Sri Lanka

அம்பாந்தோட்டை | சீனாவுடனான ஒப்பந்தத்தில் மாற்றமில்லை – கோதாபய ராஜபக்ச

டிசம்பர் 20, 2019

சீனாவுடனான அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் ஒரு சீன நிறுவனத்துடனான வர்த்தக ஒப்பந்தம், அது மறுபரிசீலனை செய்யப்படமாட்டாது ஆனால் இதர துறைமுகங்கள் நிர்வகிக்கப்படுவதைப் போல் அதன் பாதுகாப்பு இலங்கையிடம் இருக்கவேண்டுமென்று தான் கருதுவதாகவும் இது பற்றித் தான் ஏற்கெனவே சீன பங்காளிகளுடன் பேசியுள்ளதாகவும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிருபர்களைக் கொழும்பில் சந்தித்துப் பேசும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சீனாவுடன் கையெழுத்திடப்பட்ட 99 வருட குத்தகையை மாற்றுவீர்களா என்று குறிப்பிட்டுக் கேட்டதற்கு ” அது ஒரு வர்த்தக ஒப்பந்தம். முந்தய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அது கையெழுத்திடப்பட்டபோது சிறீலங்கா பொதுஜன பெரமுன கடுமையாக எதிர்த்தது. அதன் வர்த்தக அம்சங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அதிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைப் பற்றியும், துறைமுகத்தின் கட்டுப்பாடு யாரிடமிருக்கிறது என்பதுபற்றியுமே நாம் அக்கறைப்படுகிறோம் என அவர் தெரிவித்தார்.

முக்கியமாக எல்லைப் பாதுகாப்பு. இத்துறைமுகத்துக்குள் எந்த நாட்டுக் கப்பல்கள் வரல்லம் போகலாம் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் எங்களிடமே இருக்க வேண்டும். இது பற்றி நான் சீன அதிகாரிகளுடன் பேசினேன். அவர்கள் அதற்கு உடன்படுகிறார்கள் என்றார் ஜனாதிபதி ராஜபக்ச.

அரசாங்கம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்யும்போது அது அதை மதிக்கும் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர் மதியில் வளர்க்க வேண்டும். அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைப் பொறுத்தவரையில் அது ஒரு பொருளாதார, கெந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அந்த வகையில் அதன் கட்டுப்பாடும் அது இருக்கும் இறைமையுள்ள நாட்டினிடமே இருக்க வேண்டும். மாறாக, உலக வல்லரசுகளின் போட்டிகளில் நாமும் மாட்டிக்கொள்ளக் கூடாது எனவும் இவ்வகையான ஒப்பந்தங்களை மீள் பரிசீலிக்கத் தான் ஒரு குழுவை நியமித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.