அமெரிக்க கரும்பட்டியலில் வசந்தா கரன்னகொட
போர்க்காலப் படுகொலைகள் காரணம்
முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய வட-மேற்கு மாகாண ஆளுனருமான வசந்த கரன்னகொட, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்க கரும்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக இராஜாங்கச் செயலாளர் அந்தொனி பிளிங்கென் அறிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து வசதிபடைத்த குடுங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் கைதுசெய்து கப்பா பெற்றதுடன் 11 பேரைக் கொலைசெய்தமைக்கு வசந்த கரன்னகொட காரணமாக இருந்தார் என இலங்கையில் நடைபெற்ற விசாரணைகள் மூலம் தெரியவந்திருந்தது. அப்படியிருந்தும் 2021 இல் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீக்கிவிட்டு அப்போதைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கரன்னகொடைவை வட-மேற்கு மாகாண ஆளுனராக நியமித்திருந்தார். இதை எதிர்த்து அப்போது பல மனித உரிமை அமைப்புகளும், பாதிக்கப்பட்டோரின் உறவினர்களும் குரலெழுப்பியிருந்தனர்.
இப்பின்னணியில் ‘வசந்த கரன்னகொட மீதான குற்றச்சாட்டுகள் மிக மோசமானவை மட்டுமல்லாது நம்பகத்தன்மையும் கொண்டவை; இக்காரணங்களுக்காக அவரோ அவரது மனைவியோ அமெரிக்காவிற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது” என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அந்தொனி பிளிங்கென் அறிவித்திருக்கிறார்.
“மனித உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவதிலிருந்து தப்பிப்பதை நிறுத்துவதும், பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது உறவினர்களும் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூர்வதும், இலங்கையில் குற்றம் புரிந்தவர்கள் அவற்றுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் அமெரிக்க அரசு தனது நிலைப்பாட்டை மீளூறுதி செய்துகொள்கிறது” என பிளிங்கெனின் அறிக்கை தெரிவிக்கிறது.