அமெரிக்க-சீன பலப்பரீட்சை | செங்டுவிலுள்ள துணைத் தூதரகத்தை மூடும்படி சீனா உத்தரவு!


வெள்ளி ஜூலை 24, 2020: சீனாவின் செங்டு நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடிவிடும்படி சீனா இன்று (வெள்ளி) அமெரிக்காவுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளது. இந்த வாரம், ஹூஸ்டன், டெக்சாஸிலுள்ள சீன துணைத் தூதரகத்தை மூடிவிடும்படி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஹூஸ்டனிலுள்ள சீன துணைத் தூதரகத்தை மூடுவதற்கு அமெரிக்கா சடுதியாகக் கொடுத்த 72 மணித்தியால கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை மீளப்பெறும்படி சீனா கேட்டிருந்தது.

“அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, சர்வதேச சட்டங்களையும், அடிப்படை சர்வதேச உறவுகள் தொடர்பான நியமங்களையும், சீன-அமெரிக்க தூதரக நியதிகளையும் மீறுகிறது. அத்தோடு, அது சீன- அமெரிக்க உறவையும் மிகவும் மோசமாகப் பாதித்திருக்கிறது” என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செங்டுவிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூடிவிடும்படி, சீனாவின் வெளிவிவகார அமைச்சு, சீநாவிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தூதரக அறிக்கை மேலும் தெரிவித்தது.கடந்த ஒரு வருடமாக, வர்த்தகம், தொழில்நுட்பம், கொறோணாவைரஸ், சீனாவின் தென்சீனக் கடலாட்சி, ஹொங் கொங் அடக்குமுறை போன்ற பல விடயங்களில், இரு நாடுகளுக்குமிடையேயான உறவில் விரிசல் விழத்தொடங்கியிருந்தது.

” கற்பனாவாதமும், திடமும் கலந்த வழிகளில் அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதையை மாற்ற வேண்டும். அதுவே எங்கள் இலக்கு” என அமெரிக்க ராஜாங்கச் செயலளர் மைக் பொம்பியோ நேற்று அறிவித்திருந்தார்.