EconomyUS & Canada

அமெரிக்க – கனடிய தீர்வைப் போர்: ஒரு அலசல்

ட்றம்பின் வருகையுடன் ஏற்கெனவே ஓரளவு சமநிலையிலிருந்த உலக வர்த்தக, பொருளாதார செயற்பாடுகள் கொதி நிலையை அண்மித்து வருகின்றன. தம்மைப் பலம் வாய்ந்த நாடுகளெனக் கருதும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகியன தமது பங்கிற்கு தமது தீர்வைப் போர்களை முடுக்கி விட்டிருக்கின்றன. இந்நடவடிக்கைகளால் பாதிக்கப்படப் போவது உலகப் பொதுமக்கள் என்பதை இந்நாடுகள் கவனத்தில் கொள்லவில்லை. இறுதியில் இக்கொதிநிலை எல்லை மீறும்போது இதற்குக் காரணமானவர்கள் ஆவியாகிப் போவது நிச்சயம். அதைத் துரிதப்படுத்துவதோ அல்லது தணிப்பதோ பொதுமக்களாகைய எமது கைகளில் தான் இருக்கிறது. இக்காரணத்திற்காக இத் தீர்வை பற்றிய ஒரு சிறு வகுப்பு.

நாடுகளின் கஜானாக்களை நிரப்புவதற்கென அறிமுகப்படுத்தப்பட்டது தீர்வை. அதற்கு முன்னர் சிற்றரசுகளுக்கும், பாளையக்காரர்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கவென ஆதிக்க அரசுகளினால் வரி அறவிடப்பட்டதுமுண்டு. இதையே தான் நமது தற்போதைய அமெரிக்க சக்கரவர்த்தியும் மேற்கொண்டு சுய இன்பம் காண முயல்கிறார் போலத் தெரிகிறது. ‘அமெரிக்கா முதல்’ வாதக் கத்தியைச் சுழற்றி தனது மக்கள் மீது திணிக்கப்படும் வருமான வரியை, சரியாகவோ தப்பாகவோ, வெட்டிச் சாய்க்கிறேன் என வந்து குதித்திருக்கும் சக்கரவர்த்தி ட்றம்பருக்கு அவரது வாக்காளர் சேனை ஆதரவளித்து வருவது அவருக்கு மித மிஞ்சிய சந்தோஷம். கனடிய தேசியக் கொடிகளை விசுக்கிக் கொண்டு எப்படி நமது மகாசனங்கள் “நாங்கள் எவ்விதமான துன்பங்களையும் அனுபவிக்கத் தயார்” எனச் சூழுரைத்து வருகிறார்களோ அதே நிலைமைதான் (இப்போதைக்கு) அமெரிக்காவிலும். சக்கரவர்த்தி ட்றம்பரின் இந்த நடவடிக்கையால் 1930 களில் இருந்தது போல அமெரிக்காவில் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு என்பதைச் சக்கரவர்த்தியே ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் நம் கனடிய மகாசனங்களுக்கு எப்படியான பாதிப்புகள் ஏற்படக்கூடுமென்பது உரத்து யோசிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.


தீர்வை என்பது இறக்குமதி செய்யப்படும் பண்டத்தின் மீது விதிக்கப்படும் வரி. அமெரிக்காவில் வரி அறிமுகப்படுத்தப்பட்டது 18 ஆம் நூற்றாண்டில். 1913 இல் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமைச் சாசனத்தின் 16 ஆவது திருத்தம், இறக்குமதித் தீர்வை (tariff) மூலம் அரச கஜானாவுக்கான நிரந்த வருமானத்தைப் பெற்றுத்தர வழிசெய்து தந்தது. இதை அது இரண்டு வழிகளில் பெற்றது. ஒன்று: இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் எடை / அலகு வழி. உதாரணத்திற்கு ஒரு தொன் அலுமினியம் இறக்குமதி செய்யப்படும் போது $300 ஐ தீர்வையாகச் செலுத்த வேண்டும். இரண்டு: இறக்குமதி செய்யப்படும் பண்டத்தின் மொத்த பெறுமதியின் ஒரு குறிப்பிட்ட வீதத்தைத் தீர்வையாகச் செலுத்த வேண்டும். இம்முறையைப் பாவிக்கப்போவதாகவே ட்றம்ப் இப்போது அறிவித்திருக்கிறார். உதாரணத்திற்கு கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் மொத்த பெறுமதியின் 25% த்தை ஏற்றுமதி செய்பவர் அமெரிக்காவிற்குச் செலுத்த வேண்டும். ஆனாலும் ட்றம்ப் போன்றவர்கள் இத் தீர்வையைத் தமது சொந்த நாட்டின் உற்பத்தி ஆலைகளைப் பாதுகாக்கும் நோக்குடனேயே பாவிக்க முற்படுகிறார்கள். இதன் மூலம் தனது சொந்த நாடுகளின் உற்பத்தி, ஏற்றுமதி, வேலை வாய்ப்பு ஆகியன முன்னேற்றம் கண்டு அதன் மூலம் தமது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற அரசியல் நோக்கம் இரண்டாந்தரத் தேவையாகவும் இருக்கக்கூடும்.

அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது ட்றம்ப் செய்வது அமெரிக்காவிற்கு நல்லது தான். ஆனால் அதை முறையாகக் கல்ந்து ஆலோசித்து செய்ய முடியாமை அவரது குணாதிசயம். அவருடைய பல எதிர்பாராத நடவடிக்கைகள் சமநிலையிலிருக்கும் இதர வர்த்தகச் செயற்பாடுகளைப் பாதிக்கப் போகிறது என நிபுணர்கள் எச்சரித்தாலும் அவர் அவர்களைக் கணக்கெடுப்பவராகத் தெரியவில்லை.

இறக்குமதித் தீர்வை என்பது அதில் சம்பந்தப்படும் நாடுகளின் நுகர்வோர் சனத்தொகையில் நேரடியாகத் தங்கியுள்ளது. உதாரணத்திற்கு 35 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட கானா உலகின் முதல்தர கொக்கோ ஏற்றுமதி நாடு. அதே வேளை 18 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நெதெர்லாந்து உலகின் முதல் தர கொக்கோ இறக்குமதி நாடு. இதைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த கொக்கோ வெண்ணையை அது தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. நெதெர்லாந்தின் சீதோஷ்ண நிலை கொக்கோ பயிர்ச்செய்கைக்கு உகந்ததல்லவாதலால் தனது கொக்கோ வெண்ணை உற்பத்திக்கு அது கானாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை. தற்போது பல நெதர்லாந்து விவசாயிகள் பசுமைக் கூடாரங்களில் கொக்கோவை வளர்க்க ஆரம்பித்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்காக கானாவின் கொக்கோ தூள் இறக்குமதிக்கு (கொக்கோ காய்களுக்கு 0%) நெதர்லாந்து 8% தீர்வையை அறவிடுகிறது. இதனால் சொக்கொலேட் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளூர் உற்பத்திகளை மலிவாக வாங்கக்கூடியதாகவுள்ளது. இதனால் ஊக்கம் பெற்ற விவசாயிகள் மென் மேலும் கொக்கோ மரப் பயிற்செய்கைகளை மேற்கொள்கிறார்கள். கானாவுக்கும் நெதெர்லாந்திற்கும் தீர்வைப் போர் ஆரம்பித்து நெதர்லாந்து தனது இறக்குமதித் தீர்வையைக் கணிசமாக அதிகரிக்குமானால் டச்சுக்காரர்கள் மட்டுமல்ல உலக சொக்லேட் பிரியர்களும் வருந்தவேண்டி ஏற்படும்.

மறுபக்கத்தில் கானா ஒரு பாரிய சனத்தொகையுள்ள நாடாக இருந்து அதன் கொக்கோ உற்பத்தி பெருகுமாயின் தனது ஏற்றுமதிப் பலத்தைப் பாவித்து கொக்கோவின் விலையைக் குறைக்குமானால் கானிய விவசாயிகள் மட்டுமல்ல டச்சு விவசாயிகளும் தமது உற்பத்திகளுக்கு உகந்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே பலர் இத்தொழில்களை விட்டு ஒதுங்கி விடுவர். இந்நாடுகளின் பொருளாதரங்களும் பாதிக்கப்படும்.

அதே வேளை கனடா – அமெரிக்கா தீர்வைப் போரில் கனடாவின் சனத்தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருப்பதால் ட்றம்பின் தீர்வை அதிகரிப்பினால் ஏற்படும் விலை அதிகரிப்பை அமெரிக்க மக்கள் தான் தமது தலைகளிற் சுமக்க வேண்டி ஏற்படும். உதாரணத்திற்கு அமெரிக்காவின் வருடாந்த அலுமினியத் தேவை 5 மில்லியன் மெற்றிக் தொன்கள். இதில் அமெரிக்க உற்பத்தியான 678,000 மெ.தொ. போக மீதியில் 3.3 மில்லியன் மெ.தொன்களை கனடா ஏற்றுமதி செய்கிறது. ஏற்கெனவே பற்றாக்குறை உள்ள நிலையில் நாளை (புதன்) கனடிய அலுமினிய ஏற்றுமதி மீது 25-50% தீர்வையை ட்றம்ப் அறிவிக்கப்போவதாக மிரட்டுகிறார். இதனால் பாதிக்கப்படப் போவது அமெரிக்க நுகர்வோர் என்பதை அவர் மறந்து விடுகிறார். இங்கு கனடிய பிரதமரது குரல் ஓங்கி ஒலிப்பதற்கான நியாயமிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் கனடாவின் பிரதான அலுமினிய உற்பத்தி ஆலை ஒரு அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஏற்றுமதிக்கே ட்றம்ப் 50% தீர்வையை அறிவிக்கப்போகிறார்.

இத் தீர்வைப் போரில் ஒன்ராறியோ முதல்வர் குழுமாடு போல் முன்னணியில் நிற்கிறார். அவரது கட்டுப்பாட்டிலுள்ள மதுக்கடைகளிலிருந்து (LCBO) அமெரிக்க மதுபானங்களை அகற்ற உத்தரவிட்டதன் மூலம் அமெரிக்க இறக்குமதிகளுக்கு தடங்கல் விளைவித்து விட்டார். அதே போல மின்சார வழங்கல் ஆகியவற்றின் ஏற்றுமதித் தீர்வையை அதிகரித்ததன் மூலம் நாளொன்றுக்கு $400,000 வருமான அதிகரிப்பைச் செய்திருக்கிறார். இவற்றை மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தால் இதர விலையுயர்வுகளுக்கு நிவாரணம் வழங்க முடியும்.

மொத்தத்தில் இத் தீர்வைப் போர் சில நாடுகள் தமது வருமானத்தையோ அல்லது உள்ளூர் உற்பத்தியையோ அதிகரிக்கச் செய்யும் அதே வேளை சில நாடுகளில் பாவனையாளர்கள் சில பண்டங்களை ஒதுக்கிவிடுவதன் மூலம் அப்பண்டங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பொருளாதார பலம் குன்றச் செய்யவும் காரணமாக அமையும். உதாரணத்திற்கு, கனடிய அலுமிய உற்பத்தி தனியே அமெரிக்க சந்தைகளில் தங்கியிருப்பின் உற்பத்தி திறன் நலிவடையும்; அமெரிக்க நுகர்வோர் அலுமினிய உற்பத்திகளுக்கு கணிசமான விலை கொடுத்து வாங்க நேரிட்டால் அங்கு பணவீக்கம் அதிகரிக்கும். இதில் யார் சாமர்த்தியமாக இயங்குகிறார்களோ அவர்களுக்கே வெற்றி. 340 மில்லியன் சனத்தொகை வைத்திருக்கும் அமெரிக்காவை, 40 மில்லியன் சனத்தொகையைக் கொண்டிருக்கும் கனடாவின் சனத்தொகையுடன் ஒப்பிடும்போது அமெரிக்க இயந்திரம் நின்றுபோனாலும் கொஞ்ச் நேரம் ஓடித் தான் நிற்கும் (தாங்குதிறன் (inertia) ). கனடாவின் இயந்திரம் சடுதியாக நிற்கும். முயற்சி திருவினையாக்கட்டும். (Image Credit: Jonathan Cooper/Unsplash)