Spread the love

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக்கேல் பொம்பியோ அடுத்தவாரம் இலங்கை வருவது தற்போது உறுதி செய்யப்படுள்ளது. அவரின் வருகையின்போது ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா ஆகியோரச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என அமெரிக்க பிரதி உதவிச் செயலாளர் டீன் ஆர். தொம்சன் தெரிவித்திருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன் இலங்கைக்கு வந்திருந்த சீனாவின் உயர்மட்டக் குழுவின் வருகையைத் தொடர்ந்து இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் செயலாளர் பொம்பியோ இலங்கைக்கும் விஜயம் செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

இப் பேச்சுவார்த்தைகளின்போது, அவர் பலமானதும், சுயாதீனமானதுமான ஜனநாயக இலங்கையைப் பேணும் விடயத்தில் அமெரிக்காவின் உதவியை வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நிலையான பொருளாதார அபிவிருத்தி, திறந்த இந்திய-பசுபிக் பிராந்தியம் ஆகிய விடயங்களில் எங்கள் பரஸ்பர நோக்கங்களைப் பூர்த்திசெய்ய நாம் இலங்கையுடன் பங்காளியாக இருக்க விரும்புகிறோம்” என, இவ் விடயம் தொடர்பாக தொம்சன் தெரிவித்துள்ளார்.



“இவ் விடயங்களில் இலங்கையில் நடைபெறும் விடயங்களை நாம் உற்று அவதானித்து வருகிறோம். செயலாளரின் வருகையின்போது அவர் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகத்தைப் பேணுதல் போன்ற விடயங்களில் தனது கருதுக்களை ஆட்சியாளரிடம் எடுத்துரைப்பார். இலங்கையுடனான எமது உறவு பல நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. தற்போது அது எத் திசையில் பயணிக்கிறது என்பதைப் பற்றித் தீர்மானிக்கும் நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். சீனாவினுடனான உறவைப் பொறுத்தமட்டில் இலங்கையின் செல்திசையைச் சரியான வழியில் திருப்பவேண்டிய வழிவகைகளைப் பற்றி அவர்களுடன் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு சட்டம், ஜனநாயகம் ஆகியவற்றின் பிரயோகத்தைப் பலப்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு பற்றியும் நாம் உரையாடவேண்டியுள்ளது. நீண்டகால வளர்ச்சிக்காகவும், பொருளாதார சுதந்திரத்துக்காகவும் இலங்கை மிகவும் கடினமான ஆனால் அவசியமான தீர்மானங்களை எடுத்தாகவேண்டும். ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லிணக்கம், மத சுதந்திரம், நீதி ஆகியவற்றை முன்னெடுப்பதன் மூலம், இலங்கையின் நீண்டகால ஸ்திரம், வளர்ச்சி, பல்சமூகங்கள் கெளரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ வழிசெய்தல் போன்றவற்றை இலங்கை உறுதிசெய்ய வேண்டும்” எனத் தொம்சன் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email