அமைச்சர் கம்மன்பில பதவி பறிபோகலாம் – வீரவன்ச பாதையில் தொடரும் ராஜபக்ச பழிவாங்கல்?
பெற்றோல், டீசல், எரிவாயு விலையுயர்வு காரணமாக மக்களின் அரசின் மீதான எதிர்ப்பில்லிருந்து தப்பிக்கொள்ள இவ் விலையுயர்வுக்கு அமைச்சர் கம்மன்பில பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகவேண்டுமென ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் பூராவும் எரிபொருட்டளின் விலை ஏற்றமடைந்திருந்தபோதும் இலங்கையில் தொடரும் கோவிட் தொற்று நிலைமை காரணமாக விலையுயர்வை அரசாங்கம் தாமதித்திருந்தது. தற்போது அரசாங்கத்தின் நிதி நிலைமை மிக மோசமாக வந்திருக்கும் நிலையில், இவ்விலையுயர்வை இனியும் தாமதிக்க முடியாது எனக்கூறி எரிபொருள், சக்தி அமைச்சு எரிபொருட்களின் விலைகளை இந்தவாரம் உயர்த்துவதென அறிவித்திருந்தது. இதற்கான அனுமதியை அமைச்சரவை உப குழு ஏற்கெனவே வழங்கியிருந்தது.
இதன் பிரகாரம், ஒரு லீட்டர், 92 ஒக்டேன் பெற்றோல் ரூ.20 ஆலும், 95 ஒக்டேந் பெற்றோல் ரூ 23 ஆலும், டீசல் எண்ணை லீட்டர் ரூ 7 ஆலும், சுப்பர் டீசல் ரூ 12 ஆலும், மண்ணெண்ணை லீட்டர் ரூ 7 ஆலும், ஒரு சிலிண்டர் சமையல் வாயு (12.5 Kg) ரூ 700 ஆலும் அதிகரிக்கப்படுகிறதென இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதைப் போலவே லங்கா இந்தியன் ஆயில் (LIOC) எண்ணை விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே அரசின்மீதான மக்களின் வெறுப்பு அதிகரித்து வரும் வேளையில், எரிவாயு விலையுயர்வு அவர்களை வீதிக்குக் கொண்டுவந்துவிடலாமென அஞ்சிய ஆளும்கட்சியினர்,அமைச்சர் கம்மன்பிலவைப் பலிக்கடாவாக்க முடிவெடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 11 சிறு கட்சிகள் ராஜபக்சக்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தமையும் அதைத் தொடர்ந்து வீரவன்ச உட்பட பல கட்சித் தலைவர்கள் ஆளுங்கட்சியால் ஓரங்கட்டப்பட்டமையும் தெரிந்ததே. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் காலங்களில் மட்டும் ராஜபக்ச தரப்பு இப்படியான குறுந்தலைவர்களை மகிழ்வாக வைத்திருப்பது வழக்கம்.
மற்றெல்லா விடயங்களை விடவும், சமையல் வாயுவின் விலையுயர்வு மக்களை நேரடியாகத் தாக்கும் ஒன்றாகும். அத்துடன் பெற்றோல் விலை அதிகரிப்பினால் ஏற்படப் போகும் போக்குவரத்துச் செலவும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் ஒன்று. எனவே இந்தத் தடவை அரசாங்கத்துக்கு ஒரு பலிக்கடா தேவை. அதற்கான ஆயத்தங்களை ராஜபக்ச தரப்பு, காரியவாசம், பந்துல குணவர்த்தனா போன்றோர் மூலம் ஆரம்பித்திருக்கிறது என அவதானிகள் கருதுகிறார்கள்.
ஆனால், எரிபொருள் விலையை உயர்த்தாமல் அரசாங்கத்தினால் வேறு எதையுமே செய்ய முடியாது என அமைச்சர் கம்மன்பில தெரிவித்துள்ளார். எனவே அமைச்சரைப் பலிகொடுப்பதைத் தவிர அரசாங்கத்துக்கும் மக்களின் கோபத்திலிருந்து வேறு வகைகளில் தப்ப முடியாது. (மாயமான்)
Related posts:
- ராஜபக்ச குடும்ப ஆட்சி முடிவுக்கு வரலாம் – முறெத்தெட்டுவ தேரர் எச்சரிக்கை!
- எரிபொருள் அமைச்சர் கம்மன்பில மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்! – எதிர்க்கட்சி கொண்டு வருகிறது
- இலங்கை | சுற்றுலாவாசிகள் தங்குதடையின்றிப் பயணம் செய்யலாம் – சுற்றுலாத் துறை அமைச்சு
- வடக்கு கிழக்கு எதிர்நோக்கும் கோவிட் அச்சுறுத்தல்; போதிய உபகரணங்களின்றி நோயாளிகள் மரணம்