலாளர்கள் மற்று மிருக வைத்தியர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கடந்த வார இறுதியில் மட்டும் இரண்டு யானைகளும், கடந்த எட்டு வருடங்களில் இருபதுக்கும் மேற்பட்ட யானைகளும் மரணமடைந்துள்ளதாகவும் இவை அனைத்தும் பாலக்காடு குப்பைக்கிடங்கில் வீச்ப்படும் குப்பைகளை உண்டு வாழ்ந்தன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“பொலித்தீன், பிளாஸ்டிக், சமிக்கமுடியாத பண்டங்கள் மற்றும் நீர் மட்டுமே இய்யானைகளின் வயிற்றில் காணப்பட்டன எனவும் அவை சாதாரணமாக உண்ணும் உணவொன்றையும் காணமுடியவில்லை எனவும் இறந்த யானைகளைப் பரிசோதித்த வனவிலங்கு வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யானைகள் போற்றித் துதிக்கப்படும் ஒரு விலங்கினமாக இருப்பினும் அவற்றைப் பாதுகாக்கும் எதுவித திட்டமும் இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் சுமார் 14,000 யானைகள் இருந்தன எனவும் 2011 இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 6,000 மட்டுமே எஞ்சியுள்ளன எனவும்கூறப்படுகிறது.

யானைகளின் வாழிடமான காடுகள் அழிக்கப்படுவதால் அவை பெரும்பாலும் மனித வாழிடங்களை நோக்கி உணவுதேடி வருகின்றன எனவும் அங்கு அவை மனிதரால் அவற்றின் தந்தத்துக்காகவும், பயிர்களை அழிப்பதனால் மனிதரின் கோபத்துக்குள்ளாகியும், அவர்களால் கொல்லப்பட்டும், அவர்கள் வீசும் கழிவுகளை உண்பதாலும் மரணமடைந்தும் போகின்றன என சூழலியலாளர் தெரிவிக்கின்றனர்.

“பிளாஸ்டிக் கழிவுகள் சமிபாடடையாமையால் அவை வயிற்றை நிரப்பியதும் மேலும் சத்தான உணவை அவை உண்ண முடியாமல் பலவீனமாகி மெதுவாக இறந்துபோகின்றன” என்கிறார் புஷ்பகுமார.

யானைகள் இப்படி பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு மரணமடைகின்றன என்பதை உணர்ந்த அரசு இக் கிடங்குகளிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை மீள்சுழற்சிக்குள்ளாக்கவும், இக் கிடங்குகளைச் சுற்றி மின்வேலிகளை அமைப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென 2017 இல் அறிவித்திருந்தாலும் இவை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

இலங்கையில், நாடு தழுவிய ரீதியில் வனவிலங்குப் பிரதேசங்களில் 54 கழிவுக் கிடங்குகள் இருக்கின்றன எனவும் இவற்றைச் சுற்றி 300 யானைகள் நடமாடுகின்றன எனவும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பால்க்காட்டிலுள்ள கழிவுக் கிடங்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன எனினும் அவ்ற்றிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்படுவதில்லை. இதை சுற்றி எழுப்பப்பட்ட மின்வேலி, 2014 இல் மின்னலால் தாக்கப்பட்டு செயலிழந்ததன் பின்னர் அது திருத்தப்படவில்லை. இதனால் யானைகள் மீண்டும் இக்கழிவுக்கிடங்கில் இரைதேடி வரத் தொடங்கிவிட்டன என கிராமத்தவர்கள் கூறுகிறார்கள்.