‘நிறத்தவர்களின்’ ஆதரவு குறைகிறது
இன்றைய நிலையில், நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு வெள்ளை இன மக்களில் 49% மானோர் வாக்களிப்பர் என புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.
1972 இலிருந்து, வாக்களித்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்களின்படி, பெரும்பாலான வெள்ளை இன மக்களின் வாக்குகள் குடியரசுக் கட்சி வேட்பாளருக்கே அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜன்நாயகக் கட்சிக்கு ஆக உச்சமாக 47% மே கிடைத்திருக்கிறது. பல தடவைகளில் அது 30% களிலேயே இருந்திருக்கிறது.
NPR/PBS NewsHour/Marist ஆகிய நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட இக் கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு ஒரு எச்சரிக்கையும் காத்திருக்கிறது. அதாவது, ‘நிறத்தவரின்’ வாக்குகளைப் பொறுத்த வரையில், 2016 ல் ஹிலாறி கிளிண்டனுக்கு அளிக்கப்பட்டதைவிடக் குறைவாகவே பைடன் பெறுவாரெனவும் அக் கணிப்பு கூறுகிறது.
ஒப்பீட்டளவில், பைடனுக்கும் ட்றம்புக்கும் கிடைக்கும் ‘நிறத்தவரின்’ வாக்குகள் முறையே 60%, 34% என இக் கணிப்பு கூறுகிறது. 2016 இல், ஹிலாறி, ட்றம்ப் வாக்கு வீதங்கள் முறையே 74, 21 ஆக இருந்தது.
நான்கு மாநிலங்களில் முற்கூட்டிய வாக்களிப்பு
இன்றிலிருந்து தேர்தல் நாள் வரையில், மினெசோட்டா, வெர்ஜீனியா, தென் டகோட்டா, வயோமிங் ஆகிய நான்கு மாநிலங்களில் வாழும் மக்கள் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்க்ச் சென்று, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கலாம். மினெசோட்டா மாநிலத்தில் சென்ற தடவை டொனால்ட் ட்றம்ப் வெகு சொற்ப வாக்குகளால் தோற்றிருந்தார்.
தேர்தல் சங்கதிகள்
- ட்றம்ப் தனது மத்திய கிழக்கு அரபு – இஸ்ரேல் ஒப்பந்தங்களைச் சாதனையாகக் காட்டித் தனது தொலைக்காட்சி விளம்பரங்களை வடிவமைத்துள்ளார்
- டொனால்ட் ட்றம்ப் முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர்களை அவமத்தித்ததை வைத்து ஜோ பைடன் தனது தொலைக்காட்சி விளம்பரங்களை வடிவமைத்துள்ளார்.
- முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, மக்களைத் தேர்தல் பணிகளில் தொண்டர்களாகப் பணியாற்ற முன்வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்
- கறுப்பின மக்களின் ஆதரவைக் கேட்டு, டொனால்ட் ட்றம்ப் வானொலி விளம்பரஙகளைப் பாவித்து வருகிறார். கறுப்பின மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களான மினெசோட்டா, விஸ்கோண்சின், மிச்சிகன், வட கரோலினா, ஜோர்ஜியா, ஃபுளோறிடா, பென்சில்வேனியா ஆகியவற்றில் இவ் விளம்பரம் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
- சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இன்னுமொரு கருத்துக் கணிப்பின் மூலம், 78% மான கறுப்பின மக்களின் வாக்குகள் ஜோ பைடனுக்கு அளிக்கப்படும் எனத் தெரிய வருகிறது