அமைதியடையும் அநுர அலை?
மாயமான்
யாழ்ப்பாணத்தாருக்கும் அநுரபுரவாசிகளுக்குமிடையேயான தேன் நிலவு முடிவுக்கு வருகிறதா? இலங்கையில் சகல இன மக்களும் சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்ற முழக்கத்தோடு வானிலிருந்து குதித்த அநுரகுமாரன் இவ்வளவு விரைவில் திரும்பி ஓடுவார் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
மே, நவம்பர் மாதங்கள் (பெரும்பாலான) இலங்கைத் தமிழருக்கு விரத காலங்கள். காவல்துறையினருக்கும், அடித்தட்டு ஜே.வி.பி. யினருக்கும், சில புத்த பிக்குகளுக்கும் விசர் பிடிக்கும் காலங்கள். அநுரகுமாரனின் ஒளிவட்டத்தில் ஜொலிக்கும் திசை காட்டி அரசில் இக்காலங்கள் கொஞ்சம் கலகம் குறைந்ததாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஈழமெங்கும் விரதம் விமரிசையாக அனுட்டிக்கப்பட்டது. என்னதான் சொன்னாலும் ‘இவர்கள் அவர்களில்லை’; எங்களைப் போல இவர்களும் மாவீரர்களை இழந்தவர்கள்; புரிந்துகொள்வார்கள் என்று நம்மவர் நினைத்திருக்கலாம். அதில் ஓரளவு உண்மையும் இருந்திருக்கலாம். ஆனால் விளைவு எதிர்பார்த்தது போல் அமையவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் என்ற ஆயுதத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்று தேர்தலுக்கு முன் ஓலம் வைத்த திசைகாட்டிகள் இப்போ அவ்வாயுதத்தையே சுழற்றிக்கொண்டு தமிழரை வெட்டி வீழ்த்தி வருகிறார்கள். ‘சொன்னோம் பார்த்தீர்களா’ என்று தமிழ்த் தேசியம் பற்றைகளுக்குள் இருந்து பீரிடுகிறது.
சமூகவலைத் தளங்களில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பகிர்ந்தமைக்காகவும் இதுபோன்ற வேறு பல காரனங்களுக்காகவும் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 2009 இல் இலங்கையை விட்டுப் போய் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற இன்னுமொரு தமிழர் ‘விடுதலைப் புலிகளுக்கு’பயங்கரவாத அமைப்புக்குப்’ பணம் சேர்த்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இச்சம்பவங்கள் ஈழத் தமிழர்களை உறையவைத்திருக்கின்றன.
நேற்று இதுபற்றிச் சில நண்பர்களுடன் பேசினேன். “இப்பத்தானே வந்தவங்கள். உடனடியா என்னத்தைச் செய்யிறது. கொஞ்சம் விட்டுப் பிடிப்பம்” என்றார்கள் சலிப்புடன் சிலர். “தென்னிலங்கைச் சிவாஜிலிங்கங்களைத் திருப்திப்படுத்த அவங்கள் இப்படி ஏதாவது செய்யத்தானே வேணும்” என்றார் ஒருவர். ஒவ்வொரு செயலும் அதற்கேற்ப எதிர்ச்செயலைத் தோற்றுவிக்கும் என்ற நியூட்டனின் மூன்றாவது விதியை அவர் துணைக்கழைத்தார். சிவாஜிலிங்கம் தலைவரது படத்தை வைத்து அவர் பிறந்த வீட்டில் பிறந்த தினத்தைக் கொண்டாடியதாகவும் அதை அனுமதிக்க முடியாது எனக் காவல்துறை கட்டளையிட்டதால் அது அகற்றப்பட்டு நிகழ்வு நடைபெற்றதாகவும் கேள்வி.
புலிகள் ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கம் என்பதால் அதன் இலச்சினைகள், கொடிகள், பதாகைகள் போன்றவற்றை அனுமதிக்க முடியாது என காவல்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது எனவும் இக்கட்டளைகள் மீறப்பட்ட இடங்களிலேயே காவல்துறையினர் சம்பந்தப்படவேண்டி ஏற்பட்டது எனவும் திசைகாட்டி தரப்பு கூறுகிறது. இவை போன்ற சம்பவங்கள் மஹிந்த, ரணில் காலங்களிலும் நடைபெற்றன என்றாலும் அவை எதிர்பார்க்கப்பட்டவையாக இருந்தபடியால் கவனம் பெறவில்லை. ஆனால் இது ‘இணக்க காலம்’; இளவரசர் அநுரகுமாரன் யாழ்ப்பாண மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டிருக்கும் காலம்.; காவல் துறையினரே வந்து ஈகைச்சுடரை ஏற்றிவைக்க மாட்டார்களோ எனுமளவுக்கு மக்கள் மையை கொண்டிருக்கும் காலம். இச்சூழலில் இக்கைதுகள் நடைபெற்றிருப்பது வருத்தமாகவிருக்கிறது. பழியை வீரவன்சக்கள், கம்மன்பிலக்கள், வீரசேகராக்கள் மீது போட்டுவிட்டு அப்பால் நகர முடியாது. அப்படியானால் மஹிந்த, ரணில் அரசுகளுக்கும் அநுர அரசிற்கும் வேறுபாடில்லை.
யாழ்ப்பாணத்துக்கென்றோர் தனிக்குணமுண்டு. சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக வெற்றிபெற்றதும் யாழ்ப்பாணம் கொக்கோ கோலாவில் குளித்துத் திளைத்தது. சிறீசேன வந்தபோது காலில் விழுந்து கதறியது. மாவீரர் நிகழ்வை விட ரம்பா நிகழ்வில் தலைகள் வான் முட்ட அடுக்கப்பட்டன. தள்ளாத வயதுடைய சம்பந்தன் ஐயாவை ஓட ஓடக் கலைத்த தாயினம் அநுரகுமாரனுக்கு பொட்டு வைத்து வரவேற்பு. போதாததற்கு பைத்தியமொன்றைத் தமது பிரதிநிதியாக அனுப்பிவிட்டு அதை இன்னும் கொண்டாடுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அயலார் சிரிக்கிறார்கள். மாற்றத்தை விரும்புகிறது யாழ்ப்பாணம் என்று மேதாவிகள் இதையும் கடந்து போகும்படி அறிவுறுத்துகிறார்கள்.
தேர்தலுக்கு முன் திசைகாட்டிகள் முன்வைத்த விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் பல காற்றோடு போய்விட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற ஆயுதம் ஆக்ரோஷத்தோடு பாவிக்கப்படுகிறது. மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்தாலும் நாம் பாராளுமன்ற ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் என்றார்கள். தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் தமிழர் போராடிப்பெற்ற 13 ஆவது திருத்தத்தை நாம் மீளப்பெற மாட்டோம் என்றார்கள். ஆனால் இன்றைய அறிக்கையின்படி புதிய அரசியலமைப்பில் மாகாணசபை முறைமையே இருக்காது என ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றமே என்ற மஹாவம்ச ஜே.வி.பி. மீண்டும் தன் முகத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. இது முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. அநுரவின் பள பளக்கும் முகத்தைக் காட்டி யாழ்ப்பாணத்தை அது மீண்டுமொருதடவை ஏமாற்றிவிட்டதா? கொஞ்சம் விட்டுப் பார்ப்போம் என்கின்றனர் சிலர்.
3 ஆசனங்களை வைத்திருந்த ஜே.வி.பி. மூன்றே வருடங்களில் 179 ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பதற்கு முக்கிய காரணம் அனுரகுமாரன். அவரின் பின்னால் மறைந்து நின்று இயக்கும் ரில்வின் சில்வா (இவர் தான் 1983 கலவரத்திந்போது நிர்வாணமாக்கப்பட்ட தமிழ் இளைஞனை ரசித்து நடனம் ஆடியவர் என்றொரு உறுதிப்படுத்தப்படாத செய்தி உலவியதும் அதற்கு NPP மறுப்பு தெரிவிக்காததும் இன்னுமொரு விடயம்) இப்போது அனுரவைப் புறந்தள்ளி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார் என்னும் தகவல்கள் கசிந்தவண்ணமுள்ளன. இப்பாரிய வெற்றிக்குக் காரணமானவர் அனுர மட்டுமே என்பதையும் அவரை நம்பியே தமிழர்கள் வாக்களித்தார்கள் என்பதையும் நிரூபிக்க இன்னும் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். ரில்வின் சில்வாவின் சதி வெற்றிபெறுமாகில் தமிழர்கள் இன்னுமொரு தடவை ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டப் பிரயோக விடயத்தில் அதை ஒழிக்கவேண்டும் எனக் கூக்குரலிட்ட அதே ஜே.வி.பி. அதைத் தூசி தட்டி மீண்டும் பிரயோகப்படுத்துவதன் நோக்கம் என்ன? அது நடைமுறையில் இருந்தாலும் சமீப காலங்களில் மஹிந்த, ரணில் அரசுகள் தமிழர்கள் மீது அவற்றைப் பிரயோகித்தது மிகக்குறைவு என்கிறார்கள். திசைகாட்டி அரசு வந்ததும் வராததுமாய் அறுகம் குடா சம்பவத்தில் ஆரம்பித்து இப்போது சமூகவலைகளில் மீன் பிடிக்க ஆரம்பித்திருப்பது அச்சம் தருகிறது. தலைவரின் படத்தைப் பிரசுரிப்பது குற்றம் அதே வேளை தமது தலைவர் ரோஹண விஜேவீரவின் கொலை குறித்து விசாரணையொன்றைச் செய்ய திசைகாட்டி அரசு தொடங்கியிருக்கிறது. நாட்டைப் பொருளாதார ரீதியில் பலப்படுத்த புலம் பெயர் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் அநுரகுமாரர் வருகைதரும் புலம்பெயர் தமிழர்களைக் கைது செய்கிறார். யாரிங்கு ஆட்சி புரிகிறார்கள்?
உள்ளூராட்சித் தேர்தல்கள் வருகின்றன. அதுவரை ‘ஓடத்தை ஆட்டாதீர்கள்’; பொறுத்திருங்கள் என்கிறார்கள் மாற்றத்தை விரும்பும் நண்பர்கள். இத் தேர்தல்களிலும் அநுரகுமாரர் விளாசித் தள்ளுவார் எனவே எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அரசியலமைப்பு மாற்றம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்வைக்கும், அதுவரை பொறுத்திருங்கள் என்பார்கள் நண்பர்கள். அதன் பிறகு? தமிழ்த் தேசியம் 2.0?
எனக்கென்னவோ நம்பிக்கை வேகமாகத் தூர்ந்து போகிறது. இவர்களும் அவர்கள் தான் என்ற நினைப்பே மேலோங்கி வருகிறது. இப்போது இருக்கும் தமிழரின் உரிமைகளும் புதிய அரசியலமைப்பில் முற்றாகப் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சமே மேலோங்கி நிற்கிறது. 2015-2019 காலத்தில் உருவாக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த சுமந்திரனை யாழ்ப்பாணம் வெற்றிகரமாகத் துரத்திக் கொண்டுவந்த மாற்றம் புதிய அரசியலமைப்பை எப்படி அணுகப்போகிறது?
இலங்கை முழுவதிலும் சகல இன மக்களும் சமத்துவமாக வாழும் இலங்கையை உருவாக்குவேன் என அநுரகுமாரர் யாழ்ப்பாணத்தில் கூறியதை நடைமுறைப்படுத்துவாராகில் அம்பாந்தோட்டையில் ஒரு சதுர மைலுக்குள் எத்தனை இராணுவத்தினர் இருக்கிறார்களோ அதே விகிதாசாரத்தில்தான் பருத்தித்துறையிலும் இருக்க வேண்டும்; அதுவே உண்மையான சமத்துவம். புலிகள் பயங்கரவாதிகளாகில் அவர்களுடன் சேர்ந்து இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போரிட்ட ஜே.வி.பி. யினரும் பயங்கரவாதிகள் தான். அப்படியானால் விஜேவீரவின் படத்தைப் பிரசுரிக்கும் முகநூல் காரரும் கைதுசெய்யப்படவேண்டும். அதுவே இனங்களுக்கிடையேயான உண்மையான சமத்துவத்தைப் பிரதிபலிக்கும்.
உணர்ச்சிவசப்பட்டு தமக்குப் பிடித்தவர்களது படங்களைப் பிரசுரிக்கும் ஆர்வக்கோளாறுகளைப் பயங்கரவாதிகள் எனக் கைதுசெய்யுமளவுக்கு அற்பத்தனமாக நடந்துகொள்ளும் அனுர அரசுக்கும் ஞானசேரர் அரசுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. தலையாட்டி வரவேற்று உபசரித்து அனுப்பியவர்களுக்கு முன்கூட்டிய அனுதாபங்கள்!
