அமைச்சர் வீரவன்சவின் மனைவியைக் கைதுசெய்யப் பிடியாணை!
போலித் தேசிய அடையாள அட்டைகள் விநியோகத்தில் சம்பந்தம்?
ஜூலை 21, 2020: அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவைக் கைது செய்ய கொழும்பு முதன்மை நீதிபதி லங்கா ஜயரத்ன செவ்வாய் (ஜூலை 21) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
இரண்டு பேருக்கு கடவுச்சீட்டுகள் பெறுவதற்காக போலியான அடையாள அட்டைகளைத் தயாரிப்பதில் சசி வீரவன்சவுக்குச் சம்பந்தமுண்டென்ற குற்றச்சாட்டின்மீது நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு ஆணை விடுக்கப்பட்டிருந்தும் அவர் அன்று சமூகமளிக்கவில்லை. சுகவீனம் காரணமாக அவரால் சமூகமளிக்க முடியவில்லை என அவர் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்ததாக, அவரது சார்பில் சமூகமளித்த சட்டத்தரணி நீதிபதிக்குத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அவரது சுகவீனம் தொடர்பான மருத்துவச் சான்றிதழ் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், இதே போன்று முன்னரும் பல தடவைகள் அவர் நீதிமன்றத்தில் சமூகமளிக்கத் தவறியிருந்தார் எனவும் பிரதி சட்டமா அதிபர் டிலீபா பீரீஸ் அவர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்ததையடுத்து நீதிபதி இப்பிடியாணையை அறிவித்திருக்கிறார்.