அமெரிக்க டொலரின் ஆதிக்கம் முடிவிற்கு வருகிறது
சிவதாசன்
யூக்கிரெய்ன் போர் மூலம் ரஸ்யா இரண்டு நன்மைகளைப் பெற்றிருக்கிறது. ஒன்று யூக்கிரெய்னின் ரஸ்ய மொழி பேசும் பிரதேசங்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. மற்றது சர்வ அதிகாரங்களுடனும் நாதர் முடியில் அமர்ந்திருந்த அமெரிக்க டொலரை அகற்றியதன் மூலம் ஏழை நாடுகளின் மீதான பாரத்தைக் குறைத்திருப்பது.
பொருளாதாரிகள் அமெரிக்க டொலரை “விலைப்பட்டியல் நாணயம் (invoicing currency)”, ” இருப்பு நாணயம் (reserve surrency)” என்ற பதங்களினால் அழைப்பார்கள். இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டு. உலக நாடுகளுக்கிடையேயான பொருள் கொள்முதல் செய்யப்படும்போது விலைப்பட்டியல் (invoice) அமெரிக்க டொலரிலேயே கொடுக்கப்படுகிறது. பண்டங்களின் பெறுமதியும் அமெரிக்க டொலரிலேயே மதிப்பிடப்படுகிறது. எந்த நாடுகள் எங்கு பண்டங்களைக் கொள்முதல் செய்தாலும் நிலைமை இதுதான்.
இருப்பு நாணயம் (reserve currency) எனப்படுவது ஒரு நாட்டின் இறக்குமதிக்காக சேமிப்பில் வைக்கப்படும் பணதிற்கான நாணயம். உதாரணமாக, கடந்த சில வருடங்களாக இலங்கை படுகின்ற துன்பங்களுக்கு வற்றிப்போன இருப்புப் பணமே காரணம் எனக் கூறப்பட்டது நினைவில் வரலாம். இருப்பு நாணயம் எப்போதுமே அமெரிக்க டொலர் தான். மாற்ற முயற்சித்தவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். இருப்பில் அமெரிக்க டொலர் இருந்தால் தான் பண்டங்களை இறக்குமதி செய்ய முடியும். இலங்கை தனது பண்டங்களை ஏற்றுமதி செய்யும்போது அமெரிக்க டொலரில் invoice களை அனுப்பிப்பெறும் டொலர்கள் reserve இல் சேமிக்கப்படும். இதே போன்று நாட்டிற்குள் கொண்டுவரப்படும் டொலர்களும் பெரும்பாலும் வங்கிகள் வழியாக றிசேர்வை அடைவதுமுண்டு. ஒரு நாட்டின் இருப்பின் தொகையைக் கொண்டு அதன் பொருளாதார வலிமை தீர்மானிக்கப்படுகிறது. இவ்விடயத்தில் இலங்கை நோய்வாய்ப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தால் ‘இரத்தம்’ ஏற்றிப் பிழைக்கவைக்கப்பட்டபோது இந்த reserve தான் இரத்தமாக இருந்தது.
நடந்து முடிவடையும் நிலையிலிருக்கும் யூக்கிரெய்ன் போரில் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார ‘நிபுணர்கள்’ எடுத்த முடிவு யூக்கிரெய்ன் மூலம் ரஸ்யாவின் ஏற்றுமதி / இறக்குமதித் திறனை முடக்குவதன் மூலம் நாட்டை மண்டியிடச் செய்யலாம் என்பது. இதற்காக இச்சண்டியர்கள் கொண்டுவந்தது ரஸ்யா மீதான பொருளாதாரத் தடை. ரஸ்யாவின் முக்கிய வெளிநாட்டுச் செலவாணியை உழைத்துத் தருவது அதன் எரிவாயு, தானிய ஏற்றுமதி போன்றவை. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தமது எரிவாயுத் தேவைக்கு ரஸ்யாவையும் தானியத் தேவைக்கு யூக்கிரெய்னையும் நம்பியிருந்தன. பொருளாதாரத் தடை ஐரோப்பிய மக்களை மிகவும் பாதித்தது. இந்த சர்வதேச பொருளாதாரத் தடையை மீறும் ஏழை எளிய நாடுகள் தண்டிக்கப்படும். எனவே ரஸ்யா விரைவில் செத்துப்போகும் என்று சண்டியர்கள் கனவுகண்டு வந்தார்கள். அத்தோடு எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவை மீறிய அமெரிக்கா ஐரோப்பாவுக்கு எரிவாயுவை வழங்கும் வியாபார நோக்கமும் இதன் பின்னணியில் இருப்பதும் வேறு விடயம்.
ரஸ்யாவின் புட்டின் ஒரு ‘மண்டைக் காய்’ மட்டுமல்ல பனம்காட்டு நரியும் கூட. சண்டியர்களின் கூட்டுச் சதியான ‘பொருளாதாரத் தடையிலிருந்து’ தப்புவதற்கு அவர் நண்பரான சீன நரியுடன் சேர்ந்து போட்ட திட்டம் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்திலிருந்து நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத் தருவது. இத்திட்டத்தின்படி இருவரும் தமக்கிடையேயான வர்த்தகத்தைத் தமது தேசிய நாணயங்களிலேயே செய்துகொள்ள ஆரம்பித்தார்கள். இப்போது அது ஏறத்தாழ 95% பூர்த்தியாகிவிட்டது என்கிறார்கள். இந்தியாவும் ரஸ்யாவுடனான வர்த்தகத்தை இதே முறையில் தான் செய்கிறது. விரைவில் BRICS நாடுகள் அனைத்துமே இப்படியான வழிகளைப் பின்பற்றலாம்.
இரண்டாம் வளைகுடாப் போர் மூலம் சதாம் ஹூசேய்னை வீழ்த்தியது, லிபியாவின் கடாபியை வீழ்த்தியது போன்ற நடவடிக்கைகளின் பின்னால் இருந்த விடயம் இவ்விரு தலைவர்களும் அமெரிக்க நாணயத்திடமிருந்து விடுதலை பெறுவதற்கான திட்டங்களைத் தீட்டியமை எனப் பரவலாக அறியப்பட்டிருந்தது. இதே நோக்கத்துடன் தான் ரஸ்யாவிலும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு யூக்கிரெய்ன் மூலம் அமெரிக்கா எடுத்த முயற்சி படு தோல்வியைக் கண்டு வருவது மட்டுமல்ல பல சிறிய, வறிய நாடுகளும் ஈராக், லிபியா போன்று எண்ணுவதற்கு வழிகோலியிருக்கிறது.
தாய்வான் விடயத்தில் சீனாவைத் திட்டித் தீர்த்த அமெரிக்க ஜனாதிபதி பைடன் தற்போது சீனத் தலைவரை அமெரிக்கா அழைத்துப் பேசியிருக்கிறார். அமெரிக்க ஏற்றுமதிகள் குறைவடைந்ததனால் பாதிக்கப்பட்டிருந்த சீன பொருளாதாரம் ரஸ்ய உறவினால் மிகவும் வளர்ந்திருக்கிறது. இவ்வருடம் $200 பில்லியனையடைந்த இவ்விரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம் 2030 இல் $300 பில்லியனைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரத் தடையினால் ரஸ்யாவிலிருந்து வெளியேறிய அமெரிக்க நிறுவனங்களின் இடத்தை இப்போது சீன நிறுவனங்கள் நிரப்பிவருகின்றன. பலம் பெறும் சீன நாணயத்தினால் அமெரிக்க நுகர்வோருக்கு இனிமேல் பணச்செலவு அதிகரிக்கும். யூக்கிரெய்ன் என்ற சட்டிக்குள் இருந்து அமெரிக்காவும் சகோதரர்களும் இப்போது இஸ்ரேல் என்ற நெருப்பிற்குள் பாய்ந்திருக்கிறார்கள். ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் வரிசையில் விரைவில் யூக்கிரெய்னும் தட்டுடன் நிற்கப்போகிறது. பாவம். (Image Credit:Photo by Frederick Warren on Unsplash)