HealthWorld

அமெரிக்க கடற்படைக் கப்பலில் 100 பேருக்கு கோவிட்-19 தொற்று

உதவிக்காகச் கெஞ்சும் கப்பலின் தளபதி

குவாம் நாட்டில் தரித்துள்ள அமெரிக்க கடற்படைக் கப்பலான USS தியோடோர் ரூசெவெல்ட்டிலுள்ள 100 மாலுமிகளுக்கு கோவிட்-19 நோய் தொற்றியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாலுமிகளுக்கு உதவி வழங்கும்படி கோரி இவ் விமானம் தாங்கிக் கப்பலின் தளபதி அமெரிக்க கடற்படைத் திணைக்களத்துக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக சான் பிரான்சிஸ்கோ குறோணிக்கிள் செய்தி வெளியிட்டுள்ளது.

கப்பலின் தளபதி பிறெட் குறோசியேர் கடற்படைக்கு எழுதிய அக் கடிதத்தில், கப்பலில் இருக்கும் மாலுமிகள் இடப்பற்றாக்குறை காரணமாக, குளியல், படுக்கை, சாப்பாட்டு இடங்களெல்லாம் பகிரப்படுவனவாதலால் சமூக இடைவெளிப்படுத்தலைச் செய்ய முடியாதுள்ளதென்றும் அவர் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நோய்ப் பரவல் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாங்கள் போர் புரிந்துகொண்டிருக்கவில்லை. மாலுமிகள் பிரயோசனமற்ற வகையில் இறந்துபோகத் தேவையில்லை. இப்போது நாம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் எங்களது அரும் பெரும் சொத்துக்களாகிய மாலுமிகளை இழந்துபோக நேரிடலாம்” என அவர் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இறக்கிவிடப்பட்ட மாலுமிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் தங்குமிடம் தனிமைப்படுத்தலுக்கோ அல்லது சமூக இடைவெளிப்படுத்தலுக்கோ ஏற்றதல்ல. அது ஒரு விளையாட்டுப் பயிற்சி மண்டபம். இங்கு மாலுமிகளைப் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தி வைக்க முடியாது. கப்பலைவிடக் கொஞ்சம் உயர்வானது என்றாலும் இது எமது மாலுமிகளுக்குத் திருப்தியற்றது” எனக் குறோசியெர் தெரிவித்துள்ளார்.

குறோசியெரின் கடிதத்துக்குப் பதிலளித்த உதவி கடற்படைச் செயலாளர் தோமஸ் மொட்லி, “தற்போது குவாமில் எமது கடற்படை மாலுமிகளுக்கு வழங்குவதற்கான வசதிகள் குவாமில் இல்லை. ஏதாவது ஹோட்டல் வசதிகள் கிடைக்குமா என நாம் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்” என சி.என்.என். செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.