Sri Lanka

அமைச்சர் வீரவன்ச வீட்டில் வெளிநாட்டு உளவாளிகள் – போட்டுடைக்கிறார் உட்கட்சி உறுப்பினர்!


கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பாரிய பிளவை ஏற்படுத்தி வருவது இப்போது தெருவுக்கு வந்திருக்கிறது.

இம் முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்கக்கூடாது என்று அடம்பிடிக்கும் தேசியவாதிகள், தொழிற்சங்கவாதிகளின் தரப்புக்குத் தலைவராக இயங்கிவரும் அமைச்சர் வீரவன்ச, சமீப காலங்களில் தனது கொழும்பு வீட்டிலில் சந்திப்புக்களை நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக SLPP இல் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், 22 தொழிற்சங்கங்களின் தலைவர்களும் மற்றும் பெளத்த சபைகளின் தலைவர்களும் இச் சந்திப்பில் கலந்துகொள்கிறார்கள். இவர்களது ஒன்றுபட்ட எதிர்ப்பின் காரணமாக இந்தியா உட்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகுவதாக, ராஜபக்ச தரப்பு அறிவித்திருந்தது. அத்தோடு ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் வீரவன்சவின் தலைமை ஓங்கிவருவதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வீரவன்ச வீட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களினால் அமர்த்தப்பட்ட இரண்டு உளவாளிகள் கலந்துகொண்டதாக நேற்று (08), கட்சித் தலைமையகத்தில் கூட்டப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா தெரிவித்துள்ளார்.

“வீரவன்ச வீட்டில், அவரது தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இரண்டு ‘டாக்டர்கள்’ பங்குகொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் வெளிநாட்டு உளவுநிறுவனங்களினால் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டவர்கள். இதை நான் பொறுப்புடனேயே கூறுகிறேன். தேவை ஏற்படின், அவர்களது பெயர்களை நாங்கள் வருங்காலங்களில் வெளியிடுவோம்.“இந்த அரசியல் நடவடிக்கையையும், அவர்களின் நடத்தைகளையும் நீண்டகாலமாக ஆராய்ந்த மின்னரே நாங்கள் இந்த ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டியிருக்கின்றோம். எனவே, இந்நாட்டு மக்களை மீண்டுமொரு தடவை படுகுழிக்குள் இழுத்துச் செல்லவேண்டாமென்று நாம் அமைச்சர் விமல் வீரவன்சவுக்குக் கூறுகின்றோம்!

“எனவே, அவரை இவ்வறிக்கையைத் திருத்திக்கொள்ளும்படி, எமது கட்சி கேட்டுக்கொள்கின்றது. அல்லாவிடில், மந்திரிசபையில் கெளரவ பிரதம மந்திரி, மாட்சிமை தங்கிய ஜனாதிபதி ஆகியோர் முன்னிலையில், அவரால் மனச்சாட்சியுடன் எழுந்து நிற்கமுடியுமா என்று அவரே கேட்டுக்கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்தார் ரேணுகா பெரேரா.

இலங்கையின் இறைமையை வெளிநாடுகளுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறார்களெனப் பலரையும், பல தடவைகள் குற்றம்சுமத்திய வீரவன்ச தற்போது அதே முறையில் குற்றஞ்சாட்டப்படுவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வீரவன்ச போன்ற அமைச்சர் ஒருவரது வீட்டில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூடியிருப்பது, அவரே கூறுவதுபோல, நாட்டின் இறைமைக்கு ஆபத்தாகவே முடியுமென அவரால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுவரும் பிளவு அரசாங்கத்தைப் பாரதூரமான நெருக்கடிக்குள் கொண்டுவந்து விட்டிருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.வெளிக்கு வரும் வீரவன்ச – மஹிந்த தரப்பு மோதல்

கட்சியின் பொதுச் செயலாளர் ரேணுகா பெரேராவின் இவ்வறிவிப்புக்குப் பின்னால் வீரவன்ச – மஹிந்த தரப்புகளிடையேயான மோதல் காரணமென உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அமைச்சர் வீரவன்ச இரித லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையை கோதாபய ராஜபக்ச எடுக்கவேண்டுமெனெத் தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாகப் பதிலளித்த கட்சிச் செயலாளர் சாகர காரியவாசம் , “வீரவன்ச அக் கூற்றைத் திரும்பப் பெறவேண்டுமெனவும், பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டுமெனவும்” கோரியிருந்தார்.

கிழக்கு கொள்கலன் முனைய விடயத்தில் வீரவன்ச தலைமையின்கீழுள்ள அணிக்கும், மஹிந்தவின் கீழுள்ள அணிக்குமிடையில் நடைபெற்றுவரும் கருத்து மோதலில், வீரவன்ச அணி அவர்களது கவர்ச்சியான சொல்லாடல்கள் காரணமாக மக்களின் செல்வாக்கைப் பெற்றுவருவது அவதானிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சமீபகாலங்களில், ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை வீரவன்ச பொதுவெளியில் தெரிவித்து வருகிறார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராக இல்லாத வீரவன்ச, கடந்த 50 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தோடு உள்ள மஹிந்தவை நீக்கிவிட்டு ஒரு வருட அனுபவமுள்ள கோதாபயவைத் தலைவராக்க வேண்டுமென்று கேட்பது கட்சியிலுள்ள பலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம், MCC போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள், உறவுகள் விடயத்தில் மஹிந்த ராஜபக்ச மிதவாதப் போக்கையும், கோதாபய ராஜபக்ச கடும் தேசியவாதிகளின் போக்கையும் பிரதிபலிப்பவர்கள். இந்தியாவுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதில் மஹிந்த ராஜபக்சவுக்கு இணக்கமில்லை எனவும் சீனாவின் அழுத்தத்தின் பிரகாரம் வீரவன்ச அணி இயங்குவதாகவும் ராஜதந்திர வட்டாரங்களிடையே கருத்து நிலவுகிறது எனவும் அறியப்படுகிறது.