Columnsஃபெளசர் மஃரூப்

அமைச்சர்கள் பதவி பறிப்பு – பங்காளிகளின் திட்டமிட்ட கூட்டுச் செயற்பாடு

ஃபெளசர் மஃரூப்

பெளசர் மஃரூப்

“ஆறு கடக்கும் வரைதான் அண்ணனும் தம்பியும் என்பார்கள்! “. இது மகிந்தவுக்கும் கோதாவுக்கும் பொருந்தும்! இப்போது நிகழ்ந்திருப்பது இரண்டாவது நிகழ்வு ! இது போல் முன்பும் இரட்டையர் இருவர் தூக்கி வீசப்பட்டனர்! மங்கள, சிறிபதி ஆகியோர் …

2005 இல் மகிந்த குடும்பம் இலங்கை அரசியலில் அதிகாரத்தை கைப்பற்ற மங்கள, சிறிபதி ஆகியோர் ஆற்றிய பங்கு மிகப் பெரிது! அண்மையில் பாராளுமன்றத்தில் , மங்கள சமரவீரவிற்கான அஞ்சலி உரையின் போது, தமது அதிகார இருக்கைக்கான அரசியல் போட்டியில் தமக்கு உதவிய மங்களவின் பாத்திரத்தை மகிந்தவே நினைவு கூர்ந்தார்! அது மங்கள சமரவீரவின் மரணத்தின் பின்னான உரை என்பதால் மகிந்தவின் அரசியலுக்கு இலாபமே தவிர, எந்த நஷ்டமுமில்லை!

இப்போது இரண்டாவது கட்டம்! ஆனால் இப்போது நிகழ்ந்துள்ள இந்தக் கட்டம் , ஒரு கட்சிக்குள் நடந்த முரண் அல்ல. இலங்கை அரசியலின் உள்ளீடு தொடர்பான முரண் இது! இதன் பக்க விளைவும் நேரடித் தாக்கமும் இலங்கை சிறுபான்மை மக்களுக்கு மேலும் நெருக்கடியையே கொண்டு வரும்! இலங்கை அரசியலில் சிங்கள இனவாதத்தினை இன்னும் அதிகமாகவே பேசவும் , அதனைக் காக்கவுமான ஏட்டிக்கு போட்டியான “அரசியல் வாதங்களும், அணி திரட்டல்களும் “ மேலும் இதன் வழியாக நிகழப் போகிறது என்றே நான் நம்புகிறேன்!.

கடந்த பல ஆண்டுகளாக அதிகாரத்தினை கைப்பற்றவும் , அதனை தக்க வைக்கவும் , சிங்கள இனத் தேசியவாதமும் – பெளத்த மத பாதுகாப்பும் அவைகளுக்கான முன்னுரிமையையும் வலியுறுத்தி ஒருமித்த கூட்டணியாக செயற்பட்டவர்கள் இப்போது இரு முகாம்களாக நிற்க வேண்டி வந்துள்ளன.விமலினதும், கம்மன்பிலவினதும் அரசியல் மூலதனமே சிங்கள இனவாதம்தான்! கோத்தா அரசாங்கம் சிங்கள மக்களை கைவிட்டு விட்டார்கள் என அவர்கள் நாளையிலிருந்து சொல்லத் தொடங்குவார்கள்! இதன் வழியாகத்தான் அவர்களால் தென்னிலங்கையில் தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்! இப்படியான அரசியல் எதிர்ச்சூழலில், கோதா தரப்பும், ஆளும் குழுமமும் தம்மை சிங்கள மக்கள் முன் நிருபிக்கவும், பொருளாதார நெருக்கடியால் தம்மீது குவியும் விமரசனங்களையும் , நம்பிக்கை இழப்பினையும் திசை திருப்பவும் , உடனடி மாற்றாக மேலும் பல இனவாத , தேச பக்த அதிரடிகளை செய்ய வேண்டி இருக்கும்! “ சும்மா ஆடிய பேய்க்கு கொட்டு முழக்கம் “ கொடுத்த கதைதான் இனி…

இன்றைய இந்த அரசாங்கத்தில் இருந்து விமல் வீரவன்சவும் , உதய கம்மன்பிலவும் இல்லாது போனால், இன்றைய இலங்கை அரசாங்கம் இனவாத கொள்கைகளை கைவிட்ட , தம்மை சுத்தம் செய்த “லிபரல் தன்மையான “ அரசாங்கமாக மாறி விடும் என சொல்ல முற்படுவதே , கோதா அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்கும் ஒரு வாதம்தான்! இது ஒரு அரசின், அதனை வழிப்படுத்தும் அரசாங்கத்தின், அரசாங்கத்தை முன்னெடுக்கும் கட்சியினதும், அதன் தலைமையினதும் கொள்கை நிலைப்பாட்டுடன் இரண்டறக் கலந்த அரசியல் அம்சமாகும்! பொதுஜன பெரமுனையும் கோதாவும் தாம் உள்ளடக்கமாக கொண்டிருக்கும் அடிப்படை கொள்கைகளை கைவிடாத வரை , யாருமே இத்தகைய “ அபத்த வாதங்களை” முன் வைப்பது “ பூனை கண்ணை மூடி, உலகம் இருண்டு விட்டது” என சொல்வதற்கு ஒப்பானதாகும்!

ஏதோ கோதாபாய, அவர்களை இரவோடு இரவாக பதவி நீக்கியது போல் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை! இது அவர்கள் தெரிந்து, தேர்வு செய்து தொடங்கிய ஓரு அரசியல் யுத்தமே! தமது அமைச்சுப் பதவிகளே முக்கியம் எனில், கோதா அரசாங்கத்திற்கு அவர்கள் தொடர்ந்தும் சாமரம் வீசிக் கொண்டிருந்திருக்கலாம்! அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அரசை பகிரங்கமாகவே விமர்சித்தே வருகின்றனர்! மிரட்டல்களுக்கும் அழுத்தங்களுக்கும் அவ்விருவரும் பணியவில்லை!! இந்த அணியுடன் இருக்கும் வாசுதேவ நாணயக்கார , இன்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு கூட்டி, கோதாவுக்கு சொல்கிறார் ! “ நான் இராஜினமா செய்யவும் மாட்டேன், இன்றிலிருந்து அமைச்சுப் பணிகளையும் செய்யயமாட்டேன்! முடிந்தால் என்னையும் நீக்குங்கள்” என்கிறார்! நிறைவேற்று அதிகாரத்தின் முன், அமைச்சர்கள் இப்படி துணிந்து பேசியதில்லை. விமல், கம்மன்பில எடுத்த துணிகரமான அரசியல் நிலைப்பாட்டின் ஒரு கட்டமே இவை! இப்போது அதன் தொடக்கம் நிகழ்கிறது…. இதன் விளைவுகளும் பெறுபேருகளும் அவர்கள் நன்கு தெளிவாக அறிந்ததே!