அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி

தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிராக வாக்களித்தனர்

எரிபொருள் சக்தி துறை அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சி சமாகி ஜனபலவேகய கட்சியினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் தோற்கடிக்கப்பட்டது.

எரி பொருளின் விலையதிகரிப்புக்குக் காரணமாகவிருந்தார் என எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட இத் தீர்மானத்துக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் கிடைத்தன. 20ஆவது தீர்மான வாக்கெடுப்பின்போது அதற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த தடவையும் தமது கட்சிக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இத் தீர்மானம் மீது இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ் விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. சமாகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் முன்மொழிந்த இத் தீர்மானத்தை உறுப்பினர் காபிர் ஹாஷிம் வழிமொழிந்திருந்தார்.

உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவரது பங்காளிக்கட்சிக் கூட்டணியில் பலத்த எதிர்ப்பு இருந்தும் வாக்கெடுப்பு விடயத்தில் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.