அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பொம்பியோவின் எதிர்பாராத இலங்கை விஜயம் – சீன விஜயத்தின் எதிரொலியா?

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பொம்பியோவின் எதிர்பாராத இலங்கை விஜயம் – சீன விஜயத்தின் எதிரொலியா?

Spread the love

செய்தி அலசல்

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கை வரவிருப்பதாகத் தெரிகிறது. சீனாவுக்கு எதிரான அணி நாடுகளான ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா இடையிலான இராணுவ ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடும் விடயமாக,இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் போது அவரது இலங்கைக்கான திடீர் விஜயம் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேரா.ஜயநாத் கொலம்பகேயிடம் கேட்கப்பட்டபோது, “அவரது வருகை எதிர்பார்க்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜாங்கச் செயலாளர் பொம்பியோ, சென்ற வருடம் இலங்கைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அது பிற்போடப்பட்டிருந்தது. இந்த மாதம் (அக்டோபர்) 27ம் திகதி இலங்கை வரவிருக்கும் அவரது விஜயம், கடந்த 5 வருடங்களில் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்படும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி 2015 இல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இவ் விஜயத்தின்போது, தடைப்பட்டிருக்கும் US$ 480 மில்லியன் பெறுமதியான மில்லேனியம் சலெஞ் கோர்ப்பொறேஷன் (MCC) நிதி தொடர்பாக, செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ராஜபக்சக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. MCC நிதி தொடர்பாக அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் பலரும், ஜே.வி.பி. கட்சியினரும் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். அதே வேளை SOFA (Status of Forces Agreement) மற்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் ACSA (Acquisition and Cross-Servicing Agreement) ஆகியனவும் பேச்சுவார்த்தையில் இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு அங்கத்தவரும், வெளிவிவகார விடயங்களுக்குப் பொறுப்பானவருமான யாங் ஜீச்சி உட்பட்ட அதி உயர் சீன குழுவொன்று கடந்த வியாழன் அன்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இவ் விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்துக்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் மாத முற்பகுதியில் நடைபெறவிருக்கும் இவ் விஜயத்தின்போது இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.



இந்திய விஜயத்தை இடை முறித்து அமெரிக்க செயலாளர் இலங்கைக்குத் திடீர் விஜயத்தை மேற்கொள்வது சீன விஜயத்தின் எதிரொலியாக இருக்கலாமென நம்பப்படுகிறது. உள்ளக விவகாரங்களிலும், வெளி விவகாரங்களிலும் இலங்கை ஆட்சியாளர் எடுத்துவரும் அதி துரித நகர்வுகள் இந்திய, அமெரிக்க தரப்புகளை விழிக்க வைத்திருக்கின்றன போலத் தெரிகிறது. வெகு விரைவில் இந்தியாவின் அதியுச்ச குழுவின் இலங்கை விஜயத்தையும் எதிர்பார்க்கலாம்.

-மாயமான்

Print Friendly, PDF & Email