அமெரிக்க வால்மார்ட் அங்காடியில் 6 பேர் சுட்டுக் கொலை!
கொலைகளைச் செய்த பணியாளர் தற்கொலை
அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான செசொபீக்கிலுள்ள வால்மார்ட் பல்பொருள் அங்காடியில் செவ்வாய் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது 6 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இக்கொலைகளைச் செய்த வால்மார்ட் பணியாளரான 31 வயதுடைய ஆண்ட்றே பிங் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரி வால்மார்ட் அங்காடியில் தட்டுகளில் சரக்குகளை நிரப்பும் பணியாளர் குழுவுக்குத் தலைமைதாங்குபவர் எனவும் மறுநாட் காலை கடை திறப்பதற்கு முதல் தட்டுக்களை நிரப்புவதற்கு முன் பணியாளர்களுக்கான ஆணைகளைப் பிறப்பிப்பதற்கான சந்திப்பு நடைபெறுமும் இடத்தில் இரவு 10 மணிக்கு வழமைபோல பணியாளர் கூடியிருந்ததாகவும் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க வந்த துப்பாக்கிதாரி திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து பணியாளர்களை நோக்கிச் சுட்டார் எனவும் சம்பவத்தைப் பார்த்த இன்னுமொரு பணியாளர் தெரிவித்திருக்கிறார். மறுநாள் (24) அமெரிக்காவின் நன்றி நவில்தல் நாள் (Thanksgiving) என்பதால் கடைக்குள் சுமார் 50 வாடிக்கையாளர்கள் நின்றிருந்தனர் எனவும் கூறப்படுகிறது.
கொலைகளுக்கான காரணம் இன்னும் தெரியாது எனவும் துப்பாக்கிதாரி பொதுமான அளவுக்கு துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தார் எனவும் பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். துப்பாக்கி வைத்திருப்பது இம் மாநிலத்தில் சட்டவிரோதமானது அல்ல.
துப்பாக்கிதாரி எவரையும் குறிவைத்து வேண்டுமென்று சுடவில்லை எனவும் எதுவுமே பேசாது கை போன போக்கில் அவர் சுட்டுக்கொண்டே போனார் எனவும் உடல்கள் துவண்டு விழுந்துகொண்டிருந்தன எனவும் அப் பணியாளர் தெரிவித்திருக்கிறார். துப்பாக்கிதாரி ஒரு பணியாளர் என்பதனால் இது ஒரு வழமையான பயிற்சி (drill) எனவே தான் ஆரம்பத்தில் நினைத்ததாகவும் பின்னர் அது நிஜமென்று அறிந்ததும் தான் உறைந்துபோய்விட்டதாக பிறியானா ரைலர் என்ற அப் பணியாளர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவத்தின்போது மேலு 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல் துறையினர் உள்ளே போவதற்கு முன்னரே சூட்டுச் சம்பவம் முடிவுற்றுவிட்டதெனவும் துப்பாக்கிதாரியும் தற்கொலை செய்துவிட்டதாகவும் தெரிய வருகிறது. துப்பாக்கிதாரி இந்த அங்காடியில் 2010 முதல் பணிபுரிந்து வந்திருக்கிறார். இறந்தவர்கள் 16 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் என அறியப்படுகிறது.
இச் சம்பவத்திற்கு சிலநாட்களின் முன்னர் கொலராடொ ஸ்பிறிங்ஸ் என்னுமிடத்திலுள்ள ஓரினச்சேர்க்கையாளர் கூடுமிடமொன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது 5 பேர் கொல்லப்பட்டும் 17 பேர் காயமடைந்தும் இருந்தார்கள். சென்ற வருடம் ரெக்ஸாஸ் மாநிலத்தில் பாலர் பள்ளியொன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது 21 குழந்தைகள் மரணமாகியிருந்தனர். 2019 இல் ரெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள இன்னுமொரு வால்மார்ட் அங்காடியில் மெக்ஸிக்க குடிவரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். (Photo:Fox News)