EnvironmentNews & AnalysisSri Lanka

அம்பாந்தோட்டை சீன தொழில்வலயத்துக்கு நீர் வழங்கவே சிங்கராஜா வனத்தில் குளம் – சஜீவ சமிக்கார

அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகே சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாரிய தொழில்வலயத்துக்கு நீர்வழங்குவதற்காகவே, சீனாவின் அழுத்தத்தால், சிங்கராஜா வனத்தில் அமைக்கப்படும் இரண்டு குளங்கள் உட்பட்ட ஜின்-நில்வால திட்டம் நிறைவேற்றப்படுகிறது என சூழல் செயற்பாட்டாளர் சஜீவ சமிக்கார நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உமா ஒயா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 17,500 குடும்பங்கள் பலாத்காரமாக இடம்பெயர்க்கப்பட்டன. இறுதியில் அத் திட்டம் முற்றும் தோல்வியில் முடிந்தது

சஜீவ சமிக்கார, சூழல் செயற்பாட்டாளர்

“இந்த விடயத்தில் நாம் மிகவும் தெளிவாகவிருக்கிறோம். அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய தொழில்வலயத் திட்டத்துக்கு நீர்வழங்குவதற்கென ஆரம்பிக்கப்பட்ட முதலாவது திட்டமே உமா ஓயா திட்டம். அத் திட்டம் கட்டாயத்தின்பேரில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அனுமதியைக் கூட மத்திய சூழல் நிர்வாகத்திடமிருந்து சட்டவிரோதமாகக் கட்டாயத்தின் பேரிலேயே பெறப்பட்டிருந்தது. இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 17,500 குடும்பங்கள் பலாத்காரமாக இடம்பெயர்க்கப்பட்டன. இறுதியில் அத் திட்டம் முற்றும் தோல்வியில் முடிந்தது” எனக்கூறுகிறார் சமிக்கார.

அம்பாந்தோட்டை சீன நிறுவனத்துக்கு நீர் வழங்கவே சிங்கராஜா வனமழிப்பு

” உமா ஒயா திட்டத்தால் நீர் வழங்க முடியாமையால் தான் இப்போது, ஜின் – நில்வால திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்கான நீர்த் தேவையைப் பூர்த்திசெய்யவென்ற பொய்யான காரணத்தைக் கூறியே இத் திட்டமும் நேர்மையற்ற முறையில் முன்னெடுக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கருகே 15,000 ஏக்கர் காணியில் தொழிற் பேட்டை ஒன்றை நிர்மாணிக்க சீன நிறுவனத்துடன் இலங்கை அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்கவே இந் நீர்வழங்கல் திட்டம். இப்படிப் பல திட்டங்கள் காரணமாக சீன நிறுவனங்கள் அரசின் மீது பாரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன எனபது எமக்குத் தெரியும். அதனால் தான் சிங்கராஜா திட்டம் ஆரம்பிக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.