அமெரிக்க குடியுரிமையைத் துறந்தால் பசில் பாராளுமன்றம் வரலாம் – விமல் வீரவன்ச
செப்டெம்பர் 1, 2020: கோதாபய ராஜபக்ச செய்ததைப் போல், பசில் ராஜபக்ச விரும்பினால், அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டுப் பாராளுமன்றம் வரலாம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
“19 வது திருத்தம் குழப்பமானதாக இருந்தாலும், ஜனாதிபதி பதவியும், பிரதமர் பதவியும் சகோதரர்களிடையேதான் இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
“ஆளும் கட்சியில் இருக்கும் பலர் 19 வது திருத்தத்தில் இருக்கும் குழப்பங்களை முதலில் திருத்திய பின்னரே புதிய அரசியலமைப்பை உருவாக்கலாம் என அபிப்பிராயப்படுகிறார்கள். எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரைவில், 19 திருத்தத்தில் இருக்கும் பல அம்சங்கள் நீக்கப்பட மாட்டா எனவே தெரிகிறது. அமைச்சரவை இது பற்றிக் கலந்தாலோசித்தபின் முடிவு எட்டப்படும். அதே வேளை, பசில் ராஜபக்ச விரும்பினால் கோதாபய ராஜபக்ச செய்ததுபோல் அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு அவர் எப்போதும் பாராளுமன்றத்துக்குள் வரலாம்” என அமைச்சர் வீரவன்ச தெரிவித்தார்.
19 வது திருத்தம் முற்றாக நீக்கப்படுவதற்கு காரணம் பசில் ராஜபக்சவைப் பராளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்கே என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியிருந்ததற்குப் பதிலளிக்கு முகமாகவே அமைச்சர் வீரவன்ச மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.