அமெரிக்க ஜனாதிபதி பைடன் தனது முதலாவது தவணையை முடிக்கப் போவதில்லை – முன்னாள் வெள்ளை மாளிகை வைத்தியர்
மனப்பிறழ்வு மோசமடைந்துவிட்டது
ஜனாதிபதி பைடன் தனது முதலாவது தணையை முற்றாக முடிக்கப் போவதில்லை. அவருடைய மனநிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என முன்னாள் வெள்ளை மாளிகை வைத்தியரும் தற்போதைய காங்கிரஸ் உறுப்பினருமாகிய றொணி ஜாக்சன் தனது ருவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“பைடனின் மனநிலைப் பிறழ்வு மிக நீண்ட காலமாக அவதானிக்கப்பட்டுவரும் ஒன்று. அவர் எங்களது ஜனாதிபதியாக இருக்கவே கூடாது, அவர் தனது பதவியைத் துறக்கவேண்டும்” என வியாழன்று வெளியிட்ட இரு வேறு ருவிட்டர் செய்திகள் மூலம் ஜாக்சன் கேட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, டொனால்ட் ட்றம்ப் மற்றும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு அரச வைத்தியராக ஜாக்சன் கடமையாற்றியவர். அமெரிக்க வலதுசாரி ஊடகமான ஃபொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது பைடனின் உணர்திறன் பற்றித் தான் சந்தேகம் எழுப்பியமைக்காக ஒபாமா மின்னஞ்சல் மூலம் தன்னைக் கண்டித்திருந்ததாக ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
பல தருணங்களில் பைடன் தனது குறிப்புக்களை ஒழுங்கீனமாக வைத்திருப்பது, நீண்ட நேரத்துக்கு தொலைவெளியை நோக்கி உற்றுப் பார்ப்பது போன்ற செயற்பாடுகள் அவரது மூப்புடன் கூடிய மாற்றங்கள் எனவும் ஜனாதிபதியின் கடமைகளை ஆற்றுவதற்கேற்ற உணர்நிலையை அவர் கொண்டிருக்கவில்லை எனவும் தனது அபிப்பிராயம் குறித்துத் தான் மிகவும் தெளிவாகவே இருப்பதாகவும் இன்னுமொரு காங்கிரஸ் உறுப்பினரான ஜிம் பாங்க்ஸ் என்பவருக்கு ஜாக்சன் தெரிவித்திருந்ததாக அறியப்படுகிறது.
“மூன்று முன்னாள் ஜனாதிபதிகளின் அரசாங்க மருத்துவராக இருந்த எனக்கு இது நன்றாகவே தெரியும். பைடனால் தனது கடமையைச் செய்ய இயலாத நிலைமை உள்ளது என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியும். இந்தப் பதவி உடல், உள உரம் தேவைப்படுமொன்று. அது அவரிடம் இப்போது போதாது. அவரால் தன் முழுத் தவணையையும் முடித்துக்கொள்ள முடியாமலும் போகலாம்” என ஜாக்சன் எதிர்வுகூறியிருக்கிறார்.
பேச்சுக்கான வழிகாட்டியை (teleprompter) வாசிப்பது முதல், பேசி முடிந்ததும் மேடையை விட்டுப் புறப்படுவதுவரை பைடன் சிரமப்படுவதைப் பலதடவைகள் ஊடகங்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. ஒபாமா காலத்திலேயே பைடன் தனக்குக் குறிக்கப்பட்ட குறிப்பை விட்டு தேவையற்ற விடயங்களை உளறியதால் ஒபாமா நிர்வாகத்தைச் சங்கடங்களுக்கு உள்ளாக்கியவர். அவரது நிர்வாகத்தில் கூட ரஷ்யாவிலும், சீனாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் எனவும் அந்நாடுகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படுமெனவும் அவர் கூறியதைப் பின்னர் அதிகாரிகள் மாற்றி அறிவிக்கவேண்டியிருந்தது.
பைடனின் மனநிலை குறித்து அவரது கட்சிக்குள்ளேயே பலத்த அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது கட்சிக்குள் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 41% மானோர் பைடன் இரண்டாவது தவணையில் போட்டியிடக் கூடாது எனத் தெரிவித்திருந்தனர்.
25 வருடங்கள் அமெரிக்க கடற்படையில் கடமையாற்றிய பின்னர் ஜாக்ஸன் வெள்ளை மாளிகை மருத்துவராகப் பதவியேற்றிருந்தார். 2020 இல் ரெக்ஸாஸ் மாநிலத்தின் 13 ஆவது மாவட்டத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படிருந்தார்.