India

அமெரிக்க கனவு: நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கண்ணீர்க் கதை!

அமெரிக்க ஜனாதிபதி ட்றம்பின் தேர்தல் வாக்குறுதிக்கிணங்க முதற்கட்டமாக சட்டமீறிய 104 இந்திய குடிவரவாளர்கள் இராணுவ விமானத்தின் மூலம் இவ்வாரம் இந்தியாவுக்கு அனுப்பப் பட்டனர். நேற்று (புதன்) அம்றித்சார் வந்தடைந்த விமானம் முதலாவதாகும். இவர்களில் 33 பேர் ஹர்யானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்; 30 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மற்றும் சண்டிகாரைச் சேர்ந்தவர்கள். 19 பெண்கள், 4 வயது சிறுவன், 2 சிறுமிகள் உட்பட 13 சிறுவர்கள் ஆகியோர் இக்குழுவில் அடங்குவர்.

பஞ்சாப் மானிலத்திலுள்ள ஹோஷியார்பூர் மாவட்டத்திலுள்ள ராஹ்லி கிராமத்தைச் சேர்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹார்விந்தர் சிங். அமெரிக்காவில் வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுத் தந்து தன்னை அங்கு அனுப்பி வைப்பார் என்ற வாக்குறுதியின் பேரில் ஒரு பயண முகவருக்கு 42 இலட்சம் இந்திய ரூபாய்களைக் கொடுத்திருக்கிறார் சிங். ஆனாலும் கடைசி நிமிடத்தில் விசா கிடைக்கவில்லை எனக்கூறி கட்டார் மூலமாக பிரேசிலுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். பிரேசிலில் இருந்து விமானம் மூலம் பெரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனக் கூறப்பட்டாலும் அங்கு அப்படி ஏதும் நடைபெறவில்லை. அங்கிருந்து ரக்சிகள் மூலம் கொலம்பியாவுக்கு அனுப்பப்பட்டு இறுதியாக பனாமா வந்தடைந்தார். இங்கிருந்து கப்பல் வழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவே கூறப்பட்டது. ஆனால் அவரைக் கூட்டிச் செல்ல கப்பல் எதுவும் வரவே இல்லை. இங்கிருந்துதான் அவரது இரண்டு நாள் ‘கழுதைப் பயணம்’ ஆரம்பித்தது.


இப்போது சிங்குடன் வேறு பல அமெரிக்க கனவு வாசிகளும் கலந்து கொண்டனர். கரடு முரடான மலைப் பாதைகளினூடு நடக்க வைக்கப்பட்டு இறுதியில் ஒரு சிறிய படகு மூலம் ஆழமான கடல் பதையால் மெக்சிக்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நான்கு மணித்தியாலப் பயணத்தின் போது படகு கவிழ்ந்ததில் ஒருவர் மரணமானார். இன்னுமொருவர் பனாமாக் காடுகளில் இறந்து போனார். கடுமையான இப்பயணத்தின்போது அவர்களுக்கு ஒரு சொற்ப அளவில் சோறு வழங்கப்பட்டது.

இவரைப் போலவே இன்னுமொரு பஞ்சாபியர், தரபூர் கிராமத்தைச் சேர்ந்த சுக்பால் சிங். இவரது பயணம் 15 மணித்தியாலங்கள் கடலிலும் பள்ளத்தாக்குகளுடனான மலைப் பிரதேசத்தினூடு 40-45 கி.மீ. நடையுமாக இருந்தது. இப்பயணத்தின் போது யாராவது காயப்பட்டால் அவரைக் கைவிட்டுப் போகும்படி கட்டளை. “நாங்கள் போகும் பாதையில் இறந்த பல உடல்களைக் கண்டோம்” என்கிறார் சுக்பால். ஆனால் மெக்சிக்கோ எல்லையைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு முன்னர் சுபால் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுவிட்டார். 14 நாட்கள் வெளிச்சமே இல்லாத அறையில் அடைக்கப்பட்டார். குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் என ஆயிரக் கணக்கான பஞ்சாபிகளை தான் அங்கு கண்டதாகவும் இவர்கள் அனைவரும் இருட்டறைகளிலேயே அடைக்கப்பட்டிருந்ததாகவும் சுக்பால் கூறுகிறார்.

இவ்விமானத்தில் அனுப்பப்பட்ட இன்னுமொருவர் ஜஸ்பால் சிங். அமெரிக்காவிலிருந்து புறப்படும்போதே தனது கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டது எனவும் அம்றித்சார் விமான நிலையத்தில் இறங்கிய பின்னரே அவை அகற்றப்பட்டன எனவும் கூறுகிறார். அமெரிக்காவுக்கு சட்ட ரீதியாகத் தன்னைக் கொண்டுபோய் விடுவதாக ஒரு பயண முகவர் 30 லட்சம் ரூபாய்களை வாங்கியதாகவும் ஆனால் பிரேசில் நாட்டில் 6 மாதங்கள் தங்க விடப்பட்டு அமெரிக்காவிற்குள் நுழையும் போது ஜனவரி 24 அன்று எல்லைக் காவலர்களால் கைதுசெய்யப்பட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

கனுபாய் பட்டேல் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரது மகளும் இவ்விமானத்தின் பயணிகளில் ஒருவர். ஒரு மாதத்திற்கு முன்னர் அவள் நண்பிகளுடன் விடுமுறைக்காக ஐரோப்பா சென்றிருந்தாளெனவும் எப்படி அமெரிக்கா சென்றாள் எனத் தனக்குத் தெரியவில்லை; கடைசியாக அவளுடன் பேசியது ஜனவரி 14 இல் என்றும் கூறுகிறார்.

நாடு கடத்தப்பட்டவர்களில் பலரது குடும்பங்கள் பெருந்தொகையான பணத்தைக் கடன் பெற்று தமது பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அனுப்பியிருப்பதாகக் கூறுகிறார்கள். பயண முகவர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர்கள் இப்போது வலியுறுத்துகிறார்கள். பல பெற்றோர்கள் வீடுகளை அடமானம் வைத்து பெருந்தொகை பணத்தை முகவர்களுக்குக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.

மேலும் பல இந்தியர்களை சுமந்துகொண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் இந்தியாவுக்குப் பறக்கத் தயாராகவுள்ளன என அறியப்படுகிறது. (Source & Pic. Credits: NDTV)